‘வன் டெக்ஸ்ட் இனிஷியேட்டிவ்’ அமைப்பின் ஏற்பாட்டில் ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்தின் கன்னி வரவு,செலவுத்திட்டம் பற்றிய துறைசார்ந்த மற்றும் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் அண்மையில் கலந்துரையாடலொன்று கொழும்பு கோட்டேயில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் சுருக்கத் தொகுப்பு வருமாறு,
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தனது அறிமுக உரையில், “இலங்கையின் பொருளாதார உத்திகள் கடந்த இரண்டு தசாப்தங்களாக, நுண்பாக மற்றும் பேரண்டப் பொருளாதார அணுகுமுறைகளுக்கு இடையிலான வேறுபாட்டை பிரதிபலிக்கின்றன. அங்கு நுண்பாகப் பொருளாதாரக் கொள்கைகள் பெரும்பாலும் தாராளமயமாகவுள்ளன, அதேநேரத்தில் நுண்பாக பொருளாதாரக் கொள்கைகள் நலத்திட்டங்களாகவும் துறை சார்ந்தவையாகவும் உள்ளன. அந்த வகையில் தான் தற்போது தேசிய மக்கள் சக்தி தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025இற்கான வரவு, செலவுத்திட்டமும் அதேமுறைமையைப் பின்பற்றுவதாக உள்ளது.
இந்த வரவு,செலவுத்திட்டமானது சந்தை ஒழுங்குமுறைக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில் விநியோகத் தேவையின் இயக்கவியல் மற்றும் திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளையும் அதிகளவில் நம்பியுள்ளது. இருப்பினும் பல பங்குதாரர்கள் போட்டியிடும் சூழலில் அவர்களுக்கான நலன்களுக்கு முன்னுரிமைகள் அளிக்கப்படுகின்ற நிலையில் அவர்களை தெரிவு செய்வதற்கான ஒழுங்குமுறையின் அளவுகள் தெளிவாகவில்லை.
அதேநேரம், வரவு,செலவுத்திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத்துறையினர் விளிம்புநிலைக்குச் செல்லும் நிலைமைகள் காணப்படுகின்றன. நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மீள்விநியோகத் தேவை ஆகிய விடயங்களில் முன்மொழிவுகள் சிக்கல்களை எழுப்புகின்றன என்ற கவலைகள் உள்ளன. முக்கியமாக சில வரவு,செலவுத்திட்ட முன்மொழிவுகள் முரண்பாடாகத் தோன்றுகின்றன.
உதாரணமாக கூறுவதாக இருந்தால் தேசிய வரவு,செலவுத்திட்டத்தில் 47சதவீதமான வருமானம் ஈட்டுபவர்களை முன்னிலையில் உள்ள 20சதவீதமானவர் கட்டுப்படுத்தப்படுத்தும் நிலைமைகள் காணப்படுகின்றது இதனை ஏற்றுக்கொண்டாலும் அரசாங்கம் சொத்து வரிகளை இரத்து செய்துள்ளமையானது முரண்நகையாகும்.
அதனைத் தவிர்த்து ஜேர்மனின் சமூகச் சந்தைப் பொருளாதாரம் போன்ற மிகவும் சமநிலையான மாதிரியை பின்பற்றுவது ஒரு பயனுள்ளதும், செயற்பாட்டில் வெற்றியளிக்கக் கூடியதுமாகும். அரசாங்கம் முக்கிய இலக்குகளுடன் பேரண்டப் பொருளாதார நிலைத்தன்மை கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, அவற்றில் 5சதவீதமான பொருளாதார வளர்ச்சி, குறைந்த பணவீக்கம் மற்றும் வட்டி வீதங்கள், நடப்புக் கணக்கு பற்றாக்குறை சுமார் 2சதவீதம், சர்வதேச நாணயத் திட்டத்தின் கீழ் வருவாய் இலக்குகளை அடைதல் மற்றும் முதன்மை உபரியை அடைதல் என்பன முக்கியமாகின்றன.
இருப்பினும், சில விடயங்கள் விதிவிலக்குகளாக உள்ளன. சாவதேச நாயண நிதியத்தின் எதிர்வு கூறலுடனான கணிப்பின் பிரகாரம் வரவு,செலவுத்திட்டத்தில் 5.2சதவீதம் துண்டுவிழும்தொகையாக இருக்கின்ற நிலையில் அரசாங்கத்தின் முன்மொழிவில் துண்டுவிழும்தொகையானது 6.7சதவீதமாக காணப்படுகின்றது.
கொள்கை ரீதியான விடங்களை வெளிப்படுத்தியுள்ளமையானது நேர்மறையான அம்சமாக இருக்கின்றபோதும் வருமானத்துக்கான இலக்குகள் கவலையளிப்பவையாகவே உள்ளன. அரசாங்கம் வரிகளில், குறிப்பாக வாகன இறக்குமதிகளுக்கான வரிகளுக்கு வலுவான முக்கியத்துவத்தை அளித்துள்ளது, இது வருமான இலக்குகளை அடையவதற்கு தவறிவிடும் பட்சத்தில் மூலதனச் செலவினங்களில் குறைப்புக்களை ஏற்படுத்தக்கூடும்.
இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளுடன் ஒப்பிடும்போது கடன்களின் அளவுகள் அதிகமாக உள்ளன, இந்நிலையானது, நிதிச் சந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதோடு தனியார் முதலீடுகளை எதிர்மறையாக பாதிக்கக்கூடிய ஆபத்துக்களையும் கொண்டிருக்கின்றது.
வரவு,செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட பல சீர்திருத்தங்கள் தெளிவற்றதாகவே உள்ளன. உதாரணமாக, அரசாங்கம் மூலோபாய கூட்டாளர்களுடன் இணைந்த தாராளமயமாக்கல் பற்றி குறிப்பிட்டுள்ளது, ஆனால் அந்தக் கூட்டாளர்களாக இருக்கப்போவது எந்த நாடுகள் என்பதை குறிப்பிடவில்லை. அவை கிழக்காசிய நாடுகளா, மத்திய ஆசிய நாடுகளா என்று எதனையும் வெளிப்படுத்தவில்லை.
அதேNhபன்று திருகோணமலையில் உள்ள எரிபொருள் சேமிப்பு தாங்கிகளின் மேம்பாடு மற்றும் பொதுநிருவாகத்துறை ஆகியவற்றை மறுசீரமைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் தெளிவற்றவையாகவுள்ளன. அத்துடன், அந்தத் திட்டங்கள் பற்றிய தெளிவற்ற நிலைமையானது அத்திட்டங்கள் வரும் ஆண்டில் செயற்படுத்தப்படுமா என்பது குறித்து சந்தேகங்களை எழுப்புவதாகவுள்ளது.
மற்றொரு முக்கிய விடயமாக இருப்பது நீண்டகால மேம்பாட்டுத் திட்டம் இல்லாமையாகும். இடதுசாரிப் பொருளாதார திட்டமிடலில் பொதுவாகக் காணப்படுமொரு நடைமுறையானது ஐந்தாண்டுக் கொள்கையாகும். அந்தக் கட்டமைப்பிற்குள் தான் தேசிய மக்கள் சக்தியின் வரவு, செலவுத் திட்டம் வடிவமைக்கப்படும் என்று பலர் எதிர்பார்த்தனர். அதற்கு நேர்மாறாக, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வளர்ந்துவரும் நாடுகளைப் போன்று 2038, 2045 மற்றும் அதற்குப் பிறகும் நீண்ட கால பொருளாதார இலக்குகளைக் கொண்டுள்ளதாகவே முன்மொழிவுகள் காணப்படுகின்றன.
இறுதியாக, பொதுப்படையாக காணப்படும் வரவு,செலவுத்திட்டத்தினை நடைமுறைச்சாத்தியமாக்குவது தொடர்பிலான தீவிரமான கவலைகள் உள்ளன. முன்மொழிவுகளின் பிரகாரம் சீர்திருத்தங்கள் மீது உண்மையிலேயே நம்பிக்கை கொண்டவர்களால் செயற்படுத்தப்படாது விட்டால் அவற்றின் வெற்றி நிச்சயமற்றதாகவே இருக்கும். இந்த நிலைமையை கட்டாயத் திருமணம் என்று கூறலாம். ஏனென்றால் கட்டாயத் திருணமத்தில் உண்மையான உணர்வுக்கு எந்தளவு முக்கியத்தும் இருக்கும் என்பதை அனைவரும் அறிவீர்கள்” என்றார்.
தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், போர் முடிந்ததிலிருந்து நாங்கள் தொடர்ந்து கூறிவரும் முக்கிய கவலை என்னவென்றால், வடகிழக்கு மக்கள் நாட்டின் பிற பகுதிகளுடன் உண்மையிலேயே சமமாக இருக்கிறார்களா என்பது தான். வடகிழக்கு பகுதியை போரால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக அங்கீகரிப்பதற்கும், முதலில் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதிலும் ஆதரிப்பதிலும் கவனம் செலுத்துவதற்கும் கொள்கை அளவிலான முடிவு தேவையாகவுள்ளது.
கடந்த காலத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை வலுவான சலுகைகளைப் பெற்றது, ஆனால் இப்போது தான் வடக்கு,கிழக்கில் புலம்பெயர்ந்தோர், இளைஞர்களிடையே அதிகரித்த ஆர்வம் காரணமாக இந்தத் தொழில்துறை வளரத்தொடங்குகிறது. அரசாங்கம் வடகிழக்கு பகுதியின் தேவைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். அப்பிராந்தியத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணையாகக் கொண்டுவருவதற்கான முழுமையான அணுகுமுறையை எடுக்கும் ஒரு குறிப்பிட்ட கொள்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
தமிழ் சமூகத்தின் ஏமாற்றம், அவர்களால் போட்டியிட முடியாது என்ற உணர்விலிருந்தும், அவர்களின் பொருளாதார நிலைமையை நிவர்த்தி செய்ய எந்த அர்த்தமுள்ள முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என்பதிலிருந்தும் உருவாகிறது.
இந்தப் பிராந்தியத்தின் கடின உழைப்பாளிகள் பற்றிய வரலாற்றுகள் இருந்தபோதிலும், போருக்குப் பின்னரான காலத்தில் வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகக் குறைவாகவே உள்ளது. இத்தொடர்ச்சியான தேக்கநிலை நம்பிக்கையை இழக்க வழிவகுக்கிறது, பலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
எங்கள் குறிக்கோள் நியாயமற்ற கோரிக்கைகளை வைப்பதல்ல, மாறாக வட,கிழக்கு பிராந்தியத்திற்கு நீண்டகால பொருளாதார உள்ளடக்கம் மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்கும் சாத்தியமான கொள்கைகளை முன்மொழிவதாகும்” என்றார்.
இதயைடுத்து ஐக்கிய குடியரசு முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, அரசாங்கத்தின் செலவின இலக்கு ஒரு ட்ரில்லியனாக அதிகரித்துள்ளது, ஆனால் முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அரசதுறையின் செயல்திறன்களை மேம்படுத்த கோப் குழு சீர்திருத்தங்களை முன்மொழிந்தது. அதில்,
1,200 பொது நிறுவனங்களின் கணக்காய்வளர் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் தேவையற்ற நிறுவனங்களை மூடுவதற்கான திட்டத்தை உருவாக்குதல், திறமையின்மைச் செயற்பாடுகளை குறைப்பதற்காக சில நிறுவனங்களை இணைத்தல், இலங்கை மின்சாரசபை போன்ற முக்கிய நிறுவனங்களை மறுசீரமைத்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு பொது-தனியார் கூட்டாண்மைகளை செயற்படுத்துதல், அத்தியாவசியமற்ற பொது நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் போன்றன முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் இன்னமும் தேக்க நிலைமைகளே காணப்படுகின்றன.
இதேநேரம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வருமான மேம்பாடு விடயத்தில் இலங்கை மத்திய வங்கி ‘ஈ-ரூபா’ கொடுக்கல்வாங்கலை அறிமுகப்படுத்த முன்மொழிந்துள்ளது. அதேநேரத்தில் தனித்துவமான அடையாள எண் முறையும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அதற்கு அரசியல் எதிர்ப்பு உள்ளது. ஆனால் குறித்த செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று இறைவரித்திணைக்களம் வருமான வரி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அடையாள எண்ணை அமுலாக்குவதில் சவால்களை உருவாக்கியுள்ளது” என்றார்.
அவரைத்தொடர்ந்து, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் குறிப்பிடுகையில், “முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை தேவைப்படுகிறது, இது வரவு,செலவுத்திட்டத்தில் உறுதி செய்யப்பட வேண்டும். முதலீட்டாளர் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் ஸ்திரத்தன்மை அவசியமாகும்.
கூடுதலாக, ஊழலைத் தடுப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்ப்பது மிக முக்கியமானது. வட,கிழக்கு பொருளாதார ரீதியாக பங்களிக்கும் திறனைக் கொண்டுள்ளது, ஆனால் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பு குறைவாகவே உள்ளது. பிராந்தியத்தை தேசிய பொருளாதாரத்தில் ஒருங்கிணைத்து அதன் வளர்ச்சி திறனைத் மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்தும் கொள்கைகள் மற்றும் முதலீட்டு உத்திகள் தேவையாகவுள்ள” என்றார்.
இத்தோடு பிரதிநிதிகளின் கருத்துக்கள் முடிவுக்கு வரவும், பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, “முன்மொழியப்பட்ட வரி, வருமான வரி திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் வருமான இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குறிப்பிட்டு கலந்துரையாடலை ஆரம்பித்தார். வரித் திருத்தம், உள்ளுர் வரி நடைமுறைகளுக்கு இணங்க வேண்டியிருப்பதோடு வெளிநாட்டு நிறுவனங்கள் ஈட்டும் வருமானத்தின் மீது வரிவிதிப்பை அறிமுகப்படுத்துவதாக இருக்கின்றது.
வருமான வரி (உள்நாட்டு வருவாய்) திருத்த சட்டமூலம், பிரிவு 3, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான வரி விதிப்பதை உள்ளடக்கியது. தற்போதைய அமைப்பின் கீழ், அத்தகைய சேவை வழங்குநர்கள் 15சதவீதமான வரி செலுத்துகின்றனர். வணிகங்கள் பொதுவாக இந்த மாற்றத்தை எதிர்க்கவில்லை என்றாலும் முன்னர் வரி செலுத்தாது வருமானம் ஈட்டிய தனிப்பட்ட ஊழியர்கள் இப்போது பாதிக்கப்படுகின்றனர். இதனால் வரிச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள நிறுவனங்கள் இடம்பெயரக்கூடும் என்பதால், துறைமுக நகரத்தில் உள்ள நிறுவனங்களின் நிலைமை மோசமடையக்கூடும், இது வரித் தவிர்ப்பு ஓட்டைகளை கண்டறிந்து நிறுவனங்கள் செயற்படுவதற்க வழிசமைக்கும் ஆபத்துக்களை உருவாக்கின்றது” என்றார்.
குறித்த டிஜிட்டல் வரிக் கொள்கை இலங்கை நிறுவனங்கள் வெளிநாடுகளில் விரிவடைய ஊக்குவிக்கும் அதேவேளையில், அமுலாக்கம் குறித்த கவலைகளையும் எழுப்புகிறது என்றும் இருப்பினும் இந்த வரிவிதிப்பு மாதிரிக்கு ஆசிய இணைய கூட்டணி ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது என்றும் முன்னள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி எடுத்துரைத்தார்.
நெதர்லாந்து மூலம் பணம் செலுத்துதல்கள் செயற்படுத்தப்படுவதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பரிவர்த்தனைகளை திறம்பட கண்காணிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டிய சம்பிக்க ரணவக்க டிஜிட்டல் வரியை அமுல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த கவலைகளை எழுப்புகிறது என்று குறிப்பிட்டார்.
குறித்த நிறுவனங்கள் அரசாங்க விதிமுறைகளை எதிர்க்கக்கூடும், இது அமுலாக்கத்தை சவாலாக மாற்றுகிறது என்று கூறிய பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இந்தியா அதன் பொருளாதார செல்வாக்கு மற்றும் ஒழுங்குமுறையில் உள்ள வலிமை காரணமாக குறித்த வரி அமுலாக்கத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், “1948 முதல், ஒவ்வொரு அரசாங்கமும் ஒரு வரவு,செலவுத்திட்டத்தினை முன்வைத்துள்ளன, ஆனால் விமர்சனங்கள் இருந்தபோதிலும், குறிப்பிடத்தக்க விளைவுகள் எதுவும் அடையப்படவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் போது, நிதி முகாமைத்துவத்துடனான ஒரு பொருளாதார பிரிவு ஒரு வரைபடத்தை உருவாக்கியது. (தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்)
அதுவொரு மிகச்சிறந்த முன்னுதாரணம். தற்போது ஒரு காலத்தில் பயங்கரவாதக் குழு என்று முத்திரை குத்தப்பட்ட ஜே.வி.பி., வரவு,செலவுத்திட்டத்தினை முன்மொழிந்துள்ளது. அதில் அதிக துண்டுவிழும்தொகை காணப்படுகின்றது. அதற்கு கடந்த கால அரசாங்கங்களின் தோல்விகளும் காரணமாகிறது. ஆகவே கடந்த கால தவறுகளை மீண்டும் செய்வதற்குப் பதிலாக, பாகுபாடற்ற மற்றும் பயனுள்ள அனைத்து மக்களையும் உள்வாங்கிய வரவு,செலவுத்திட்டத்தினை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் என்று வலியுறுத்தினார்.
ரவிகரனின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறிக்கொண்ட முன்னாள் அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா, தற்போதைய வரவு,செலவுத்திட்டம் சரியான பாதையைக் காட்டுகிறதா, கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தெளிவான தீர்வை வழங்கவில்லையா? என்ற கேள்விகளை” எழுப்பினார்.
கடன்களை மீளச்செலுத்தும் செயன்முறையானது, 2028இல் ஆரம்பிக்கவுள்ள நிலையில், நீண்டகால நிதி திட்டமிடலின் அடிப்படையில் பார்க்கும் போது தற்போதைய வரவு,செலவுத்திட்டம் எங்கு செல்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார்.
அவரையடுத்து, தொழிற்சங்கங்களின் பார்வைக்கோணத்தை தாமரா தயானி வெளிப்படுத்தினார். அவர், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் பார்வையில், நாங்கள் ஒரு முறையான மாற்றத்தை எதிர்பார்த்தோம், ஆனால் வரவு,செலவுத்திட்டம் அதனை வழங்கத் தவறிவிட்டது. 1.6மில்லியன் பேர் பணியாற்றும் அரசதுறையில் அவர்களில் 80சதவீதமானவர்கள் அரசாங்கத்தை ஆதரித்தனர். இந்நிலையில் அரசதுறையில் 30சதவீதமானவர்கள் சாதாரண பணியாளர்களாக உள்ள நிலையில் அவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் வரவு,செலவுத்திட்டம் வழங்கவில்லை. வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சம்பள உயர்வு தோல்வியடைகிறது, மேலும் அர்த்தமுள்ள மாற்றத்திற்கான எங்கள் கனவுகள் நனவாகவில்லை என்று ஆதங்கப்பட்டார்.
இறுதியாக, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கம் குறிப்பிடுகையில், தெற்கிலும் வடக்கிலும் சிந்தனை செயல்முறைகள் மிகவும் வேறுபட்டவை. அரசாங்கம் உற்பத்தித்திறன் பற்றிப் பேசுகிறது, ஆனால் வடக்குக் கண்ணோட்டத்தில், அவ்விடயத்தில் சிறிய முன்னேற்றம் மட்டுமே உள்ளது.
வவுனியாவின் முதன்மை வருமான ஆதாரங்களான விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற காணப்படுகின்ற நிலையில் அதற்கான முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான நீர்ப்பாசனக் குளங்கள் பழுதுபார்க்கப்படாமல் உள்ளன, ஆனால் வரவு,செலவுத்திட்டத்தில் அவற்றின் புனரமைப்பு பற்றி கவனத்தில் கொள்ளப்படவில்லை.
அதேநேரம், நாட்டின் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் மிகப்பெரிய சவால் துறைசார்ந்த திறமையான தொழிலாளர்களின் இடம்பெயர்வாகும். மேலும் அணுகுமுறைகளின் இணக்கமின்மை காரணமாக முந்தைய அரசாங்கத்தின் கொள்கைகளின் பிரகாரம் பயணிக்க முயன்றால் கட்டாய திருமணம் தோல்வியடையக்கூடும்.
ஆகவே, தீவிரமான கொள்கை மாற்றங்கள் இல்லாமல், பொருளாதார மாற்றம் சாத்தியமில்லை, இதனால் இலங்கை குறைந்த வருமானத்தை ஈட்டுகையில் நெருக்கடியில் சிக்கிக்கொள்ளக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.












