நாட்டின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்அவசரதேவை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கன்னி வரவு,செலவுத்திட்டத்தின் மீதான விவாதங்கள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்தச் சூழலில் வரவு,செலவுத்திட்டத்தின் ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும், அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ புதிய அரசியலமைப்பு சம்பந்தமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் எமது வரவுசெலவுத் திட்டத்தில் அனைத்து மக்களும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்  நிவாரண வழங்கலுக்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எந்தத் தரப்பினரும் புறக்கணிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, வரவு செலவுத்திட்டத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.புதிய யாப்புருவாக்கம் குறித்து ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத்  தேர்தலிலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, புதிய அரசியலமைப்பு  ஒன்று உருவாக்கப்படும் வரை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அதிகரிக்காமலும், குறைக்காமலும் எவ்வித மாற்றமில்லாத வகையில் செயற்படுத்தப்படும். சிறந்த வாய்ப்பு கிடைக்கப் பெறும் முதல் சந்தர்ப்பத்தில்  பொதுமக்களின் அபிப்ராயங்களுக்கும், பாராளுமன்ற ஆலோசனைக்கும் போதுமான காலவகாசம் வழங்கப்பட்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம்,அதற்கு தயாராகவே உள்ளோம் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

அதேநேரம், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு முன்னர் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் புதிய அரசியலமைப்பை சிறந்த முறையில் இயற்ற முடியும். ஆகவே தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கமைய, புதிய யாப்பினை உருவாக்குவோம் என்றும் அவர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தினார்.

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது தான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து அதலபாதாளத்தை அடைவதற்கு இலஞ்சம், ஊழல்மோடி போன்று இனப்பிரச்சினைக்கான தீர்வின்மையும் பிரதான காரணம் என்பதை இன்னமும் அரசாங்கம் உணரவில்லை என்பது தான் வருத்தத்திற்கு உரியதாக இருக்கின்றது.

குறிப்பாக, 28ஆண்டுகாலமாக நடைபெற்ற உள்நாட்டு போரினால் ஏற்பட்ட விளைவுகள் பொருளாதாரம் சீர்குலைவதில் எவ்வளவு தூரம் தாக்கம் செலுத்தியுள்ளது என்பதை அநுரவுக்கும், அவரது அரசாங்க சகபாடிகளுக்கும் தரவுகளுடன் வேறாக விளக்க வேண்டியதில்லை.

அதுமட்டுமன்றி, வடக்கு,கிழக்கு மக்கள் இன்னமும் தேசிய பொருளாதாரத்தில் பங்களிப்புச் செய்யக்கூடிய இயலுமையைக் கொண்டிருக்கவில்லை என்பதும் அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும்.

அதுமட்டுமன்றி, உள்நாட்டு போர்காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி மில்லியனுக்கும் அதிகமான தமிழர்கள் சர்வதேச நாடுகளில் இருக்கின்றார்கள். இவர்களில் பலர் அந்தந்த நாடுகளில் செல்வாக்குச் செலுத்தவல்ல பதவி நிலைகளிலும், வியாபாரங்களிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

அத்தயவர்கள் இலங்கையின் தேசிய பொருளாதார மீட்சியில் பங்களிப்புச் செய்வதற்கான மனோநிலையை கொண்டிருக்கவில்லை. காரணம், அவர்கள் இன்னமும் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே உள்நாட்டில் நடத்தப்படுகின்றார்கள் என்றே கருதுகின்றார்கள்.

அவ்வாறு நடத்தப்படுவதற்கு 22தடவைகள் திருத்தப்பட்ட ‘ஒற்றையாட்சி’ முறைமையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பே காரணம் என்றும் சுட்டிக்காட்டுகின்றார்கள். ஆகவே அத்தரப்பினரின் நம்பிக்கையை அரசாங்கம் வெல்ல வேண்டுமாக இருந்தால் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகின்றது.

அவ்வாறில்லாது, பொருளதாரத்தில் மீட்சியை சந்தித்ததன் பின்னரேயே புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்று திடமாக அரசாங்கம் இருக்குமக இருந்தால் அதற்கு முற்பட்ட பொருளாதார மீட்சிக்கான பங்களிப்பில் வடக்கு,கிழக்கு, மட்டுமல்ல புலம்பெயர் தமிழர்களும் பங்கேற்கப்போவதில்லை என்பது திண்ணம்.

அவ்விதமான நிலையில் மீண்டும், தமிழ் மக்களினதும் அவர்களின் நீட்சியாக இருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களினதும் பங்களிப்பல்லாதே அரசாங்கம் தனது நகர்வுகளைச் செய்ய வேண்டியதாக இருக்கும். இது ஆரம்பத்திலேயே ஒரு இனக்குழுமத்தினை தவிர்த்துச் செல்வதையே வெளிப்படையாக காண்பிக்கின்றது.

எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றயமைக்க வேண்டியது அவசியமாகின்றது. அவர்கள் ஜனாதிபதி, மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் குறிப்பிட்டது போன்று புதிய அரசியலமைப்பானது, அனைத்து இனக்குழுமங்களின் பங்கேற்புடனும், பொருளாதார மீட்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.

அதுமட்டுமன்றி, இலங்கையின் வரலாறு பூராகவும் அனைத்து இனக்குழுமங்களின் பங்கேற்புடன் அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட்டதற்கான நிலைமைகள் காணப்பட்டதில்லை. ஆனால் தற்போது அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்தப் பொன்னான சந்தர்ப்பத்தை பொருளாதாரத்தின் பெயரால் அநுர அரசாங்கமும் சீர்குலைத்து விடக்கூடாது.

மேலும், பேராசிரியர் ஜயதேவ உயன்கொட புதிய அரசியலமைப்பக்கான அவசியம் பற்றிக் கூறுகையில், ‘இலங்கையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான விவாதம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய அரசிலமைப்பொன்றின் பண்பு, உள்ளடக்கம் என்பன எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இனங்காண்பதற்கு அது புதுப்பிக்கப்பட்டிருக்கும் பின்னணியைப் புரிந்து கொள்வது முக்கியமாகும். மக்களின் தன்னெழுச்சியான ஆட்சிமாற்றப்போராட்டத்தின் போது அதற்கான குரல் காத்திரமாக இருந்தன என்று குறிப்பிடுகின்றார்.

அத்துடன், போராட்டகளத்தின் பங்கேற்பாளர்கள் இலங்கையின் அரசியல் முறைமை, ஆட்சி முறைமை, அரசியல் கட்டமைப்பு என்பன தொடர்பில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். நடைமுறையிலுள்ள அரசியல் முறைமை தொடர்பிலான விரக்தியும் விமர்சனத்தின் வெளிப்பாடுதான் ‘முறைமை மாற்றம்’வேண்டும் என்ற கோசம் வெளிவந்தது.

அத்தோடு, புதிய அரசியற் கலாசாரமொன்று வேண்டும் என்று சொன்னதும், இப்போது இருக்கின்ற அரசியற் கட்சிகள் மீதும் அரசியல்வாதிகள்; மீதும் நம்பிக்கை வைக்க முடியாது என்று சொன்னதும். மிகவும் சீர்குலைந்த சனநாயகமொன்று இலங்கையின் ஜனநாயகத்தின் அம்சங்காகவே பார்க்க வேண்டியுள்ளது.

சீர்குலைந்த ஜனநாயகம் பற்றிய கடுமையான விமர்சனமொன்று வெளிவந்து புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில்; பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகத்தை மையமாகக் கொண்ட பணிகள் காத்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.

அதுமட்டுமன்றி,போராசிரியர் ஜயதேவ உயன்கொட, இலங்கையில் புதிய அரசியலமைப்பு  செயற்பாடொன்றைப் பற்றிச் சிந்திக்கும் போது, தாராளமய ஜனநாயத்தையும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தையும் கைவிடாமல், அவற்றைப் பேணிச் செல்வதுடன், நேரடி மற்றும் குடியரசு ஜனநாயகங்களின் அம்சங்களை ஆக்கபூர்வமாக எவ்வாறு இணைத்துக் கொள்ளலாம் என்பதற்கான கலந்துரையாடல் அவசியம். ஆனால் இன்னமும் அக்கலந்துரையாடல் இலங்கையில் தோன்றவில்லை என்று கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

போராசிரியரின் கருத்துக்கள் இவ்வாறிருக்கையில், வடக்கு,கிழக்கு மக்களின் ஆணைபெற்றுள்ள தமிழ்க் கட்சிகளின் ஒட்டுமொத்த பிரதிநிதிகளினதும் கோரிக்கைகளும் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கான தீர்வினை காண்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தான்.

அந்த வகையில் அரசாங்கம் பொருளாதார மீட்சிக்கான பயணத்தினை அனைத்து இனக்குழுமங்களின் பங்கேற்புடன் முன்னெடுப்பதற்கு ஏதுவாக, அரசியலமைப்புக்கான கலந்துரையாடல்களை பிற்போடாமல் ஆரம்பிப்பது தான் சரியானதொரு முன்னகர்வாக இருக்க முடியும்.

இடதுசாரித் சித்தாந்தத்தை அடிப்படையில் கொண்டிருக்கும் அரசாங்கம், சமவுரிமையை பிரஜைகளுக்க வழங்குவதை தமது அடிப்படையான கொள்கையாக கொண்டிருக்கின்ற நிலையில், இந்த இலக்கினை அடைவதற்கான முதற்படியாக  புதிய அரசியலைமைப்பு உரையாடலை ஆரம்பிப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

காலங்கள் தாழ்த்தப்படுகின்றபோது, இனத்துவ, மதத்துவ அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்ற தரப்புக்களின் மீள் எழுச்சி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளுக்கு பெருந்தடையாக மாறிவிடுவதற்கும் அதிகமான வாய்ப்புக்களே உள்ளன. இதனைக் கடந்து செயற்படுவதென்பது மிகப்பெரும் சவாலாக அரசாங்கத்துக்கு இருக்கும்.