சமஷ்டி தீர்வால் நாடு பிளவுபடாது! அதிகாரப்பகிர்வுக்கு அலிசப்ரி பச்சைக்கொடி!!

“அதிகாரப்பகிர்வுமூலம் நாடு பிளவுபடும் எனக் கூறப்படுவது போலியான மாயையாகும். அதிகாரப்பகிர்வு என்பது அவசியம். அதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட வேண்டும்.” -என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

இலங்கையைவிட சிறிய நாடுதான் பெல்ஜியம். அங்கு சிறந்த சமஷ்டி ஆட்சி கட்டமைப்பு உள்ளது. ஆக அதிகாரப்பகிர்வு என்பது அழிவைத்தேடி தராது. ஒரு நாட்டுக்குள் சமஷ்டி கோருவது தனி நாடு கோருவது அல்ல என உயர்நீதிமன்றம்கூட தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர், அதிகாரப்பகிர்வு தொடர்பான தமிழர் தரப்பு கோரிக்கை நியாயமானது எனவும் சுட்டிக்காட்டினார்.

“ தாம் தனிநாடு கோரவில்லை எனவும், ஒரு நாட்டுக்குள் அதிகாரப்பகிர்வையே கோருகின்றோம் எனவும் தமிழ்த் தலைவர்கள் கூறியுள்ளனர். சமஷ்டி முறைமையிலேயே அதிகாரப்பகிர்வு அவசியம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதிகாரப்பகிர்வு தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிடுவதில் எவ்வித தவறும் கிடையாது. அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும்.

அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும், அதிகாரங்களைப் பகிர்வது நாட்டை பிரிப்பது எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும்.” எனவும் அமைச்சர் அலிசப்ரி குறிப்பிட்டார்.

“ அண்மையில் ஐரோப்பாவுக்கு சென்றிருந்தேன். பெல்ஜியம் என்பது இலங்கையைவிட சிறிய நாடாகும். இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு எதற்கு அதிகாரப்பகிர்வு என சிலர் கேட்கின்றனர். பெல்ஜியத்தின் தனியான 10 மாகாணங்கள் உள்ளன. அவர்கள் இணைந்து சிறந்த சமஷ்டி முறைமையை உருவாக்கியுள்ளனர். ஐக்கியமாகவும், சமாதானத்துடனும் வாழ்கின்றனர்.

எனவே, கட்சி பேதமின்றி அனைவரும் வந்து அதிகாரப்பகிர்வு தொடர்பில் தமது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும். அதிகாரப்பகிர்வு என்பது நாட்டை பிரிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை என சிலர் கூறுகின்றனர். அவ்வாறு நடக்காது. இனப்பிரச்சினை விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் அன்று முதல் சந்தர்ப்பவாத அரசியலையே நடத்துகின்றன. நாம் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும். அனைவரும் இலங்கையராக கருதப்பட்டு இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

30, 40 வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்ற , இலங்கையுடன் தொடர்பு இல்லாத பிரிவினைவாத சிந்தனையை தலையில் வைத்துள்ள டயஸ்போராக்களில் சிலர் இன்னும் தனிநாடு பற்றி கதைக்கின்றனர், இவர்களின் கருத்தால் நாட்டுக்குள் தேவையற்ற பிரச்சினை எழலாம். அவ்வாறானவர்களை நாம் மறந்துவிட வேண்டும். பிரச்சினை வராது. ஒரு நாட்டுக்குள் சமஷ்டியை கோருவது தனி நாடு கோருவது அல்ல என உயர்நீதிமன்றம்கூட தெளிவான தீர்ப்பை வழங்கி இருந்தது. சிங்கள நீதியரசர்களே இந்த தீர்ப்பை வழங்கி இருந்தனர்.

எனவே , அதிகாரப்பகிர்வு தொடர்பில் முன்வைக்கப்படும் பொய்யில் இருந்து நாம் விடுபட வேண்டும்.” – எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.