PHI அதிகாரி படுகொலை: பின்னணி என்ன?

இலங்கையில் பாதாள குழுக்களால் அரங்கேற்றப்படும் குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. மக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டுவருகின்றனர். நாட்டில் குற்ற அலை வீசும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே எல்பிட்டியவில் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் பொருளாளர் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமும் அரங்கேறியுள்ளது. பொரளை மயானத்தில் பிரபல வர்த்தகரான தினேஷ் சாப்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கலாம். அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது மரண பரிசோதனையில் உறுதியாகியுள்ளபோதிலும் கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தோல்வி கண்டுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்தில் பொது சுகாதார பரிசோதகரின் மரணம் தொடர்பில் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

“நான் இன்று முதன் முதலில் பாடசாலை செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்தேன். அப்பா என்னை தயார்படுத்திக்கொண்டிருந்தார். திடீரென நபரொருவர் வீட்டு கதவை திறந்துகொண்டு உள்நுழைந்து, அப்பாவை தள்ளிவிட்டு அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். தந்தை கத்தியவாறு முன்பக்க கதவை நோக்கி ஓடினார். இதன்போது மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. நானும், பாட்டியும் கதறினோம்.” – சுட்டு கொலை செய்யபபட்ட இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் திலீப ரொஷான் குமாரவின் குட்டி மகனின் கூற்றே இது. சமூகவலைத்தளங்களிலும் இது தொடர்பான கூற்று வைரலானது. மகன் முதன்முறையாக பாடசாலையில் காலடி வைப்பதற்குள் தந்தையின் உயிர்போன சம்பவம் மனிதத்தை நேசிப்பவர்களை நிலைகுலையவைத்தது.

பொலிஸார் கூறுவது என்ன?

காலை 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ள இருவர், பிஎச்ஐ அதிகாரியின் வீட்டுக்கு சென்று, ரொஷான் , ரொஷான் என அழைத்துள்ளனர். இதன்போது வெளியே வந்த அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்த முற்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர் வீட்டுக்குள் வந்து கதவை மூடியுள்ளார். இதனால் துப்பாக்கிச்சூடு கதவுமீது பட்டுள்ளது. அதன்பின்னர் வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் ரொஷானை கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். முதலாம் தரத்தில் கல்வி பயில தயாரான தனது மகனை அழைத்துசெல்வதற்கு தயாரான சற்று நேரத்துக்கு முன்னரே இக்கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

இக்கொலை சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய குற்றப்பிரிவு, காலி குற்றத்தடுப்பு பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். மேலும், இந்த கொலை ஒப்பந்த கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இக்கட்டுரை எழுதப்பட்ட மார்ச் 1 ஆம் திகதி காலை வரை, கொலை பற்றிய சரியான உண்மைகள் வெளிவரவில்லை. யுக்திய தேடுதல் வேட்டை இடம்பெறும்வேளையில், டுபாயில் உள்ள பாதாள குழு உறுப்பினர்கள்கூட கைது செய்யப்படும் நிலையில் இப்படியான கொலைகள் நடப்பது எப்படி?

முன்பகை இருந்ததா?

பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனவிடம் இந்த கேள்வி எழுப்பட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

“ இந்த மரணத்துக்கான காரணம் எமக்கு சரியாக தெரியாது. பொலிஸாரிடம் வினவியபோது, இன்னும் எதுவும் தெரியவரவில்லை என அவர்களும் கூறுகின்றனர். எமக்கு தெரிந்தமட்டில் அவருக்கு பகையாளர்கள் இருக்கவில்லை. வழக்குகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவார். காலி பகுதியில் வழக்குகளை கையாண்டார். அவர் கரந்தெனியவுக்கு வருவதற்கு முன்னர் எல்பிட்டிய எம்.ஓ.எச்சில் வேலை செய்தார். பொது சுகாதார பரிசோதகர்கள் என்ற வகையில் இச்சம்பவம் எம்மையும் எமது தொழில் தொடர்பில் அச்சம் கொள்ள வைத்துள்ளது. எனவே, இச்சம்பவம் தொடர்பில் விரைவில் உண்மையை கண்டறிந்து, அது தொடர்பில் நாட்டுக்கு தெரியப்படுத்துமாறு நாம் அரசை வலியுறுத்துகின்றோம். ஏனெனில் எவ்வித அச்சமும் இன்றி தொழிலை முன்னெடுப்பதற்கு உண்மை கண்டறிதல் என்பது பிஎச்ஐ அதிகாரிகளுக்கு மிக முக்கியமாகும்.”

படுகொலை செய்யப்படட ரொஷான் குமாரவுக்கு எதிராளிகள் எவரும் இருக்கவில்லை என அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர் . கரந்தெனிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் அவருடன் பணியாற்றிய சகாக்களும் இதையே கூறுகின்றனர். எல்பிட்டிய மற்றும் கரந்தெனிய பிஎச்ஐ அதிகாரிகளும், எதிரிகள் எவரும் இருக்கவில்லை என்றே கூறுகின்றனர்.

“ உங்கள் குழு அண்மையில் ஏதேனும் சர்ச்சைக்குரிய சுற்றிவளைப்பை நடத்தியதா.” என அவருடன் வேலை செய்த பிஎச்ஐ அதிகாரிகளிடம் வினவியபோது, இல்லை என்ற பதிலே வந்தது.
உண்மையில் திலீப ரொஷான் குமார கொலை செய்யப்பட்டது ஏன்? ஒப்பந்த அடிப்படையிலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதெனில் இந்த கொலை ஒப்பந்தம் வழங்கப்படுவதற்கான காரணம் என்ன? இவை அனைத்தும் இன்னும் மர்மமாகவே உள்ளது. லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தது யார்? பிரகீத் எக்னெலிகொடவை காணாமல் ஆக்கியது யார்? போன்ற சம்பவங்களின்போது ஏதோவொரு வகையில் விடையை தேடிய பொலிஸாருக்கு, இந்த சம்பவம் தொடர்பில் உண்மையை கண்டறிவது கடினமாக இருக்காது.

கொலைக்கான காரணம் என்னவாக இருக்கலாம்?

கொலை செய்யப்பட்ட திலீப ரொஷான் குமார, கடைசியாக ‘டோக் வித் சமுதித்த’ என்ற யூடியூப் ஊடகத்துக்கே நேர்காணல் வழங்கி இருந்தார். சுமார் 7 மாதங்களுக்கு முன்னர் இந்த நேர்காணலை அதிகமானோர் பார்த்திருந்தனர். வைத்தியர் ஒருவருடன் வந்த ரொஷான், சிவப்பு சீனி, சிவப்பு அரிசி, மிளகாய் தூள், சோஸ் என்பவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ‘டை’ பற்றியே பேசி இருந்தார். இந்த நேர்காணல் இக்கொலைக்கு காரணமாக இருந்திருக்குமா என ரொஷான் குமாரவின் நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

தென் மாகாணத்தில் பொது சுகாதார பரிசோதகர்களால் தொடுக்கப்படும் வழக்குகளை இவர் நிர்வகிப்பதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள இவ்வாறான சந்தர்ப்பங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி ஏனைய பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு பெரிதும் உதவியவர் திலிப ரொஷான் குமார. அவர் பொது சுகாதார பரிசோதனை சட்டம் மற்றும் உணவு சட்டம் தொடர்பில் தேர்ச்சி பெற்றிருந்தார். பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி பட்டறைகளில் இவர் வளவாளராகவும் பங்குபற்றி வந்துள்ளார். இந்த கொலை சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர்கூட 10 வழங்குகளை கையாண்டுவந்துள்ளார்.
இந்த விடயங்களை எல்லாம் உன்னிப்பாக ஆராய்ந்தால், ரொஷானை கொலை செய்தது யார் என கண்டுபிடிப்பது கடினமாக இருக்காது. அதேபோல இது ஒப்பந்த கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அது உண்மை என்றால், அந்த கொலை ஒப்பந்தத்தை வழங்கியது யார்? இதற்கான காரணம் என்ன?என்பதையும் கண்டுபிடிப்பது கடினமாக அமையாது.