இலங்கையில் 1947 ஆம் ஆண்டுமுதல் இற்றைவரை ஆட்சிகள் மாறியுள்ளன, பல காட்சிகளும் மாறியுள்ளன. ஆனால் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் அவலங்கள் தொடர்பான காட்சிகள் மட்டும் இன்னமும் மாறவே இல்லை.
தலையில் கூடை சுமந்தகாலம் முதல் கூன் விழுந்து ஓய்வுபெறும்வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு என்பது இல்லை. தொழில்சார் உரிமைகளையும், சலுகைகளையும் போராடியே பெறவேண்டிய நிலை. அந்தளவுக்கு பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்வாக அடக்குமுறை தலைவிரித்தாடுகின்றது.
அவ்வப்போது ஓரிரு அடக்குமுறைச் சம்பவங்கள் தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் அம்பலமாகும், பொங்கியெழுந்து படம் காட்டும் அரசியல் தலைமைகள், அம்மக்களுக்கு அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
இந்நிலைமைக்கு விதிதான் காரணமென விதிமீது பழி சுமந்துவிட்டு மக்கள் ஒதுங்கிவிடமுடியாது, வாங்கிவந்த வரம் எனக்கூறியும் வலிகளை தாங்கும் வாழ்க்கையை தொடர்ந்து வாழவும் கூடாது. இந்நிலைமைக்கு தமது இயலாமையும் காரணம் என்பதை மக்கள் ஏற்க வேண்டும். தமக்குள்ள வாக்குரிமையின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். அதுவே மாற்றத்தின் ஆரம்பமாகவும், மலையக விடியலுக்கான ஒளிக்கீற்றாகவும் அமையும்.
இலங்கையில் 1982 ஆம் ஆண்டு முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றபோது மலையக மக்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. 1948 இல் வாக்குரிமை பறிக்கப்பட்டதால் அவர்கள் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டனர்.
1988 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது வாக்குரிமை கிடைக்கப்பெற்றது. ஆனால் மலையக மக்களின் வாக்குரிமை பிரச்சினை 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே முழுமையாக தீர்ந்தது.
1988 தேர்தலின்போதும் காணி உரிமை, வீட்டுரிமை மற்றும் சம்பள உரிமை தொடர்பில் பேசப்பட்டது. 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போதும் மேற்படி விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. எனினும், 94 இல் சந்திரிக்கா ஆட்சிகாலத்தில் முதன்முறையாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு பதவி உருவாக்கப்பட்டது. மாறாக எதுவும் நடக்கவில்லை.
அதன்பின்னர் 1999, 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போதும் காணி உரிமை ,வீட்டுரிமை மற்றும் சம்பள உரிமை தொடர்பான பல்லவிகள் பாடப்பட்டன. தேர்தல்களின் பின்னர் அவை கிடப்பில் போடப்பட்டன.
இந்நிலையில் 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது பிரதான கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே மேற்படி உறுதிமொழிகளை உள்ளடக்கி இருந்தன. நல்லாட்சி காலத்தில் தனி வீடுகள் கட்டப்பட்டாலும் உரிய உரித்துடனான காணி உரிமை வழங்கப்படவில்லை. அதுவும் இந்திய வீட்டு திட்டமே முன்னெடுக்கப்பட்டது.
2019 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போதும் காணி உரிமை, வீட்டுரிமை என்பவற்றுக்கு மேலதிகமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள் எனவும், மலையகத்தில் உள்ள தரிசு நிலங்கள் தோட்டப் பகுதி மக்களுக்கே உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பகிர்ந்தளிக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போதும்கூட காணி உரிமை, வீட்டுரிமை மற்றும் சம்பளப் பிரச்சினை என்பன பேசுபொருளாக மாறியுள்ளன.
மலையகத்தை மையப்படுத்தி இயங்கும் – செயற்படும் அரசியல் கட்சிகளுள் ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பனவே நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளன.
இவற்றில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி, இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி என்பன தமிழ் முற்போக்கு கூட்டணியாக செயற்படுகின்றன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனியாக செயற்படுகின்றது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் 8 ஆம் திகதி சஜித்துடன் இது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் முற்போக்கு கூட்டணியினர் கைச்சாத்திடவுள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்கும் என தெரியவருகின்றது. தேசிய சபையே இறுதி முடிவெடுக்கும் என அக்கட்சி உறுப்பினர்கள் கூறி வந்தாலும் இதொகா, ரணில் உறவு உறுதியாகிவிட்டது.
எனவே, இம்முறையாவது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்களுக்கு அரசியல், பொருளாதார மற்றும் சமூகவிடுதலையைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் மலையக கட்சிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவற்றை மையப்படுத்தி பேரம் பேசுதலில் ஈடுபட வேண்டும். மறுபுறத்தில் மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும், தேர்தல் காலத்தில் கிடைக்கும் சலுகைகளைவிட, போலி வாக்குறுதிகளைவிட, உரிமைகளே முக்கியம் என உணர்ந்து அதற்குரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.
அத்துடன், மலையக மக்களுக்கு சம்பளப் பிரச்சினை மட்டும்தான் உள்ளது என உருவாக்கப்படும் மாயையையும் தகர்த்தெறிய வேண்டும்.
தென்னிலங்கையில் உள்ள பிரதான கட்சிகளினது மட்டுமல் அல்ல மலையக கட்சிகளின் தலைவிதியையும் நிர்ணயிக்கபோகும் தேர்தலாகவே இது அமையவுள்ளது. எனவே, மக்களை வைத்து தமக்கான சுயநல அரசியல் நடத்தாது, மக்களுக்கான அரசியலை நடத்த மலையக தலைமைகள் முன்வராவிட்டால் அடுத்த பொதுத்தேர்தலில் ஆப்பு நிச்சயம் என்பதை நாம்கூறிதான் தெரியவேண்டும் என்றில்லை.