ரணிலின் கைது நீதிக்குகிடைத்த வெற்றியா?

ரணிலின் கைது நீதிக்கு

கிடைத்த வெற்றியா?

Key words : முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கைது, பிணையில் விடுதலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை, எதிர்க்கட்சிகள், அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளமையானது நாட்டின் தெற்கு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 22 அன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்  உடல்நலக்குறைவு காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், ஆகஸ்ட் 26 அன்று, ஐந்து மில்லியன் ரூபா மூன்று ஆளுறுதிப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அவரது நீண்ட அரசியல் வரலாற்றில், இது ஒரு கறையாக இருந்தாலும், அதை வெறும் தனிப்பட்ட சம்பவம் என்று பார்க்க முடியாது. மாறாக, இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அரசியல் அணுகுமுறை, நீதித்துறையின் சுதந்திரம், இலங்கையின் பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்திற்கும், புதிய அரசியல் தலைமுறைக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் ஆகியவற்றின் பிரதிபலிப்பு எனக்கொள்ள முடியும்.

ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டு,  ஜனாதிபதியாக இருந்தபோது, கியூபா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணத்திற்குப் பிறகு, லண்டனில் தனிப்பட்ட தேவைகளுக்காக தங்கியிருந்த இரண்டு நாட்களுக்கு, அரசுப் பணத்தில் 16.6 மில்லியன் ரூபாவை செலவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சிலர் இதை ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை என்றும், சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நிரூபிக்கும் அரிய தருணம் என்றும் பாராட்டுகின்றனர். ஆனால், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா, மஹிந்த மைத்திரிபால போன்றவர்கள் கூட, இந்த நடவடிக்கையை ‘அரசியல் பழிவாங்கல்;’ என்றே குறிப்பிடுகின்றனர்.

கடந்த காலங்களில் பல பெரும் ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும்போது, ஒரு சிறிய குற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதியொருவரைக் கைது செய்தது, அரசாங்கத்தின் உள்நோக்கம் குறித்து சந்தேத்தை ஏற்படுத்துகிறது.

விக்கிரமசிங்கவின் கைது, பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்திற்கும் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த புதிய தலைமுறைக்கும் இடையிலான வர்க்க மோதலாகவும் பார்க்கப்படுகிறது. ஜே.வி.பி.யின் தலைவர்களின் எளிமையான பின்னணிக்கு மாறாக, விக்கிரமசிங்க ஒரு பாரம்பரிய, உயர்குடி அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அவர் கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட காட்சி, கொழும்பின் உயர் வர்க்கத்தினரிடையே கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் குற்றவியல் நடவடிக்கை அல்ல, மாறாக, ஒரு வர்க்க அடையாளத்தின் மீதான தாக்குதல் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

விக்கிரமசிங்கவின் கைது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் காரணியாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதியின் கைதுக்கு எதிராக ஆரம்பத்தில் எழுந்த ஆரவாரம் விரைவிலேயே தணிந்துவிட்டது.

காரணம், தற்போதைய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள், அவர்களது கடந்தகால முறைகேடுகளுக்காக எளிதில் இலக்கு வைக்கப்படக்கூடியவர்கள் என்ற நிலைமையே உள்ளது.

எனவே, அவர்கள் கூடுவதை விட, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள். இந்தநிலை, அரசாங்கத்திற்கு பெரியதொரு சவாலை உருவாக்காமல், அதன் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதால், அவரது கைதுக்கு வெளிநாட்டு அழுத்தங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இலங்கை அரசாங்கம், ‘சட்டம் அனைவருக்கும் சமமானது’ என்று கூறியதோடு, சர்வதேச சமூகம் இந்நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தது.

இது, வெளிநாடுகளுக்கு, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட பெரிய காரணம் இல்லை என்பதைக் காட்டுகிறது. அதேநேரம், எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைள் வரலாம் என்றும் இதுவொரு முன்னோட்டமாக இருக்கலாம்

மருத்துவமனையில் இருந்து விக்கிரமசிங்க வெளியேறும்போது, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் ‘ Unleashed ‘ என்ற புத்தகத்தை வைத்திருந்தார்.

இதுவொரு கவனிக்கத்தக்க விடயமாகும். இதுவொரு தற்செயலான நிகழ்வாக இருக்கலாம், ஆனால் சில அரசியல் விமர்சகர்கள் இதைவொரு குறியீடாகப் பார்க்கிறார்கள். போரிஸ் ஜோன்சன் தனது அரசியல் வாழ்க்கையில் பல சவால்களைச் சந்தித்து மீண்டு வந்தவர்.

அதேபோல், தானும் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருவேன் என்பதை விக்கிரமசிங்க மறைமுகமாக உணர்த்தியிருக்கலாம். இருப்பினும், அந்தப் புத்தகத்திற்கு விமர்சகர் ‘கோமாளியின் வரலாற்று குறிப்புகள்’ என்று தலைப்பிட்டது வேடிக்கையான முரண்பாடாக அமைந்திருந்தது.

இதேநேரம், ரணில் விக்கிரமசிங்கவின் கைது, ஒரு அரசியல் தலைவரின் தனிப்பட்ட பயணம் பற்றியது என்பதை விட, அதுவொரு புதிய அரசியல் யுகத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாக இருக்கலாம்.

இது, பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கி, ஊழலுக்கு எதிரான புதிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இந்த விவகாரத்தின் இறுதித் தீர்ப்பு நீதிமன்றத்தில் இருந்தாலும், இதன் அரசியல் தாக்கம் இலங்கை வரலாற்றில் நீண்ட காலத்திற்குப் பேசப்படும். இதுவொரு நாடகமா அல்லது உண்மையான நீதியா என்பதை, வரும் காலங்களே தீர்மானிக்கும்