இரண்டாவது அரசியல் தளத்தின் பிரதிநித்துவக் கட்டமைப்பின் தேவை

தமிழர்களின் நீண்டகால அரசியல் போராட்டத்தில் தற்காலிகமானதொரு தீர்வாக மாகாண சபை முறைமை, அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனை அதிகாரப்பகிர்வின் ஆரம்பப்புள்ளியாகக் பார்ப்பவர்களும் இருக்கின்றார்கள். முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்பவர்களும் இருக்கின்றார்கள்.

இருப்பினும், தற்போது மாகாண சபைத் தேர்தல் வேண்டுமென்றே கால தாமதப்படுத்தப்படுவதும், மாகாண சபையின் அதிகாரங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதும் தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எழுப்புகின்றன.

இச்சூழலில், யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களின் கருத்துகள் மாகாண சபையின் முக்கியத்துவத்தையும், அதன் தேர்தலின் அவசியத்தையும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

நீண்டகாலப் போராட்டங்களுக்குப் பின்னரும், தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உறுதியான அரசியல் தீர்வு இன்மும் எட்டப்படாத நிலையில், மாகாண சபை முறைமை ஒரு தற்காலிகமான, ஆனால் முக்கியமான அரசியல் கட்டமைப்பாக உள்ளது என்று சட்டத்தரணி கோசலை மதன் சுட்டிக்காட்டுகிறார்.

முழுமையான சுயாட்சி அல்லது சமஷ்டி முறைமையை நோக்கிய பயணத்தில், மாகாண சபை ஒரு படிக்கல்லாகச் செயற்பட முடியும். இது வெறுமனே ஒரு நிர்வாக அலகாக மட்டும் இல்லாமல், அரசியலமைப்பு ரீதியாக தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயற்படுத்தி, தமிழ்ச் சமூகத்தைப் பலப்படுத்துவதற்கான தளமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், கடந்த காலங்களில் வட மாகாண சபை அதன் அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்ற விமர்சனங்கள் உள்ளன. குறிப்பாக, நியதிச் சட்டங்களை உருவாக்குதல், நிதி ஆதாரங்களைப் பெருக்குதல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் போதியளவு கவனம் செலுத்தப்படவில்லை.

உதாரணமாக, வடமேல் மாகாணம் போன்ற ஏனைய மாகாணங்கள் பல்வேறு நியதிச் சட்டங்களை நிறைவேற்றியுள்ள நிலையில், வட மாகாண சபை அவ்வாறு செயற்படத் தவறியுள்ளது. மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள், குறிப்பாக நிதி மற்றும் நிர்வாக விடயங்களில், வினைத்திறனுடன் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

சட்டங்களை உருவாக்குவதன் மூலம் மாகாணத்தின் வருமானத்தை அதிகரிக்கவும், மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் வாய்ப்புகள் இருந்தும் அவை கைநழுவ விடப்பட்டன.

இவ்வாறான நிலையில், மாகாண சபைக்கான தேர்தல் தொடர்ந்து காலதாமதப்படுத்தப்படுவது, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்குச் சமமானது என்று வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர்.

இலங்கை ஜனாதிபதி அண்மையில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக அறிவித்தார். இது மாகாண சபைகளுக்குக் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்கும் ஒரு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்பட்டது. எனினும், நடைமுறையில் இந்த அதிகாரங்களை வழங்குவதில் மத்திய அரசாங்கத்திற்கு தயக்கம் உள்ளது. மாகாணங்களுக்குப் போதிய அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில், மாகாண சபைகளின் செயல்பாடு வரையறுக்கப்பட்டதாகவே இருக்கும்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இம்மானுவேல் ஆர்னோல்ட், மாகாண சபையை தமிழர்களுக்குக் கிடைத்த இரண்டாவது அரசியல் தளம் எனக்குறிப்பிடுகிறார். அதேபோன்று, ஈ.பி.டி.பி.யின் தவநாதன், இது இனப்பிரச்சினைக்கான தீர்வின் ஆரம்பப் புள்ளி என்கிறார். எனவே, இந்த அரசியல் தளத்தை மக்கள் பிரதிநிதிகள் மூலம் செயற்படுத்துவதற்குத் மாகாண சபைகளுக்கான தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

தற்போதுள்ள அரசாங்கம், குறிப்பாக ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கம், மாகாண சபை முறைமைக்கு எதிராகச் செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எல்லை நிர்ணயம் அல்லது தேர்தல் முறைமை குறித்த விவாதங்களை ஒருசாட்டாக வைத்து, தேர்தலைத் தாமதப்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாக இருக்கலாம் என்று ரெலோவின் சபா குகதாஸ் குறிப்பிடுகிறார்.

இப்பின்னணியில், பழைய தேர்தல் முறையின் கீழ் தேர்தலை உடனடியாக நடத்துவதே எளிதானது என்றும், அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் இருப்புடன் தொடர்புடையதொரு விடயம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் குறிப்பிடுகிறார். மேலும், இந்தியாவின் நிலைப்பாடு மாகாண சபை முறைமையை ஆதரிப்பதாக உள்ளது.

ஐ.நா.வின் தற்காலிக வரைபிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் மற்றும் அர்த்தமுள்ள வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு அரசாங்கம் முயன்றால் அது இந்தியாவுடன் நேரடி மோதலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இது மாகாண சபை முறைமை தொடர்ச்சியாக பேணப்படுவதற்கானதொரு முக்கியமான சர்வதேசப் பாதுகாப்பாகக் கருதப்படுகிறது.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் தேர்தல்களில் மீண்டும் அதேபழைய பிரதிநிதிகள் பலர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, அவர்கள் மாகாண சபையின் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் குறித்து ஆழமான புரிதலுடன் செயற்பட வேண்டும். தங்களுக்குள் உள்ள அரசியல் முரண்பாடுகளைக் களைந்து, மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்குப் பயன்படுத்த வேண்டும்.

தமிழர்கள் உரிமைக்காகப் போராடிப் பெற்ற இந்த மாகாண சபைக் கட்டமைப்பை அதன் அதிகாரங்களுடன் முறையாகப் பயன்படுத்தத் தவறினால், தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும்.

ஆகவே, தமிழர்கள் இந்த அமைப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதோடு, தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அதன் அதிகாரங்களைச் சரிவரப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இத்தகைய விழிப்புணர்வும், செயற்பாட்டு முனைப்புமே தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பயணத்தை வலுப்படுத்தும்.

மாகாண சபைக்கான தேர்தல்கள் தாமதப்படுத்தப்படுவது, ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். இது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மறுப்பதாகும்.

அரசாங்கம் புதிய தேர்தல்முறை அல்லது பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களைக் கூறி காலத்தைக் கடத்துவது, மாகாண சபைகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து, மத்திய அதிகாரத்தை வலுப்படுத்தும் திட்டமாகவே தெரிகிறது.

தமிழ்க் கட்சிகள், இந்த ஆபத்தை உணர்ந்து, அரசியல் பேதங்களை மறந்து, தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஒருமித்த குரலில் வலியுறுத்துவது அவசியமாகும். ஆதனை அத்தரப்பினர் செய்துள்ளனர். எனினும் அச்செயற்பாடு தொடர வேண்டும்.

மேலும், மாகாண சபை உறுப்பினர்கள் அதன் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கூட வினைத்திறனுடன் பயன்படுத்தி, அதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும். இதுவே, அதிகாரப் பகிர்வு குறித்த தமிழர்களின் போராட்டத்தை வலுப்படுத்த ஒரே வழியாகும்.