இந்தியா, சீனாவுடன்அநுரவின் அணுகுமுறை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோக பூர்வமான விஜயம் நிறைவுக்கு வந்திருக்கின்றது.

இந்த பயணத்தின் போது மிகமுக்கியமான பல உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன என்ற தகவல்கள் நாளாந்தம் வெளிவந்த வண்ணமுள்ளன.

கடந்த செப்ரெம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு தனது முதலவாது வெளிநாட்டுப் பயணத்தை உத்தியோக பூர்வமாக மேற்கொண்டிருந்தார்.

இந்தப் பயணத்தின்போது வெளியிடப்பட்ட, இந்திய இலங்கை கூட்டறிக்கையில் இரு நாடுகளுக்கு இடையில் பல்வேறு விடயங்களில் இணைந்து பணியாற்றுவது குறித்த முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.

ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு சங்கடம் ஏற்படக்கூடாது என்பதற்காக 13ஆவது திருத்தச் சட்டத்தினைக் கூட இந்தியா நேரடியாக வலியுறுத்துவதை தவிர்த்து அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப் படுத்துமாறு தனது இராஜதந்திர மொழிமாற்றத்தைச் செய்திருந்தது.

அதற்குப் பிரதியுபகாரமாக அநுர அரசாங்கம் கிழக்கிலங்கையில் 33திட்டங்களை முன்னெடுப்பதற்கான உடன்பாடுகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவை அனுமதியை உடனடியாக வழங்கியதோடு, ‘எட்கா’ குறித்தும் பேச்சுக்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு பச்சைக்கொடி காண்பித்திருந்தது.

இந்த விடயங்கள் எல்லாம், இந்திய எதிர்ப்புவாதத்தினை முன்னெடுத்து பழக்கப்பட்ட ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மாற்றமாக கருதப்பட்ட நிலையில் தான் அநுரகுமார சீனாவுக்கான பயணத்தினை நிறைவு செய்துள்ளார். இதனால் குறித்த உத்தியோக பூர்வமான பயணம் பேசுபொருளாகியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் உள்ள இலங்கைத் தீவை, தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஆதிக்கப் போட்டி நிலவி வருகிறது.

இலங்கையின் மூலோபாய அமைவிடம் காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இது ஒரு முக்கியமான போட்டியாக மாறியிப்பதோடு இது எதிர்வரும் காலத்தில் வலுப்பெறுவதற்கான சாத்தியப்பாடுகளே அதிகமுள்ளன.

குறிப்பாக, இலங்கையை மையப்படுத்தி தமது செல்வாக்கை கட்டியெழுப்புவதற்காக ஏட்டிக்கு போட்டியாக முதலீடுகளை செய்வது தான் சீனாவுக்கும், இந்தியாவுக்குமான நோக்கமாக இருக்கின்றது என்பது வெளிப்படையான விடயமாகின்றது.

முன்னதாக, இலங்கையின் ஆட்சியாளர்கள் தமது ஆட்சியிருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக காலத்துக்கு காலம் ஏதோவொரு நாட்டின் பக்கம் சார்ந்து செயற்பட முனைந்ததன் விளைவாக, மற்றைய நாட்டின் அதிருப்தியை சம்பாதித்து கொண்டார்கள்.

காலப்போக்கில் இதுவொரு இராஜதந்திரப் பிரச்சினையாக மாறி தற்போது தீவிரமான நிலையை அடைந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் சீனாவையும், இந்தியாவையும் சமாளித்து இரண்டு நாடுகளுக்கும் பொதுவானதொரு, நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களின் முயற்சி வெற்றிபெற்றதாக இல்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப்பொறுப்பில் இருந்த சொற்பகாலத்தில் சீனாவையும், இந்தியாவையும் சமநிலைப்படுத்துவதற்கான முயற்சியை எடுத்தார். ஆனால் உணர்வுபூர்வமான அந்த முயற்சியில் அவரால் முன்னகர்ந்து செல்ல முடிந்திருக்கவில்லை. ஆதனால் இராஜதந்திர அனுபவமும், ஆற்றலும் இருந்தும் வெற்றி பெறமுடியாத தலைவராகவே அவரும் இருந்ததோடு இந்திய சார்பாளர் என்றே அடையாளப்படுத்தப்பட்டார்.

இவ்வாறான நிலையில் ஆட்சிக்கு வந்திருக்கும் அநுரகுமார இடதுசாரி, மார்க்சிஸ்ட் என்றெல்லாம் அடையாளப்படுத்தப்பட்டவர். அவர் சீனாவுக்கு சார்பாக இருப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. தற்போதும் அவ்விதமான நிலைமையே காணப்படுகின்றது.

ஆனால், அநுர இந்திய விஜயத்தின்போது அவர் நெகிழ்வுப் போக்கை கையாண்டு டில்லியை பகைத்துக் கொள்ளாத வகையில்- அதற்கு சார்பான முறையில், செயற்பட இணங்கினார். அவரது இந்த நகர்வு புதுடில்லி பயணத்தை வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு அடிப்படையாக அமைந்தது.

இவ்வாறான நிலையில், சீனப் பயணத்தின் போது மிகப்பெரிய முதலீடுகளை பெற்றுக் கொள்வதில் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றிருக்கிறார். 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன. அவற்றில் மிகச்சிலவற்றைப் பற்றிய தகவல்களே வெளிவந்திருக்கின்றன.

அரசாங்கம் உரிய காலத்தில் மேலதிக தகவல்களை அவர் வெளிப்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன. வெளிப்படுத்தாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஏனென்றால் சீனாவும் சரி, இலங்கையின் இப்போதைய அரசாங்கமும் சரி முற்றுமுழுதாக வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கும் தரப்புகள் இல்லை என்பதும் பரகசியமான விடயமாகும்.

எவ்வாறாயினும், இந்தப் பயணத்தின் போது அம்பாந்தோட்டையில் 3.7பில்லியன் டொலர்கள் பெறுமதியான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று, அரச ஊடகங்களான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், மற்றும் லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனம் ஆகியவற்றை டிஜிட்டல் மயப்படுத்தும் உடன்பாடும் எட்டப்பட்டுள்ளது.

இதனைவிடவும், சீன ஊடகக் குழுமம் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடல்.

சீன சுங்கக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இடையீட்டில் இலங்கையிலிருந்து கோழி இறைச்சி சீனாவுற்கு ஏற்றுமதி செய்வதற்கான நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கை முறைகளுக்கு அமைய மேற்கொள்வதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடல்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறியளவிலான மீனவர்களுக்கு 35.7 மில்லியன் யுவான்கள் செலவில் சீனாவினால் அவசர உதவிகள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிடுதல்

இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வருமானம் குறைந்த மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள், பொருத்து வீடுகள் அரசி போன்ற உதவிகளை வழங்குவதற்கு இடமளித்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கான உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்தோடு, சீனாவுடனான சுதந்திரவர்த்தக உடன்படிக்கையையும் கைச்சாத்திடுவதற்கான பேச்சுக்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இலங்கை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய தரப்புடன் தான் சுதந்திர வர்த்தக உடன்பாட்டைக் கொண்டிருப்பதோடு தாய்லாந்துடன் அதுகுறித்த பேச்சுக்களை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.

இதனைவிடவும், ஜனாதிபதி அநுரவின் சீன விஜயத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அறிவிப்பில் 500 மில்லியன் யுவான் மானியம் வழங்குவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கும் அப்பால், சீனாவினால் இ      லங்கைக்கு வழங்கிய கடன்கள் சம்பந்தமான மறுசீரமைப்பினை விரைந்து நிறைவுக்கு கொண்டுவருவதற்கும், முதலீடுகளை பூர்த்தி செய்வதற்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

இந்த இணக்கமானது, அநுர அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்தகட்ட உதவிகளைப் பெறுவதற்கு தடையாக காணப்பட்ட கடன்மறுசீரமைப்பு விடயத்தினை முடிவுக்கு கொண்டுவருதற்கு பெரும் உதவியாக அமையப்போகின்றது.

இவ்வாறான நிலையில், அநுரவின் இந்திய விஜயத்தினையும், சீன விஜயத்தினையும் ஒப்பிட்டுப்பார்க்கின்றபோது, சீனாவுடனான உடன்பாடுகள் ஒருபடி மேலாகவே தான் இருக்கின்றன.  இந்த நிலைமையானது செயற்கையாக தோற்றுவிக்கப்பட்டதல்ல.

இலங்கையில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட ஜனாதிபதி அநுரவை சீன விமானமே அழைத்துச் சென்றது முதல் மீள அவரை அவ்வாறே அழைத்து வந்து விட்டமை உட்பட சீனாவில் அவருக்கு அங்கு வழங்கப்பட்ட பெருமெடுப்பிலான வரவேற்புக்கள் உள்ளிட்ட அனைத்தும் வெளிப்படுத்தி நிற்கின்றன. இத்தகையதொரு நிலைமையில் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய இந்தியாவையும், ஆசியாவில் செல்வாக்குச் செலுத்தவல்ல சீனாவையும்  ஜனாதிபதி அநுர எவ்விதமாக கையாளப்போகின்றார் என்பது தான் பெரும்கேள்வியாகியுள்ளது.