அநுரவின் கச்சதீவு விஜயம் எழுப்பியுள்ள சர்ச்சை

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமீபத்தில் கச்சத்தீவுக்கு மேற்கொண்ட பயணம், இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் இடையிலான நீண்டகால பிராந்திய சர்ச்சையை மீண்டும் தூசுதட்;டியிருக்கிறது.

இலங்கையின் அரச தலைவர் ஒருவர் கச்சத்தீவுக்குச் செல்வது இதுவே முதல்முறை என்பதால், இது இலங்கையின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் தெளிவானதொரு மூலோபாய நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.

கச்சத்தீவு என்பது பாக் ஜலசந்தியில், தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்திற்கும்  யாழ்ப்பாணத்திற்கும் இடையில் அமைந்துள்ளதொரு சிறிய, மனிதர்கள் வசிக்காத தீவாகும். அத்தீவு வரண்ட நிலப்பரப்பைக் கொண்டிருந்த போதிலும், இது இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் அடையாள முக்கியத்துவம் வாய்ந்ததாக வரலாறு நெடுகிலும் உள்ளது.

வரலாற்றைப் பார்க்கின்றபோது, இத்தீவு இந்திய மற்றும் இலங்கை மீனவர்களால் வலைகளை உலர வைப்பதற்காகவும், ஓய்வெடுப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.1974 ஆம் ஆண்டு ‘இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று நீர்நிலைகளில் எல்லை பற்றிய ஒப்பந்தம்’ மூலம் கச்சத்தீவின் உரிமை முறையாக இலங்கைக்கு கிடைத்தது. 1976இல் ஏற்பட்ட மற்றொரு ஒப்பந்தம், இந்தத் தீவை இலங்கைக்கு முழுமையான உரித்துடன் அளித்தது. இதுவொருரு சட்டபூர்வமான சர்வதேச ஒப்பந்தமாக இருந்தாலும், கச்சத்தீவு விவகாரம் குறிப்பாக தமிழ்நாடு அரசியலில் தொடர்ச்சியான பிரச்சினையாகவே இருந்து வருகிறது.

பல தசாப்தங்களாக, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ‘கச்சத்தீவை மீட்டெடுப்போம்’ என்ற கோசத்தை, வாக்காளர்களை ஈர்க்கவும், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக காணப்படும் ஒரேயொரு வழியாகப் வெளிப்படுத்தி வருகின்றார்கள். ஆனால், இந்திய அரசியல் தரப்பினரின் மேற்படியான அரசியல் கோசம், இழுவைமடி வலைகளைப் பயன்படுத்துதல் போன்ற சட்டவிரோதமான மீன்பிடி முறைகளால், இந்தப் பகுதியில் கடல்வளம் குறைந்துவரும் உண்மையான பிரச்சினையை இருட்டடிப்புச் செய்து வருகின்றது

இதனால், தமிழ்நாட்டு மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படுவதும், சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

நடிகர் விஜய் போன்ற தலைவர்கள் கச்சதீவை ‘மீட்டெடுப்பதை’ தற்போது வலுவான அரசியல் கோசமாக முன்கின்ற நிலைமை உருவாகியுள்ளது. ஆனால், இந்திய மீனவர்களின் படகுகள் கச்சத்தீவுக்கு அப்பால், இலங்கைக் கடற்கரைகள் வரை செல்வது அவர்களின் கண்மூடித்தனமான வாதத்தை பொய்யாக்குகிறது. இது கச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன்பிடிக் குறைவு இல்லை என்பதையும், மாறாக, பரந்த அளவில் கடல்வளப் பற்றாக்குறை இருப்பதையும் காட்டுகிறது.

ஜனாதிபதி திசாநாயக்காவின் கச்சத்தீவுப் பயணம், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் இந்திய அரசு அதிகாரிகளின் கருத்துக்களுக்கு ஒரு நேரடியான மற்றும் திட்டமிட்ட பதிலடியாக அமைந்தது. கச்சத்தீவில் கால் பதித்ததன் மூலம், அதன் இறையாண்மை குறித்து எந்த மாற்றமும் இல்லை என்பதை அவர் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமன்றி இந்த விஜயத்தின் மூலமாக ஜனாதிபதி அநுர, அவரது ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு உள்நாட்டிலும் பல வழிகளில் உதவுகிறது. முதலில், போர் காரணமாகத் தங்கள் இலங்கைத் தமிழ் சகோதரர்களால் கைவிடப்பட்டதாக உணரும் யாழ்ப்பாண மீனவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்த இது அவருக்கு வெகுவாக உதவியுள்ளது.

இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கு ஆதரவாக இருப்பதன் மூலம், திசாநாயக்க அவர்களின் நம்பிக்கையைப் பெற முயல்கின்றார். அவர்களது வாக்குவங்களை தனதாக்க முயற்சிக்கின்றார். இரண்டாவதாக, இந்த நடவடிக்கை ஊடாக இலங்கையின் ஆட்பு நிலப்பகுதியையும் இறையாண்மைiயும்  உறுதிப்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு அங்குலமும் பௌத்த மதத்தின் பாதுகாப்புக்காகவே உள்ளது என்று உறுதியாக நம்பும் சிங்கள தேசியவாதிகளின் உணர்வுகளையும் திருப்திப்படுத்துவதாகவும் அவரைக் கொண்டாடும் நிலைமையையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கம் கச்சத்தீவை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றும் சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறது. இலங்கை கடற்படை ஏற்கனவே அங்கே ஒரு ராடர் கட்டமைப்பையும் கடற்படைப் பிரிவையும் நிறுத்தியுள்ளது. கச்சதீவை சுற்றுலா வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவதன் மூலம், அரசாங்கம் வருவாயை ஈட்டுவதுடன், அந்தப் பகுதியின் மீது தனது சட்டபூர்வ மற்றும் சர்வதேச உரிமையையும் மேலும் வலுப்படுத்த முயல்கிறது.

கச்சத்தீவு தொடர்பான இந்த அரசியல் நகர்வுகள் ஒரு மூலோபாய போட்டியாகவே பார்க்கப்படுகின்றன. இந்தியத் தரப்பில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வுக்கு, கச்சத்தீவு விவகாரம் மாநிலத் தேர்தல்களில் ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகும். அந்த வழியில் இறுதியாக அரசியலுக்கு வந்த விஜயம் இந்த விடயத்தினை தீவிரமாக கையாள்வதற்கு முயற்சிக்கலாம். ஆனால், ஒரு சட்டபூர்வமான சர்வதேச ஒப்பந்தத்தை இரத்து செய்வது என்பது மத்திய அரசுக்கு மிகவும் சிக்கலான மற்றும் ஆபத்தான செயலாகும். ஆகவே டில்லி இந்த விடயத்தில் அடக்கியே வாசிப்பதற்கு முயலும்

ஜேவிபியைப் பொறுத்தவரையில் இந்தியாவின் கடந்தகால நடவடிக்கைகளைக் கண்டு எச்சரிக்கையாகவே உள்ளது. இந்தியா ஒருநாள் கச்சத்தீவை மீண்டும் கைப்பற்ற முயற்சி செய்யலாம் என்ற அச்சம் அதற்கு வெகுவாகவே உள்ளது. திசாநாயக்காவின் பயணம் இலங்கையின் இறையாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தும் முற்கூட்டிய நடவடிக்கையாகவே உள்ளது.

கச்சத்தீவு மையப்படுத்திய முரண்பாடுகள் பிராந்தியத்தைக் கடந்து  வரலாற்று ஒப்பந்தங்கள், அரசியல் வாய்ப்புகள் மற்றும் மீனவர்களின் யதார்த்தமான போராட்டங்கள் ஆகியவற்றின் சிக்கலான கூட்டுக்கலவையாகும்.

ஜனாதிபதி அநுர திசாநாயக்காவின் சமீபத்திய நடவடிக்கைகள், இந்த விவகாரத்தில் இலங்கை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான புவிசார் அரசியல் மூலோபாயப விடயத்தில் புதியதொரு அத்தியாயத்திற்கு வழி வகுத்துள்ளது.