தங்காலை, பெலியத்த பகுதியில் கடையொன்றுக்கு முன்பாக கடந்த 22 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகினர். நால்வர் சம்பவ இடத்திலும், மேலும் ஒருவர் தங்காலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழயிலும் உயிரிழந்துள்ளனர்.
அபே ஜன பலவேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தங்காலை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையொன்றுக்காக வெள்ளை நிற டிப்பென்டர் ரக வாகனத்தில் இவர்கள் பயணித்துள்ளனர், அவர்களை பின்தொடர்ந்து வந்த ஜீப் வண்டியில் இருந்தவர்களே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர்.
யுக்திய என்ற பெயரில் பாதாள குழுக்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கை (பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுவதுபோல்) நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையில் சிகாகோ பாணியில் துப்பாக்கிச்சூடு இடம்பெறுவது எப்படி? அது பற்றி சிந்திக்க வேண்டும்.
உயிரிழந்தவர்கள் படுகொலை மற்றும் பாதாளகுழு செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டு உண்மை என்றாலும், எவருக்கும் இப்படியான மரணம் நிகழக்கூடாது. எவரேனும் குற்றம் இழைத்திருந்தால் அவர்களுக்கு எதிரான தண்டனையை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.
பாதாள குழு தலைவர்களும், உறுப்பினர்களுமே கொல்லப்பட்டுள்ளனர் என பொலிஸார் கூறுகின்றனர், அபே ஜன பலவேகய கட்சியின் தலைவர் சமன் பெரேராமீது பார்வையை செலுத்துவோம்.
கடந்த பொதுத்தேர்தலில் அபே ஜன பலவேகய கட்சியும் போட்டியிட்டது. அக்கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்றது. தேசியப் பட்டியல் ஊடாக யார் நாடாளுமன்றம் செல்வது என்பது குறித்து கட்சிக்குள் கடும் மோதல் ஏற்பட்டது. இதற்கிடையில் அக்கட்சியின் செயலாளராக இருந்த தேரர் திடீரென தலைமறைவான சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனக்கு அச்சுறுத்தல் உள்ளது என அவர் கூறினார். இது தொடர்பில் பொலிஸின் முறைப்பாடு செய்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில் ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பலகோணங்களில் சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களை நீக்க வேண்டியது பொலிஸாரின் பொறுப்பாகும். ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை வலியுறுத்தியுள்ளது.
அபே ஜன பலவேகய கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியலை கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே, சுட்டுக்கொல்லப்பட்டுள்ள கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் மற்றும் செயலாளரான தேரரும் இருந்துள்ளனர்.
எனினும், பிரச்சினை நீடித்தது. இறுதியில் உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இதில் தலையிட்டனர் எனக் கூறப்பட்டது. மேற்படி சம்பவங்கள் தொடர்பில் மீள் சிந்திக்க வேண்டிய சிந்தனையை பெலியத்த படுகொலை தூண்டுகின்றது.
அதேவேளை, மாத்தறை – தெலிஜ்ஜவில பகுதியில் இனந்தெரியாத நபர்கள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்துக்குள் வைத்தே அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
தில்ஷான் மதுசங்க என்பவரே குறித்த நிலையத்தின் உரிமையாளர், சம்பவத்தின்போது அவர் கடைக்குள் இருக்கவில்லை, அவர் என நினைத்தே கடைக்குள் இருந்த இளைஞர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்த இளைஞர் தொழில் வாய்ப்புக்காக தென்கொரியா நோக்கி செல்ல தயாராகி இருந்தவர், எனினும், குறிதவறி அவர் கொல்லப்பட்டுள்ளார்.
தன்னை கொலை செய்யவே ஆயுததாரிகள் வந்துள்ளனர் என கடை உரிமையாளரான தில்ஷான் மதுசங்க தெரிவித்துள்ளார். குறித்த இளைஞனை கொன்றது யார்? தில்ஷானின் கூற்றின்படி அவருக்கு பொலிஸாருடன் மாத்திரமே முறுகல் நிலை இருந்துள்ளது. பொலிஸாரால் இந்த செயல் செய்யப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இது பாரதூரமான குற்றச்சாட்டாகும். இந்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சிஐடியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
2020 ஆகஸ்ட் 24 அன்று மாலிம்பட காவல்துறை அதிகாரிகள் தில்ஷானை, தெலிஜ்ஜவில பகுதியில் கைது செய்துள்ளனர், தெலிஜ்ஜவில பிரதேசத்தில் உள்ள மதுபானக் கடையொன்றில் பணம் திருடப்பட்ட சம்பவமொன்று தொடர்பிலேயே தில்ஷான் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பின்னர் அவரை பொலிஸார் சித்திரவதைகளுக்கு உட்படுத்தியுள்ளதுடன், கடுமையாக தாக்கியும் உள்ளனர். இது தொடர்பில் அவர், மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு போன்ற பல பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களில் முறைப்பாடு செய்துள்ளார். இதனால் பொலிஸாருக்கும், அவருக்கும் இடையில் முறுகல்நிலை இருந்து வந்துள்ளது.
இதனால்தான் இந்த கொலை தொடர்பில் அவர் பொலிஸாரை நோக்கி விரல் நீட்டுகின்றார்.
மேற்படி இரு கொலைகளுடன் காவல்துறையினர் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்விரு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் வெளிப்படையான விசாரணை அவசியம். யுக்திய நடவடிக்கை இடம்பெறும் சூழ்நிலையிலேயே கொலைகளும் இடம்பெறுகின்றன. எனவே, இந்நிலைமை குறித்தும் ஜனாதிபதியும், நாடாளுமன்றமும் கவனம் செலுத்த வேண்டும்.