உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் பூர்த்தி அடைந்திருக்கின்ற நிலையில் நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு தடவை ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.
ஜனாதிபதி அநுரகுமார, ஜனாதிபதி தேர்தலின்போதும், அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்தி சட்டத்தின்
முன்நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தார்.
பின்னர், ஜனாதிபதி அரியாசனத்தில் அமர்ந்ததன் பின்னர், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னதாக உயிர்த்தஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரியை வெளிப்படுத்துவேன் என்று அறிவித்தார்.
அத்தோடு நின்றுவிடாது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிராசர மேடைகளில் தனது கட்சியான ஜே.வி.பியை முன்னிலைப்படுத்துவதற்காக பிரசன்னமாகிய அநுரகுமார தெய்வேந்திரமுனையிலிருந்து கிழக்கே கிண்ணியா வரையிலும் அந்த சூளுரைப்புக்கு உயிரழித்தே வந்திருந்தார்.
இதனால், பேராயர் ரஞ்சித் ஆண்டகை முதல் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களித்திலும் எதிர்பார்ப்புக்கள் வலுத்தன. இதற்கிடையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் எஸ்.எம்.பண்டார என்ற கான்ஸ்டபிளை மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராசிரியர் ரவிந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் பிள்ளையானையும் அவரது சாரதியையும் கைது செய்துவிட்டு அந்த விசாரணையில் உயிர்த்தஞாயிறு தாக்குதல் விடயம் சம்பந்தமாக அவர்களிடத்தில் தகவல் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால பாராளுமன்றதில் அறிவித்திருந்தார்.
எனினும், கடந்த 21ஆம் திகதி எந்த அறிவிப்புக்களும் வெளியாகவில்லை. மாறாக அதற்கு முன்தினம் 20ஆம்
திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் ஆவணங்கள் அடங்கிய தொகுதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பை மட்டுமே வெளியிட்டிருந்தது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்தாவதாக பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும் யமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வளவு தான் நடைபெற்றிருக்கின்றது. இங்கே பாதிக்கப்பட்டவர்களுக்கன நீதி லைநாட்டப்படவில்லை.
பேராயர் ரஞ்சித் ஆண்டகைக்கும் ஏமாற்றம் தான். அதனால் அவரால் எதனையும் செய்ய முடியாது ஏழு கோரிக்கைகளை பகிரங்கமாக விடுத்திருக்கின்றார்.
தற்போது சூத்திரதாரிகளை அடையாளப்படுத்தும் விடத்தினை கைவிட்டுள்ள அநுரகுமாரவும் அவரது தோழர்களினதும் அரசாங்கம் பேராயர் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கப்போவதாக அறிவித்திருக்கின்றார்கள்.
ஆக, இம்முறையும் பாதிக்கப்பட்டவர்கள் வெற்றுக்கையுடன் நிற்கையில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரத்தினை அநுர அரசும் சூட்சுமமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை வைத்து மேற்கொள்கின்றனது என்பது உறுதியாகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 24 முதல் ஏப்ரல் 4ஆம் திகதி வரையில் நடைபெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தொடரின்போது இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பற்றி விடயம் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை.
எனினும், அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அமைச்சரவையில்; ஐ.நாவை ஏற்பதில்லை என்று தீர்மானம் எடுத்து உடனடியாகவே குறித்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழுவை அனுப்பியது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எந்தவொரு தீர்மானத்தினையும், முன்மொழிவுகளையும், ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்தது. தேசிய பொறிமுறையில் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கும் என்று குறிப்பிட்டது.
அதன்பின்னர் பிரித்தானியா ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வர் மீது தடை அறிவிப்புக்கைளைச் செய்யவும், உடனடியாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்கை அழைத்து அரசாங்கம் கடிந்து கொண்டது.
இவ்வாறு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நிராகரிக்கும் அரசாங்கம் உள்நாட்டில் படைவீரர்களை பாதுகாக்கும் செயற்பாட்டில் கடந்த காலத்தில் இருந்து அரசாங்கங்கள் போன்றே மிகத் தீவிரமாக இருக்கின்றது.
இவ்வாறான நிலையில் உயிர்த்த ஞாயிறு விடயத்தினை எடுத்துக்கொள்கின்றபோது அதிலும் படையினர் தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்பது இதுகால விரையிலான விசாரணைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதாக இருக்கின்றது.
அவ்வாறிருக்கின்றபோது, பேராயர் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைகளையும், கத்தோலிக்க மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அரசாங்கம் நிறைவேற்றுமா என்ற கேள்வி இங்கு எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.
குறிப்பாக, தாக்குதல் சம்பவத்தின் பிரதான செயற்பாட்டாளரான சஹ்ரான் ஹாசீமுக்கும், புலனாய்வு அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்துமாறு பேராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த இரண்டு தரப்புகளுக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்திய முக்கியமான நபர் அசாத் மௌலானா. பிள்ளையானின் தனிப்பட்ட செயலாளராக இருந்த அவர் தப்பியோடி வெளிநாட்டிலிருந்து கொண்டு, சனல்-4 தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் சாட்சியத்தை வழங்கியிருந்தார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சம்பள பட்டியலில் சஹ்ரான் காசிம் இருந்தார் என்ற குற்றச்சாட்டுக்களும்,
அண்மைக்காலங்களில் முன்வைக்கப்பட்டிருந்தன. சஹ்ரானை தனது தேவைக்கு ஏற்ப இராணுவப் புலனாய்வு பிரிவு கையாண்டிருக்கிறது என்ற அந்த குற்றச்சாட்டு வலுவானதாக உள்ளது.
இவ்வாறிருக்கையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு, தாம் யார் யாரையெலாம் பயன்படுத்தியது என்பதை ஒருபோதும் வெளிப்படுத்தப் போவதில்லை. அப்படி வெளிப்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் வந்தாலும், அதுனை மறைப்பதற்கு உயர் மட்ட ஆதரவு கிடைக்கும்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என்று சனல் 4 சுட்டிக்காட்டிய மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மீது விசாரணைகள் முன்னெடுக்கப்படவோ அவரை குற்றவாளி கைது செய்து விசாரணை நடத்தவோ எந்தவொரு தரப்பும் விரும்பப் போவதில்லை. ஏனென்றால் இந்த விவகாரத்தில் பல்வேறு மர்மமான முடிச்சுகள் இருக்கின்றன.
சுரேஷ் சாலே மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், சிக்கிக் கொள்ளக் கூடியவர்கள் பலர் இருக்கலாம். அது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும். புதிய புதிய பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும். இராணுவத்தினர் மத்தியில் அதிருப்தியையும் கோபத்தையும் பிளவுகளையும் உருவாக்கும் அது ஆட்சியாளர்களுக்கு கூட சிக்கல்களை ஏற்படுத்திவிடும் ஆபத்து நிறைந்ததாக உள்ளது.
அதேபோன்று, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கான முழுமையாக நிதி அளித்தவர் என கூறப்படுகின்றவர் இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகளின் தந்தையான மொகமட் இப்ராஹிம் ஆவார். செல்வந்த வர்த்தகரான அவர், 2015பாராளுமன்றத் தேர்தலில், ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியல் வேட்பாளராக போட்டியிட்டிருந்தவர்.
அவர் மீண்டும் அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவாரா என்பதும் கேள்விக்குறியான வியடமாகின்றது.
இப்படியான சூழலில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மூலங்களை கண்டுபிடித்து, விசாரணைகளை முன்னெடுக்க தொடங்குவது என்பது, யதார்த்தத்துக்கு புறம்பானதொரு விடயமாகும். அதனை தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் செய்யப்போவதில்லை.
பேராயர் ரஞ்சித் ஆண்டகை கோருவது போன்றோ, காத்தோலிக்க திருச்சபை வேண்டுவது போன்றோ அரசாங்கம் ஒருபோதும் சிக்கலான விடயங்களுக்குள் சென்று சிக்கிவிடாது. அதற்காக ஷானி அபயசேகரவும், ரவி செனவிரத்னவும் தூண்களாக இருப்பார்கள்.
அதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய விசாரணையை இழுத்தடித்துக் கொண்டு நடத்தவே முயற்சிக்குமே தவிர, சிக்கலான விடயங்களுக்குள் கால் வைத்து, விசாரணைகளை நிறுத்த வைக்கின்ற அளவிற்கு செல்லாது.
அதேபோன்று, உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீன வழக்குதொடுநர் விசாரணை
பொறிமுறையையும் அரசாங்கம் ஒருபோதும் முன்னெடுக்கப்போவதில்லை. இதற்கு காரணம், சட்டமா அதிபர் திணைக்களம் கோபத்துக்கொண்டு விடும் என்பதும், தமிழ் மக்களும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக இவ்வாறான கோரிக்கையை விடுப்பார்கள் என்பதாலும் ஆகும்.
ஆகவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயங்கள் வெறுமனே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பிரசார துருப்பாகவே இருக்கப்போகின்றதே தவிரவும் நீதியை நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கான முனைப்பு மிக்க செயற்பாட்டை அடியொற்றியதாக இருக்கப்போவதில்லை.