உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் ஆளும் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 4,503,930வாக்குகளைப்பெற்று, 3927உறுப்பினர்களை தனதாக்கி முன்னிலை பெற்றிருக்கின்றது.
எனினும் தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி கடந்த பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் 18.3சதவீதம் வாக்குவங்கி வீழ்ச்சி அடைந்திருக்கின்றது.
இந்நிலையில் அக்கட்சி 265சபைகளில் முன்னிலை பெற்றிருந்தாலும் 116சபைகளில் தான் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியுமாக இருக்கின்றது. ஏனைய 120சபைகளில் பெரும்பான்மை இல்லாத நிலைமையும் 29சபைகயில் சமநிலையான நிலைமையுமே காணப்படுகின்றது.
நிலைமைகள் இவ்வாறிருக்கையில், தேசிய மக்கள் சக்தியின் தாய் கட்சியான ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்து ஒருசில மணிநேரங்களுக்குள் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.
‘தமது கட்சி தோல்வி அடைந்த கட்சிகளுடன், குழுக்களுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்போவதில்லை’ என்று உறுதிபட அறிவித்தார். மறுபக்கத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தமிழ் கட்சிகள் தங்களுடன் கைகோர்க்க வேண்டும் என்றார்.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ‘தமிழ்க்கட்சிகளின் ஆதரவினை ஆழமாக ஆராய்ந்த பின்னரே பெற்றுக்கொள்வோம்’ என்றார்.
இவ்வாறு ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த வியாழக்கிழமை கொழும்பு மாநாகர சபையில் வெற்றிபெற்றுள்ள தமது கட்சியைச் சேர்ந்த 48அங்கத்தவர்களையும் அழைத்து உரையாடியிருக்கின்றார்.
இதன்போது, கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தினை எவ்வாறாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர் தெளிவு படுத்தியுள்ளார்.
குறிப்பாக, கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதென்பது மிகவும் முக்கியமானதொரு விடயம் என்பதோடு தேசிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரையில் அதுவொரு வரலாற்று ரீதியான விடயம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்சமயத்தில் உரையாடலில் பங்கேற்றவர்கள் எவ்வாறு தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றுவது என்று கேள்விகளை தொடுத்துள்ளனர்.
அச்சமயத்தில் ஏற்கனவே தேசிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விரெய் கெலி பல்தஸார் மேயராக முன்மொழியப்படுவார் என்றும் ஏனைய பதவி நிலைகள் கட்சியின் தலைமையகத்தால் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சுயேச்சைக்குழுக்களுடன் தீவிரமான பேச்சுக்களை தேசிய மக்கள் சக்தி திரைமறைவில் மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக தேசிய மக்கள் சக்தியுடன் பேரம்பேசி சுயேச்சைக்குழுக்கள் ஆதரவளித்ததாக காண்பித்துக்கொள்ளாது, இயல்பாகவே சுயேச்சைக்குழுக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்து அதன் மேயர் வேட்பாளரையே மேயர் ஆசனத்தில் அமர்த்துவதற்கான ஒத்துழைப்புக்களை பெறுவதை மையப்படுத்திய உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, இந்த உரையாடல்களின்போது, எதிர்காலத்தில் உள்ளுர் அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்கதல், மாகாண சபை தேர்தல் நடைபெறும்போது ஆசன ஒதுக்கீட்டை தேசிய மக்கள் சக்தியில் வழங்குதல் உள்ளிட்டவை பேரம்பேசப்படும் விடயங்களாக உள்ளதாக குறித்த திரைமறைவுப் பேச்சுக்களில் பங்கேற்ற சுயேச்சைக்குழு அங்கத்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆக, தேசிய மக்கள் சக்தி தாம் தனிக்கட்சியாகவே ஆட்சி அமைப்போம் என்று கூறினாலும் கொழும்பு மாநகர சபையை கைப்பற்றுவதற்காக அனைத்து வழிகளிலும் தீவிர முயற்சிகளை எடுத்திருக்கின்றது. கொழும்பு மாநகர ஆட்சி அதிகாரத்தினை தேசிய மக்கள் சக்தி ‘கௌரவமாக’ கருதுகின்றது. அதனால் தான் எந்த எல்லைக்கும் செல்வதற்கு தற்போது அக்கட்சி முனைப்பில் உள்ளது.
கொழும்பு மாநகர சபையில் நிலைமைகள் இவ்வாறிருக்;கையில், வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் கூட அங்குள்ள பாரம்பரியக் கட்சிகளை வீழ்த்தி சபைகளில் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றுவதற்கும் தேசிய மக்கள் சக்தி தீவிரமான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது.
இந்தப் பின்னணியில் தான் அமைச்சர் பிமல் ரத்தநாயக்க கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வில் இலங்கைத் தமிழரசுக்கட்சி கசிப்பும், பணமும் கொடுத்தே வாக்குகளை வன்னியில் பெற்றதாகவும், கடுமையான இனவாதத்தினை முன்னெடுத்திருந்தாகவும் விமர்சனங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சக்தியானது கொழும்பு மாநகர சபையில் 29ஆசனங்களைப் பெற்றுள்ளது. அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சி 13ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 ஆசனங்களையும், சர்வஜன அதிகாரம் கட்சி 2 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
இதனைவிடவும், பொதுஜனமுன்னணி ஒரு ஆசனத்தையும், தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தையும், ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒரு ஆசனத்தையும், ஜனநாயக தேசிய கூட்டணி ஒரு ஆசனத்தையும் தேசிய மக்கள் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
இதனைவி;டவும், சுயேட்சைக்குழு-03 மூன்று ஆசனங்களையும், சுயேட்சைக்குழு-05 இரண்டு ஆசனங்களும் கே.ரி.குருசாமி தலைமையிலான சுயேட்சைக்குழு-04 இரண்டு ஆசனங்களையும், சுயேட்சைக்குழு-01ஒரு ஆசனத்தையும், சுயேட்சைக்குழு-02 ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
இதனால் எதிரணிகளுக்கு தலைமையேற்று கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றுவதற்கு தீவிரமான முனைப்பில் ஐக்கிய மக்கள் சக்தி களமிறங்கியுள்ளது.
விசேடமாக, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய அரசியல், சுயேச்சைக்குழுக்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில முக்கியஸ்தர்கள் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்தப்பேச்சுவார்த்தைகளில் பல்வேறு முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ள நிலையில் தான் கொழும்பு மாநகர சபையின் மேயராக தமது கட்சியின் மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட வைத்தியர் ருவைஸ் ஹனிபா பதவியேற்பார் என்ற நம்பிக்கை முஜிபுர் ரஹ்மான், மரிக்கார், ரஞ்சித் மத்தும பண்டரா போன்வர்களால் வெளியிடப்பட்டு வருகின்றது.
அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜனமுன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட தரப்புக்கள் கொள்கையளவில் இணங்கியுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்காத அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதேஇந்த தீர்மானத்துக்கு வந்துள்ளனர்.
அங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஆட்சியமைக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கு அதுதொடர்பான பெயர் பட்டியலை தயாரிப்பதற்காக குறித்த கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் சந்தித்து கலந்துரையாடி இணக்கப்பாட்டை எட்டியுள்ளனர்.
இந்தப் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணியின் 60ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு கொழும்பு விகாரமஹா தேவி பூங்கள் நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிரணிகளின் ஒன்றிணைவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அத்துடன் தாங்கள் 152சபைகளில் நேரடியாகவே ஆட்சி அமைப்பதற்கு முடியும் என்றும் 115சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டிய தருணத்தில் ஆட்சி அமைப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தமக்கு வழங்கிய ஆணையை தடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தாங்கள் தயாராக உள்ளதாகவும் தம்மிடத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளதாகவும் அவர் மிரட்டல் பாணியில் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு முன்னதாகவே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, தாங்கள் ஆட்சி அமைப்பதற்கு இடையூறு அளித்தால் பதிலடியாக தாங்களும் இடையூறுகளை ஏற்படுத்துவோம் என்று எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகின்றது.
ஆக, கொழும்பு மாநாகர சபை உள்ளிட்ட நாடாளவிய ரீதியில் ஆளும், எதிர்த்தரப்புக்கள் ஆட்சியை அமைப்பதற்கான குடுமிச்சண்டையில் ஈடுபட்டுள்ளமை வெளிப்படையாகின்றது.