பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதானியும், இராணுவத்தின் முன்னாள் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒவ் தி ப்ளீட் வசந்த கரன்னாகொட இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெகத் ஜயசூரிய மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயகத்தின் இராணுவத்தளபதியும் பின்னர் அவ்வியக்கத்துக்கு எதிராக இலங்கை இரா7ணுவத்தின் சார்பாகச் செயற்படும் துணை இராணுவப் படையான ‘கருணா குழு’வை வழிநடத்தியவருமான ‘கருணா அம்மான்’ என்று அறியப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது பிரித்தானிய தடை அறிவிப்புக்களை விடுத்திருக்கின்றது.
பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கான வெளியுறவுச் செயலாளர் டேவிட் லம்மி விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம் மேற்படி நால்வரும், இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை ஆகிய குற்றங்களுடன் நேரடியான தொடர்புடையவர்கள் என்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, போரின்போது இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்புக்கூறலைச் செய்வதும், இலங்கையில் தொடரும் தண்டனையிலிருந்து விலக்களிக்கும் கலாசாரத்தைத் தடுப்பதும், இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் மனித உரிமைகள் தொடர்பாக இணைந்து பணியாற்றவும், தேசிய ஒற்றுமைக்கான அவர்களின் உறுதிப்பாடுகளை வரவேற்பதும் தான் இந்த தடைகளின் உண்மையான நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
பிரித்தானிய தடை அறிப்பானது ஓரிரவில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லர் இலங்கையில் தங்கியிருக்கும் போது தான் தடை அறிவிப்பும் வெளியானது.
முன்னதாக, பிரித்தானியாவின் இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கான வெளியுறவுச்செயலர் கத்தரின் வெஸ்ட் கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, பிரதமர், வெளியுறவு அமைச்சர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கில் உள்ள அரசியல் தலைவர்களுடன் மனித உரிமைகள் குறித்து ஆக்கபூர்வமான ஆழமான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
ஆக, கத்தரின் வெஸ்ட்டும், பென் மெல்லரும் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தாங்கள் கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது அநுர அரசாங்கம் அதனை எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுதலித்த நிலையில் தான் குறித்த தடை அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, அநுர அரசாங்கத்துக்கு ‘கடிவாளமிடும்’ பூகோள அரசியலும் அத்தடை அறிவிப்புக்குப் பின்னாலுள்ள முக்கிய அம்சமாகும்.
அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்ட கடந்த ஏழு மாதங்களில் தமிழினத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் சம்பந்தமான விடயங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் உட்பட எந்தவொரு நாட்டுக்கு வெளியிலான முன்மொழிவுகளையும் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கவில்லை. தற்போதும் இல்லை.
மாறாக, சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு என்ற தமது இடதுசாரித் சித்தாந்தத்தை முன்னிலைப்படுத்தி கடந்த கால கறைபடிந்த கசப்புணர்வுகளை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலே அநுரவின் அரசாங்கம் நகர ஆரம்பித்தது. மறுபுறத்தில் சீனாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் அநுர அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் கொண்டிருப்பதால் சர்வதேச நாடுகள் கூட அதனைப் பகைத்துக்கொள்ள ஒருபோதும் விரும்பாது என்ற நிலைமையும் உணரப்பட்டது.
இதனால் பொறுப்புக்கூறலை, நீதியை, நியாயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ‘அனைத்துமே முடிந்துவிட்டது’ என்ற மனோநிலையை ஏற்படுத்திவிட்டது. அத்தகையதொரு நிலையில் பிரித்தானிய அரசாங்கத்தின் தடை அறிவிப்பானது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியிருக்கி;றது.
இந்த தடை அறிவிப்பு பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் தொழிற்கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியாக இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிக்கான போராட்டத்தின் மீதான நம்பிக்கையின் ஒளிக்கீற்றாகவே உள்ளது.
ஆட்சியில் இருக்கும் முறைமாற்றவாதிகளும் சரி, ஏலவே அரசியாசனங்களை அலங்கரித்து மீண்டும் அதற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் தரப்பினரும் சரி தென்னிலங்கையை மையப்படுத்திய எந்தவொரு அரசியல் சக்தியும் தமிழினத்தின் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்த படைத்தரப்பினருக்கோ, அரசில் தரப்பினருக்கோ எதிராக எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதில்லை.
உதாரணமாக, சர்வதேச சமூகத்தின் நெருக்குதலை அடுத்து 15 பிரத்தியேகமான உரிமைமீறல் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2006 ஆம் ஆண்டில் நியமித்த உதலாகம ஆணைக்குழு அறிக்கை, போரின் முடிவுக்கு பிறகு 2011 ஆம் ஆண்டில் அவர் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை, காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்கு 2013 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கை, முன்னைய ஆணைக்குழுக்கள் சகலவற்றினதும் அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 ஆம் ஆண்டில் நியமித்த நவாஸ் ஆணைக்குழு ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்த அறிக்கை என்று போர்க்கால மீறல்கள் தொடர்பிலான பல அறிக்கைகள் கவனிக்கப்படாமல் இருக்கின்றன.
அரசியல் அனுகூலத்துக்காக ‘தெரிந்தெடுத்த முறையில்’ பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கையில் எடுத்திருக்கிறது. உரிமை மீறல்கள் என்று வருகின்றபோது பாரபட்சமின்றி முன்னைய சகல ஆணைக்குழுக்களின் அறிக்கைகளையும் கவனத்தில் எடுக்கக்கூடிய அரசியல் துணிவாற்றல் அரசாங்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது.
இவ்வாறான நிலையில் அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையை விட்டு வெளியேறிவிட்டது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் கொண்டுவர வேண்டியுள்ளது.
இந்தத்தீர்மானத்தினை கனடா, மலாவி, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா ஆகிய இணை அனுரசணை நாடுகளுடன் இணைந்து பிரித்தானியாவே தலைமையேற்று கொண்டுவரவுள்ளது. இந்தப் பிரேரணைய வலுவானதாக மாற்றியமைப்பதற்காக பணியாற்ற வேண்டியது முதலாவது விடயமாகும்.
அதுமட்டுமன்றி, உலக நாடுகள் உலகளாவிய நியாயாதிக்க வழக்குகளிற்கு ஆதரவளிப்பதோடு அவற்றை விரிவுபடுத்தலாம்;, இதன் மூலம் குற்றவாளிகளிற்கு எதிராக சர்வதேச அளவில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நகர்வுகளை எடுக்க முடியும்.
ஆதாரங்களை பாதுகாத்து துஷ்பிரயோகங்களை கண்காணிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் பொறிமுறையான ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம்’ போன்றவற்றை உலக நாடுகளின் ஆதரவுடன் வலுப்படுத்த முயலலாம்.
சர்வதேச நிதி நிறுவனங்களும் உதவி வழங்கும் சமூகத்தினரும் மனித உரிமை விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டாலே நிதி உதவி வழங்க வேண்டும் என்று நிபந்தனைகளை விதிக்குமாறு பல கோரிக்கை முன்வைக்கலாம்.
சர்வதேச நாடுகள் தங்கள் வெளிவிவகார கொள்கையில் பாதிக்கப்பட்டவர்கள் – தப்பிப்பிழைத்தவர்களின் குரல்களை உள்வாங்குவதோடு அதனை மையப்படுத்திய இலங்கையில் இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் கேள்விக்குட்டுத்தலை முன்னெடுப்பதற்கு அழுத்தங்களை பிரயோகிக்கலாம்.
அவ்விதமான நடவடிக்கைகள் மட்டும் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காணப்படுகின்றன. ஆகவே அவற்றை முன்னெடுப்பதன் ஊடாகவே மாறாத ரணங்களை மாற்ற முடியும். பொறுப்புக்கூறலுக்கான அழுத்தங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் பிரயோகிக்க முடியும்.