இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் இலங்கை விஜயம் இந்திய, இலங்கை இருதரப்பு அரசுகளுக்கு கூட்டு நன்மைகளை பரஸ்பரம் அளித்துள்ள நிலையில் தமிழர்களுக்கு அது எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பது மிக முக்கியமான கேள்வியை ஏற்படுத்தியிருக்கின்றது.
தமிழன விடுதலைக்கான பயணத்தின் ஆரம்பத்தில் தேசிய இனப்பிரச்சினையை இந்தியாவே கவனத்தில் கொண்டது. தமிழ் மக்களுக்காக இந்தியாவே இலங்கையுடன் ஒப்பந்தம் செய்தது. குறிப்பாக, இந்திய தரப்பிலிருந்தே ஒப்பந்தத்துக்கான கோரிக்கை வலுவாக வந்தது.
அப்போதைய ஜே.ஆர். அரசாங்கத்தினை அச்சுறுத்தி தான் இலங்கையை பணிய வைத்தது. அதற்கு எடுத்துக்காட்டு தான் 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தமாக இருக்கின்றது. இந்திய அரசாங்கம் அத்துமீறி யாழ்ப்பாணத்தில் உணவுப் பொட்டலங்களை போட்டு அபாய சமிக்ஞையைக் காண்பித்ததால் தான் ஜே.ஆர்.ஜயவர்த்தன பணிந்தார்.
ஜே.ஆர்.ஜயவர்த்தனா ஒப்பந்தத்திற்கு சென்ற சூழலை ‘இந்தியா வலது கரத்தை ஓங்கிக் கொண்டு வந்தது. நான் வலது கரத்தைப் பற்றிக் கொண்டேன். இடது கரத்தையும் ஓங்குமா? எனப்பயந்தேன். இரண்டு கரங்களையும் பற்றிக் கொணடேன்’; என்று பின்னாளில் வர்ணித்திருந்ததை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால் தற்போது இடதுசாரித்சித்தாந்தத்துடன் ஆட்சியில் இருக்கும் அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்துடன் அணுகுமுறைகளைச் செய்கின்றபோது இந்தியாவுக்கு அவ்விதமான நெருக்கடிகளை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கவில்லை. கள யதார்த்தத்தை இலகுவில் புரிந்துகொண்ட அநுரவும் அவரது தோழர்களும் இந்தியப் பிரதமர் மோடியின் கைகளை மட்டுமல்ல முழுமையாகவே அவரை வாரி அணைத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை – இந்திய ஒப்பந்தம் இலங்கையின் மனவிருப்பின்றி எழுதப்பட்டதால் அதனை நடைமுறையில் நிறைவேற்ற இலங்கையின் எந்தவொரு அரசாங்கங்கங்களும் முன்வரவில்லை. இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின்படி உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தத்திலும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பலவற்றை பிடுங்கி எடுக்கப்பட்டுள்ளன.
அவ்விதமான நிலையில் அநுர அரசாங்கத்துடன் புதிய ஒப்பந்தங்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பக்கள் இல்லை. ஆனால் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தங்கள் பங்காண்மை ஒப்பந்தங்கள். இந்தியாவின் பிராந்திய சக்தியை பலப்படுத்தும் ஒப்பந்தங்கள்.
இதனால், இலங்கை சீனா பக்கம் சாய்ந்து கொண்டு இந்தியாவை சமாழிக்க முற்பட்ட கடந்த காலம் மறைந்து போக, இந்தியா பக்கம் சாய்ந்து நின்று கொண்டு சீனாவை சமாழிக்கும் புதிய காலம் வரப்போகின்றது. இது சீனாவுக்கு ஒருவகையில் ஏமாற்றம் தான்.
நிலைமைகள் இவ்வாறிருக்க, பிரதமர் மோடிக்கும், தமிழ்த் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் இரண்டு விடயங்களே மிக முக்கியமானவை. அதில் முதலாவது இலங்கை இந்திய அல்லது தமிழக மீனவர்கள் விவகாரம். இது வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விடயமாகும்.
குறிப்பாக, தமிழக மீனவர்கள் தொடர்பான பிரச்சினையில் பந்தை தமிழ்த் தலைவர்களிடமும், மீனவர்களிடமுமே இந்தியப் பிரதமர் தட்டிவிட்டிருக்கின்றார். குறித்த விவகாரம் அரசாங்கங்கள் பற்றிய பிரச்சினையல்ல இரு நாட்டு சகோதரர்களுக்க இடையிலான பிரச்சினை எனக்கூறியிருக்கின்றார்.
ஆகவே இரு சகோதரர்களும் இப்பிரச்சினையை பேசித்தீர்மானிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கின்றார் பிரதமர் மோடி. ஆனால் தனது நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறும், கைப்பற்ற படகுகளை விடுவிக்குமாறும் வேண்டுகோள் பகிரங்க விடுத்திருக்கின்றார்.
இந்திய எல்லையைக் கடந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது பற்றியோ, வடபுல மீனவர்களின் வலைகள் அறுத்தெறியப்படுவது பற்றியோ எதுவும் கூறப்படவில்லை. குறைந்தபட்சம் வடபகுதி மீனவர்களின் இழப்புகளுக்கு கவலை கூட தெரிவிக்கவில்லை.
இழுவை மடிப்படகுகளை தடை செய்வது குறித்து பரிசீலிப்போம் என்றும் கூறியிருக்கின்றபோதும் நீண்ட போரினால் நலிவடைந்துள்ள மக்களை குறித்த சட்டவிரோத மீன்பிடி முறையால் சீரழிவது பற்றி நன்கறிந்தும் அதற்கான அனுதாபம் எதனையும் தெரிவிக்கவில்லை.
வடபகுதி தமிழ் மீனவர்கள் ஒரே நேரத்தில் தமிழக மீனவர்களின் அத்துமீறலுக்கும் சிங்கள மீனவர்களின் அத்துமீறலுக்;கும் முகம் கொடுக்கின்றனர். இத்தகைய அத்துமீறலினால்;; மீனவர்கள் பலர் தொழிலைக் கைவிடுகின்ற நிலையும் உருவாகி வருகின்றது. ஆனால் பிரதமர் மோடி அவ்விடயத்தினை ஆழமாக கையாள முனையவில்லை.
இதனால் சினமடைந்துள்ள வடபகுதி மீனவர்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். மீனவர்கள் விவகாரத்தனை அதியுச்சமாக கையிலெடுத்துள்ள அரசாங்கம் வெட்கித்தலைகுனிய வேண்டுமென அவை சாடியிருக்கின்றன.
தேசிய மக்கள் சக்தியின் தமிழ் முகவர்களுக்குத் தான் இதனால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பகுதிகளில் அவர்களின் முக்கிய வாக்குத் தளம் மீனவர்கள் தான் பாராளுமன்றத் தேர்தலில் ‘இந்திய மீனவர்களின் அத்துமீறலை நிறுத்துவோம்’; என்று வாக்குறுதி அளித்தே வாக்குகளை பெற்றிருந்தனர். இப்போது பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு அமைவாக தமிழக மீனவர்களை விடுதலை செய்யும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
இவ்விடயத்தில் வடக்கு தமிழ்த் தலைவர்களையும் மீனவர் அமைப்புக்கள் விட்டு வைக்கவில்லை. தமிழ்த் தலைவர்கள் சோரம் போயிருக்கின்றனர் எனக்கூறியிருக்கின்றன. மீனவர் விவகாரம் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் பெரிய பாதிப்பையே கொடுக்கப் போகின்றது. சமூகரீதியாக தமிழ்ச் சமூகத்தில் வலிமையான சமூகம் மீனவர் சமூகம் தான். மீனவர் சமூகம் சிதைந்தால் தமிழ்த் தேசிய அரசியலும் சிதைகின்ற நிலையே உருவாகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அடுத்து, இந்தியப் பிரதமருடனான தமிழ்த்; தலைவர்களின் சந்திப்பும் பெரிய நம்பிக்கையை கொடுக்கவில்லை. இலங்கையின் இறைமை, ஆள்புலம் பேணப்படுவதோடு தமிழரின் சமத்துவமும் உரிமையும் பேணப்பட வேண்டும் என்பது தமது கொள்கையென இந்தியா தொடர்ச்சியாகவே கூறிவருகின்றது. இதில் இலங்கையின் இறைமை, ஆள்புல மேன்மைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழர்களின் சமத்துவத்திற்கும் உரிமைக்கும் கொடுக்கின்றார்களா? என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.
தமிழர்களின் விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார்கள் என்றால் குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தில் அதிகாரங்கள் வலிந்து மீளப்பெற்றிருப்பதை தடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த நிகழ்வுகளின்போது இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டேயிருந்தது 13ஆவது திருத்தம் பற்றிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு இல்லை இந்தியாவிற்கு தான் இருக்கின்றது. ஏனென்றால் இந்தியாவே தமிழர்களுக்காக கையொப்பமிட்டது.
அதேநேரம், தமிழ்த் தலைவர்களும் வழக்கம் போலவே 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று கூறியிருக்கின்றன. அதேவேளை சமஷ;டித் தீர்வை பெறுவதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றன. சமஷ;டி தீர்வுக் கோரிக்கையை இந்தியப் பிரதமர் பெரிதாக கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. எனவே தமிழர்களின் அடிப்படை அபிலாiஷகள் பற்றிய விடயத்தில் இந்தியா ஆழமாக கவனம் செலுத்தவில்லை.
அதேநேரம், கஜேந்திரகுமார் மட்டும் வித்தியாசமான கருத்தை முன் வைத்திருந்தார். 13ஆவது திருத்தத்தை அரசியல் தீர்வாக ஒருபோதும் ஏற்க முடியாது. அது ஒற்றையாட்சிக்குட்பட்டது அதிகாரப்பகிர்வு எதனையும் அது கொண்டிருக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாரப் பகிர்வு இல்லை என்பதை இலங்கை நீதிமன்றங்களே ஏற்றுக் கொண்டிருக்கின்றன என்பதையும் கூறியிருக்கின்றார்.
இந்திய தேசியப் பாதுகாப்புக்கு எதிராக ஒருபோதும் நாம் செயல்பட மாட்டோம். தமிழர் தாயகத்தில் இந்திய முதலீடுகளை நாம் வரவேற்போம் ஆனால் இந்திய அபிவிருத்திகள் மாவட்ட சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றக்கூடாது என்றும் கூறியிருக்கின்றார். இலங்கை – இந்தியா ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றோம் 13ஆவது திருத்தத்தை எதிர்க்கின்றோம் என்றும் கூறியிருக்கின்றார்
உண்மையில் இந்தியா நோக்கிய தமிழ் அரசியலின் அணுகுமுறை இவ்வாறு தான் இருக்க வேண்டும். அந்த வகையில் அவரின் துணிச்சலான கூற்றை வரவேற்கலாம். இன்னும் தெளிவாக கூறுவவதாக இருந்தால் தமிழர்கள் இந்திய நலன்;களுக்கு எதிராக நிற்கப்போவதில்லை. ஆனால் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரித்தையும், இறைமையையும் கைவிடமாட்டோம் என்பது தான்.
தமிழின விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவைக் கையாளுதல் என்பது இதனை அடியுறுத்தியதாகவே இருக்க வேண்டும். ஆகவே தற்போதைய நிலையில் மூன்று தரப்பை மட்டும் தமிழர் தரப்பாக இந்திய கருதுகின்ற நிலையில் அம்மும் மூர்த்திகளும் அதற்கான வியூகங்களை சரியாக வகுப்பாளர்களா?
அதற்கான பதில், இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்;த் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தரப்பின் கைகளில் தான் உள்ளன.