‘மாகாண சபைத்தேர்தல்’ ஜெனிவாவில் இந்தியாவின் வலியுறுத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் இம்மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்தக் கூட்டத்தொடரின் ஆரம்ப நாளில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் பதிலளித்து உரையாற்றியிருந்தார். தொடர்ந்து இணை அனுரசணை நாடுகளின் பிரதிநிதி என்ற வகையில் பிரித்தானிய பிரதிநிதி நிலைப்பாடுகளை வெளியிட்டார்.

அதனையடுத்து இந்தியாவின் ஜெனிவாவுக்கான பிரதிநிதி ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தார். அவர், நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளுமாறும் இலங்கையை வலியுறுத்தினார்.

மேலும், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு நியாயமான நல்லிணக்க செயன்முறை நிலையான அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் இலங்கை இந்த விடயங்களில் கால தாமதங்களின்றிச் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அழுத்தமானது, மாகாண சபைத் தேர்தல்கள் வெறும் உள்நாட்டு விவகாரம் மட்டுமல்ல, அது சர்வதேச சமூகத்தின் பார்வையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் நல்லிணக்கத்தின் முக்கிய காரணியாக உள்ளது என்பதைக் வெளிப்படுத்துவதாக உள்ளது.

இந்தியாவின் இந்த நிலைப்பாடானது அதன் தலையீட்டில் உருவான இந்திய,இலங்கை ஒப்பந்தத்தின் பின்னணியின் மாகாண சபைகள் நிறுவப்பட்டதற்கான வரலாற்றுப் பின்னணியுடன் தொடர்புடையதாக உள்ளது.

1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்கையின் விளைவாகவே நாட்டின் அரசியலமைப்பு ரீதியாக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, அவற்றுக்கு அதிகாரங்களைப் பகிரும் நோக்கத்துடன் அவை உருவாக்கப்பட்டன. அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன, ஒற்றையாட்சி முறைக்கு எதிரான இந்தக் கட்டமைப்பை மனமுவந்து ஏற்றிருக்கவில்லை.

மாறாக, இந்தியாவின் அதியுச்சமான தலையீட்டினால் ஏற்பட்ட அரசியல் ரீதியான நிர்ப்பந்தத்தின் காரணமாகவே ஜே.ஆர். நடைமுறைப்படுத்தினார். அவர் ஒன்பது மாகாணங்களுக்கும் தனித்தனியே மாகாண சபைகளை உருவாக்கி, வடக்கு, கிழக்கு மாகாணத்தையும் தற்காலிகமாக இணைத்தார். இதன்மூலம் அதிகாரப்பகிர்வை ஒற்றையாட்சிக்கு சவால் இல்லாத வகையில் வடிவமைக்க முயன்றார்.

இவ்வாறு வரலாறு இருக்கையில், 2014ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மாகாண சபைத்தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், தேர்தலை நடத்தாமல் காலம் கடத்துவதானது ஆட்சியாளர்களின் ‘திட்டமிட்ட மூலோபாய’ நகர்வாகவே கருதப்படுகிறது.

பெரும்பாலான சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் மற்றும் அரசியல் கட்சிகள் மாகாண சபைகளை ஒற்றையாட்சிக்கு ஆபத்தானவொரு கட்டமைப்பாகவே பார்க்கின்றன. இந்த மனநிலையானது நீண்டகாலமாக மாறவில்லை.

இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு வெளிப்படையாக மாகாண சபைகளை ஒழிக்கும் துணிகரமான இயலுமை இல்லாததால், அவற்றை செயலிழக்கச் செய்வதன் மூலம் அவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்து, அவசியமற்றவையென மக்களிடம் சித்தரிக்க தொடர்ச்சியாகவே முயற்சிக்கின்றனர்.

கடந்த காலத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், மாகாண சபைத் தேர்தல்களை பழைய முறையிலேயே நடத்துவதற்கு ஒரு தனிநபர் பிரேரணையை முன்வைத்திருந்தார்.

ஆனால், அது நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மீண்டும் அதே பிரேரணையை முன்வைத்துள்ளார். இருப்பினும், அது இன்னமும் விவாதத்திற்கு எடுக்கப்படவில்லை. புதிய அரசாங்கமும் தேர்தலை விரைவாக நடத்த விரும்பவில்லை என்பதையே இது வெளிப்படுத்துவதாக உள்ளது.

இந்நிலையில், தேர்தல் தாமதப்படுத்துவதற்கு எல்லை நிர்ணயம் பிரதான காரணமாக கூறப்படுகின்றது. அத்துடன், மாகாண சபைத் தொகுதிகளின் எல்லைகளை மீண்டும் நிர்ணயித்து, அதற்கு அங்கீகாரம் பெறுதலில் இழுபறிகள் காணப்படுகின்றன.

இதேநேரம், பழைய முறையிலேயே தேர்தலை நடத்துவதிலும் வாதவிவாதங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்து, பழைய முறையிலேயே தேர்தலை நடத்துதல் தான் தற்போதைய ஏதுவான நிலைமையாக உள்ளது.

ஆனால், அரசாங்கம் எளிதான வழியைத் தேர்ந்தெடுக்காமல், சர்வதேச அரங்கில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அளித்த பதிலில், எல்லை நிர்ணய செயல்முறை முடிந்த பின்னரே தேர்தல்கள் நடத்தப்படும் எனக்கூறியுள்ளது.

இந்த செயல்முறை தேர்தல் ஒத்திவைப்புக்கான ஒரு வழியாகவே பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும், எல்லை நிர்ணயம் செய்யப்பட்டால் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குத் தேர்தல் நடைபெறாது எனக் கூறியிருப்பது இதை உறுதிப்படுத்துகிறது.

மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படாததால், அவற்றின் நிர்வாகம் ஆளுநர்கள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரிகளால் நடத்தப்படுகிறது. இதன்மூலம் மாகாண சபைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

இதை மக்கள் மத்தியில் ஒரு தேவையற்ற, வீண் செலவுகளை ஏற்படுத்தும் ஒரு ‘வெள்ளை யானை’ எனச் சித்தரிக்க முயற்சி நடைபெறுவதாக ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் காண்பிப்பதற்கு தீவிரமாக முயற்சிக்கின்றார்கள்.

ஆனாலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, மாகாண சபைகளை அரசியல்வாதிகள் நிர்வகிப்பதே சிறந்தது என்று பகிரங்கமாகவே வாதிடுகிறார்.

அரசியல்வாதிகளின் ஊழலைத் தடுக்க முடியும். ஆனால் ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகளின் மோசடிகளை அவ்வளவு எளிதில் தடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது மாகாண சபைகளின் ஜனநாயக முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக உள்ளது.

ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிலைநிறுத்த முற்படும் சிங்கள அரசியல் கட்சிகள், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் தயக்கம் காட்டுவதொன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் அரசாங்கத்தினால் ஜெனிவாவில் அளிக்கப்பட்ட பதில், அரசாங்கத்தின் நோக்கம் தேர்தலைத் தாமதப்படுத்துவது என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

மாகாண சபைத் தேர்தல்கள் எப்போது நடைபெறும், அவற்றின் எதிர்காலம் என்னவென்பது குறித்த கேள்விகள் தொடர்கின்றன. இது இலங்கை ஜனநாயகத்தின் ஒரு முக்கியப் பிரச்சினையாகவே இருந்து வருகிறது.