கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!

பங்களாதேஷில் ஏற்பட்ட இளைஞர்கள் புரட்சியைத் தொடர்ந்து பதவி விலகுவதாக அறிவித்திருக்கின்றார் பிரதமர் ஷேக் ஹசீனா.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உயிருக்குப் பயந்து எவ்வாறு ஓடித்தப்பினாரோ அவ்வாறு தான் ஷேக் ஹசீனாலின் அரசியலும் முடிவுக்கு வந்திருக்கின்றது.

பதவியை உதறிய பின்னர், நாட்டைவிட்டுத் தப்பியோடியிருக்கும் அவருக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துக் காத்திருக்கின்றது.

பங்களாதேஷை ஒரு தசாப்தத்துக்கும் மேலாகச் கட்டியாண்டு, தனிப்பெரும் ராணியாக வாழ்ந்த பிரதமர் ஹசீனா பதவிவிலகி இருக்க இடமின்றி இன்னொரு நாட்டுக்குத் தப்பியோடியமைக்கு, இளைஞர்கள் தங்களின் எதிர்கால தொடர்பில் கொண்டிருந்த அச்சமான நிலைதான் பிரதான காரணம் என்றால் அதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை .

தெற்காசியாவில் வேளை வாய்ப்புகள் மிகக்குறைவாக ஏற்படுத்தப்படும் நாடுகளில் ஒன்றான பங்களாதேஷில் அண்மையில் வேலைவாய்ப்பு ஒதுக்கிட்டுச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு அரசாங்க வேலையில் 30 வீதமான ஒதுக்கிட்டை வழங்குவதற்கு அந்தச் சட்டம் வழிவகைகளை ஏற்படுத்தியது.

ஏற்கனவே வேலையில்லாத திண்டாட்டத்தில் இருந்த பங்களாதேஷ் இளைஞர்களுக்கு இந்தச் சட்டம் வெந்தபுண்ணில் வேலாகப் பாய்ந்தது. இதுதான் பங்களாதேஷில் இன்றுபற்றியெரிந்து கொண்டிருக்கும் பெரும் காட்டுத் தீக்கான ஆரம்பப் பொறி .

பங்களாதேஷின் நிகழ்காலம், இலங்கையின் நிகழ்காலத்தைப் பிரதியெடுத்தாற்போல் தான் இன்று காணப்படுகின்றது. இலங்கையில் அரசுவேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருடங்கள் கடந்து விட்டன. பொருண்மியச் சுமையாலும் வரியேற்றங்களாலும் தனியார்துறையும் நாளுக்குநாள் நலிவு நிலையையே எதிர்கொண்டுள்ளது.

வேலைவாய்ப்பின்மை, வேலை இழப்புகள், ஊதிய உயர்வின்மை, வேலை தொடர்பான நிச்சயமற்ற நிலை இவைதான் இன்று இலங்கை இளைஞர்களுக்குப் பெரும் தலைவலியான விடயங்கள். இவ்வாறானதொரு பின்னணியில் தான் ஜனாதிபதித் தேர்தலுக்கு இலங்கை தயாராகிக் கொண்டிருக்கின்றது.

ஆனால், இலங்கை இளைஞர்களுக்கு மீண்டும் ஓர் அரகலயவோ அல்லது பங்களாதேஷில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதுபோன்ற பெரும் கலவரங்களோ இன்று அவசியமற்றவை. ஏனெனில் தங்களின் எதிர்ப்பை ஜனநாயக வழியில் வெளிப்படுத்த இளைஞர்களுக்கு தற்போது ஆகப்பெரும் வாய்ப்பொன்று ஜனாதிபதித் தேர்தல் வழியாகக் இட்டியிருக்கின்றது.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் போக்குவரத்துச் சுமைகளும், வேலைவாய்ப்பற்ற நிலையும் இல்லாமல் செய்யப்படும் என்ற வாக்குறுதியை ஷேக் ஹசீனா வழங்கியிருந்தார்.அவை நிறைவேற்றப்படாத நியாலயில், வெறும் இரண்டு மாதங்களே,அவரால் புதிதாக ஆட்சியமைத்த பின்னர் நிலைக்க முடித்திருக்கின்றது.

இலங்கையிலும் இப்போது ஏராளம் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டுக்கொண்டிருக்கின்றன ‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ் செய் வாக்கானனே தங்கமான வாக்கை எனக்குத்தா’ என்று பாடாத குறையாக, ஏட்டிக்குப்போட்டியாக வாக்கைப் பெறுவதற்காக, ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்குறுதிகளை விளாசிக் கொண்டிருக்கின்றனர். இலங்கை இளைஞர்களுக்கு அரசு புதிதல்ல இந்தப்புரிதல் ஜனாதிபதி கேட்பாளர்களுக்கு இருந்தால், கோத்தாபயவுக்கும், ஷேக் ஹசீனாவுக்கும் நிகழ்ந்த கறியைத் தவிர்க்கலாம்.