ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்து ஏழு மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இக்காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சொற்ப இடைவெளிகளில் இரண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் பாராளுமன்ற தேர்தலில் அநுர அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்திருந்தது. அதன் வாக்குவங்கி 61.56சதவீதமாக காணப்பட்டது. ஆனால் நடைபெற்று நிறைவடைந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் அந்த வாக்குவங்கி 43.26சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இவ்வாறான நிலையில் தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் வடக்கிலும்,கிழக்கிலும், தெற்கிலும் மேலெழ ஆரம்பித்துள்ளன.
இந்தக் கோரிக்கைகள் எதிர்க்கட்சிகளிடத்திலிருந்து தீவிரமாக வெளிப்படுகின்றன. அதற்கு ‘அரசியல்’ ரீதியான காரணங்கள் இருக்கலாம். ஆனால் மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்தப்படாத நிலைமைகள் தான் உள்ளன.
இவ்வாறான நிலையில் தான் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக காணப்பட்டு வருகின்றது. இந்தியா உள்ளிட்ட இராஜதந்திரிகளும் இதனை வலியுறுத்துகின்றார்கள்.
அதுமட்டுமன்றி, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு தடையாக காணப்படுகின்ற விடயங்களை கையாள்வதற்கும் நடவடிக்கைகள் ஆர்வத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிந்துள்ளது.
அந்த வகையில், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக தனிநபர் சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால் குறித்த தனிநபர் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன் குறித்த சட்டமூலத்தில் 2025ஆம் ஆண்டின் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டம் என்று எடுத்துக்காட்டப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதியன்று வலுவலிருந்த 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் ஏற்பாடுகள் 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்தினால் அதற்குச் செய்யப்பட்ட திருத்தங்கள் எவ்வாறிருப்பினும் 2017 செப்டெம்பர் 22ஆம் திகதியிருந்து நடைமுறைக்கு வருகின்ற திகதி வரைக்குமான காலப்பகுதியின்போது செய்யப்பட்ட ஏதேனும் செயலுக்குப் பங்கமின்றி அத்தகைய செயல் 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு ஒவ்வாதனவாகவிராத அளவுக்கு இச்சட்டம் வலுவுக்குவருகின்ற திகதியிலிருந்து பயனுறுவதாக நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக தனிநபர் சட்டமூலம் ஜுன் மாத முதல்வார பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு சமர்ப்பிக்கப்படுகின்ற பட்சத்தில் தாமதமின்றி அதனை முன்னகர்த்தி நிறைவேற்ற வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுகட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ஏலவே தான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு தடையாகவுள்ள சட்ட திருத்தத்தைச் செய்வதற்கு ஆர்வத்துடன் தனிநபர் பிரேரணையை முன்மொழிந்திருந்தேன். எனினும் அதனை நிறைவேற்றுவதற்கு அப்போதைய ஆட்சியாளர்கள் விரும்பவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின்படி, நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் சமமான பிரதிநிதித்துவத்தை வழங்கும் குறிக்கோளுடன், எல்லைகளைத் அடையாளம் காண்பதற்காக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எல்லை நிர்ணய ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.
இருப்பினும், எல்லை நிர்ணயத்தின் தேவை பல ஆண்டுகளுக்கு முன்பே அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் நிறைவு செய்யப்படவில்லை.
2018இல் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழு, இரண்டு மாதங்களுக்குள் புதிய எல்லைகளை இறுதி செய்யவிருந்தது. ஆனால், அதன் அறிக்கையை உரிய காலத்தில் சமர்ப்பித்திருக்கவில்லை.
இதன் விளைவாக, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஆயுட்காலம் நிறைவுக்கு வந்திருந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு முடிந்திருக்கவில்லை.
2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 1988ஆம் ஆண்டின் 2ஆம் எண் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் பிரிவு 3ஏ(11)இல் திருத்தம் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா 2018இல் சமர்ப்பித்த எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை ஏகமனதாக நிராகரிக்கப்பட்டதோடு பைசர் முஸ்தபாவே அதற்கு எதிராக வாக்களித்திருந்தார்.
இந்நிலையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவால் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களை முன்னெடுப்பதாக இருந்தால் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை அவசியமாகின்றது.
ஆனால், அந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு முழுமையாக முடிந்திருக்கவில்லை. அத்தோடு அவ்விடயம் ஒரு நகைச்சுவையாக மாறியுள்ளது. ஆகவேதான் குறித்த முன்மொழியப்பட்ட ஏற்பாடுகளைத் திருத்தியமைத்து பழைய முறையிலேயே தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில், பாராளுமன்றத்தில் மே மாத இறுதி அமர்வு காலத்தின் கடந்த 23ஆம் திகதி அன்று மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் சபை ஒத்திவைப்பு வேளை பிரேணை விவாதத்தின்போது சில கேள்விகளை நியாயமாக எழுப்பியிருந்தார்.
‘மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இதற்கமைய தேர்தலை நடத்தும் வகையில் சட்டமூலத்தை தயாரிக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சு ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதா, ? நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,? நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லையாயின் ஏன் எடுக்கவில்லை?’ என்று அடுக்காக கேள்விகளைத் தொடுத்தார்.
தொடர்ந்து ‘மாகாண சபைகள் வடக்கு ,கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களுக்கும் முக்கியமானது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தனிநபர் பிரேரணை ஒன்றை கொண்டு வந்தார்.இருப்பினும் அந்த பிரேரணை நிறைவேற்றப்படவில்லை. இதுவொரு முக்கியமான விடயம்’ என்று சுட்டிக்காட்டினார்.
அதற்குப்பதிலளித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன, மாகாண சபைகள் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் சட்ட ரீதியான ஒருசில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.ஆகவே இதற்கமைய அமைச்சு மட்டத்தில் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகள் தேர்தலை நடத்துவதற்கு கடந்த மாதங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் அமைச்சுசார் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
மாகாண சபைத்தேர்தல்கள் தொடர்பில் முன்னாள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா முன்வைத்த திருத்த யோசனை மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்த தனிநபர் பிரேரணை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளோம். மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.
தொழில்நுட்ப ரீதியில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அதுவரையில் மாகாண முறைமைக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்தி நிர்வாக கட்டமைப்பை ஸ்தாபிக்க துரிதகர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சந்தன அபேரத்ன தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் மாகாண சபைகள் முறைமைக்கு எதிரானவர்கள். ‘இந்திய எதிர்ப்பு வாதம்’ தமது நிலையான கொள்கையாக கடைப்பிடிக்கும் ஜே.வி.பிக்கு அடிப்படையில் மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்வது கடினமானது.
அவ்வாறான நிலையில், ஜே.வி.பியின் தலைமையகமான பெலவத்த காரியாலயமே அண்மைய நாட்களில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் சக்கி மையமாக மாறியுள்ள நிலையில் மாகாண சபைகளுக்கு சாதகமான தீர்மானத்தை எடுக்குமா என்பது தாற்போதுள்ள கேள்வியாகவுள்ளது.
ஜே.வி.பி.யின் கொள்கை ஒருபக்கம், நடைபெற்று முடிவடைந்த தேர்தல் முடிவுகளின் தாக்;கம் மறுபக்கம் இவற்றைத் தாண்டி மாகாண சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் முன்வைக்கும் என்று எதிர்பார்ப்பது கடினமானது. ஆனால் அதற்கான சகல அழுத்தங்களையும் வழங்க வேண்டியது அவசியமாகின்றது.
எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புக்கள், இராஜதந்திர மட்டங்கள் என்று பல கோணங்கள் இந்த அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டியிருக்கின்றது. ஏனென்றால் இலங்கையில் இனரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதற்காக ‘அதிகாரப்பகிர்வு’ முக்கிய பேசுபொருளான விடயமாக உள்ளது.
அந்த வகையில் அதிகாரப்பகிர்வுக்கான ஆரம்ப கட்டமைப்பே மாகாண சபைகளாக உள்ளன. ஆகவே ஆரம்ப கட்டமைப்பை குலைத்துவிட்டு எப்படி அதிகாரப்பகிர்வு விடயத்தில் முன்னோக்கிப் பயணிப்பது?
Image: https://groundviews.org/