பிரிட்டனை தளமாகக்கொண்டு இயங்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் , சில பௌத்த தேரர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டமொன்றையடுத்து ‘இமயமலைப் பிரகடனம்’ என பெயரிடப்பட்ட பிரகடனத்துக்கு தமிழர் தரப்பு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
இலங்கையில் பல்லினத்தன்மையை ஏற்படுத்தி அதன் மூலம் அனைத்துச் சமூகங்களின் நல்வாழ்விற்கு இந்த தீர்மானம் வழிவகுக்கும் என மேற்படி தீர்மானத்தின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். எனினும், அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியான நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களும், அமைப்புகளும் இந்த பிரகடனத்தை நிராகரித்துள்ளன.
‘இமயமலை’ பிரகடனம் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மொட்டு கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பிரகடனம் மோசடியானது எனவும் , அது தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் தேவைகளுக்கு எதிரானது என்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து அது ஏற்புடையதல்ல என சுட்டிக்காட்டியுள்ளனர்.
” இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் பௌத்த குருமார்களே அரசியல் வரலாற்றை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர், அதுவே தமிழ் மற்றும் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு இடையே, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஏற்பட்ட ஒவ்வொரு ஒப்பந்தமும் இரத்து செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது” என மிகவும் காட்டமாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் அந்த ஆறு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
பிரித்தானியத் தமிழர் பேரவை, பிரான்ஸிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பு மையம், ஐரிஷ் தமிழர் பேரவை, தென்னாபிரிக்காவின் சமாதனம் மற்றும் நீதிக்கான ஒற்றுமைக் குழு, சுவிஸ் தமிழ் நடவடிக்கைக் குழு மற்றும் மொரீஷியஸிலுள்ள இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் இன மோதல்களுக்கான வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
“இலங்கையில் தொடர்ச்சியாக வரலாற்று ரீதியாக தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட இனைப்படுகொலையில் அரசின் பங்கிருந்துள்ளது என்பதற்கு உறுதியாக ஆதாரங்கள் உள்ளன. யார் ஆட்சியில் இருந்தாலும் ஒரே இன, ஒரே மொழி மற்றும் சிங்கள-பௌத்த நாடு என்கிற நோக்கம் முன்னெடுக்கப்படுவதிலேயே அவர்கள் குறியாக இருந்துள்ளனர்”.
இந்த கூட்டம் தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் எண்ணத்தில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டது எனவும், இந்த ’பிரகடனம்’ தொடர்பிலான முழு நடவடிக்கையும் எவ்விதமான கலந்துரையாடலும் இன்றி இரகசியமாகச் செய்யப்பட்டது எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
”இமயமலைப் பிரகடனம்” போன்று எந்தவொரு தீர்மானமும் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடல் மூலமே செய்யபப்ட்டிருக்க வேண்டும், மேலும் கூட்டத்திற்கு முன்னதாக அது பொதுவெளியில் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை” எனவும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
போருக்கு பின்னரான காலத்தில், இதே போன்று அனைத்து அரசுகளுடன் உலகத் தமிழர் பேரவை எடுத்த முயற்சிகள் யாவும் மோசமான தோல்வியைக் கண்டிருந்தன.
உள்ளூர் தமிழ் மக்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு பதிலாக உலகத் தமிழர் பேரவை நேபாளத்தில் பௌத்த தேரர்களுடன் பேசியுள்ளதை தமிழ் அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார். உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் சந்திப்பிற்காக விடுத்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார்.
உலகத் தமிழர் பேரவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் 2014ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. எனினும் 2015ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் பதவிக்கு வந்த மைத்ரிபால சிறிசேனவால் அது நீக்கப்பட்டது.எனினும், பதவியிலிருந்து நீக்கபப்ட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் மீண்டும் தடை செய்யப்பட்டு, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ‘அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதில்லை’ என கூறி ஓகஸ்ட் 2022இல் நீக்கப்பட்டது.
நல்லிணக்க முயற்சி அவசியம்
அதேவேளை, பல்லின மக்கள் வாழும் இலங்கையில் இன ஐக்கியம், மத நல்லிணக்கம் என்பன மிக முக்கினமானவை. இலங்கை முன்னோக்கி செல்ல வேண்டுமெனில் இன நல்லிணக்கம் மிக அவசியம். தேசிய பாதுகாப்புக்கு வழங்கப்படும் முன்னுரிமை – முக்கியத்துவம் நல்லிணக்கத்துக்கும் வழங்கப்பட வேண்டும்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசால் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களை பாதிக்கப்பட்ட தரப்பினர் நிராகரிக்கின்றனர். சர்வதேச தலையீட்டைக் கோருகின்றனர்.
சர்வதேச தரப்பில் இருந்து வந்து சில தரப்புகள் செயற்பட்டாலும் அதற்கும் எடுத்த எடுப்பிலேயே எதிர்ப்புகள் வெளியிடுவது ஏற்புடையது அல்ல.
இலங்கையில் நீடித்த அமைதிக்கு அரசியல் தீர்வொன்று தமிழர் தரப்புக்கு அவசியம். அது சிங்கள மக்களின் ஆசியுடன் – அனுமதியுடன் கிடைக்கப்பெற்றால் சிறப்பாக அமையும் என கூட்டமைப்பின் சம்பந்தன் பல தடவைகள் குறிப்பிட்டுள்ளார். அந்த கருத்து நூறு வீதம் உண்மைதான். எனவே, இமயமலை பிரகடன முயற்சியை எடுத்த எடுப்பிலேயே நிராகரிப்பது ஏற்புடையதா?