தமிழ்த் தேசியத்துக்கு பேரிழப்பு!

இலங்கையில் இடதுசாரிகளுக்கு எல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவரும், தமிழர்களே இலங்கையின் தொன்மைக்குடிகள் என்று தெற்கில் அச்சமின்றி திரும்பத் திரும்ப உரைத்துக் கொண்டிருந்தவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன எம்மை விட்டு பிரிந்துசென்றுள்ளார். அவருக்கான இறுதிக்கிரியைகளும் நடைபெற்று முடிந்துள்ளன.

கருணாரட்னவின் மறைவு என்பது தனியே தென்னிலங்கை சிங்கள அரசியல் தலைவர் ஒருவருடையதோ இடதுசாரித் தலைவர் ஒருவருடையதோ மறைவு அல்ல. மாறாக ‘தமிழ்த் தேசியத்தின்’ பேரிழப்பு.

சிங்கள அரசியல் சித்தாந்தங்களால் நிரம்பப் பெற்றுள்ள இலங்கையின் அரசியலில், கலாநிதி விக்ரமபாகு கருணா ரட்ன ‘சேற்றுக் குளத்தில் மலர்ந்த செந்தாமரை’ 50 வருட கால அரசியல் அனுபவம்கொண்ட அவர், இலங்கையின் பல்வேறு இனப்பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களின் போது சிங்கள -பௌத்த சித்தாந்தத்தின் போக்குகளை வன்மையாகக் கண்டித்தவர்.

1962ஆம் ஆண்டு அக்காலத் தில் இடதுசாரிக் கொள்கையைக் கொண்டிருந்த சம சமாஜக் கட்சியில் இணைந்து அரசியலுக்குள் கால்பதித்த கருணாரட்ன, தனது சுய கொள்கையில் என்றும் விடாப்பற் றுடன் இருந்தார்.

1972ஆம் ஆண்டு. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்கு சமசமாஜக் கட்சி வழங்கிய ஆதரவையடுத்தும். அரசமைப்பு மறுசீரமைப்பை அவர் சார்ந்த கட்சி ஏற்றுக் கொண்டதையடுத்தும் ‘சுயகொள்கைக்கு’ முதலிடம் கொடுத்து, கட்சியில் இருந்து வெளியேறி நவசமசமாஜக் கட்சி என்பதைத் தோற்றுவித்தார். அன்றுமுதல் அவர் இறக்கும் இறுதிநாள் வரையில், சிங்களப் பேரினவாதம் எத்தனையோ பேரம்பேசல்களையும், மிரட்டல்களையும் விடுத்தபோதிலும், தமிழர்களின் சுயாட்சியையும், இலங்கைத்தீவின் பூர்வக் குடிகள் தமிழர்கள் என்பதையும் அவர் ஓயாது வலியுறுத்தி வந்தார்.

ரூபாவாலும், டொலராலும் தீர்மானிக்கப்படமுடியாததாகத்தான் கருணாரட்ணவின் கொள்கைகள் அமைந்திருந்தன. அதனால்தான் அவரால் இன்றைய அரசியல் தலைவர்களைப்போன்ற பகட்டான வாழ்க்கையை வாழ முடியவில்லை.

அவருடைய கட்சியும்சரி, அவருடைய அரசியல் வாழ்வும்சரி நலிந்தே காணப்பட்டன. அக்கினி யுடன் சங்கமமாகும் வரையிலும் அவருடைய கொள்கைப் பிடிப்பில் கருணாரட்ன கம்பீரமாகவே இருந்தார். அதில் அவர் வெற்றியும் கண்டார். ஆனால், கருணாரட்ணவின் விடயத்தில் பெரும் தோல்வி ஏற்பட்டது தமிழ்த் தேசி யத்துக்குத்தான்.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனித்த மறுவருடமே (2010) இலங்கைத்தீவு ஜனாதி பதித் தேர்தல் ஒன்றை எதிர்கொண்டது. அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பொதுவேட்பாளரான பொன்சேகா இவர்களுடன், தமிழர்களின் விடிவுக்காகப் போராடிக்கொண்டிருந்த விக்ரமபாகு கருணாரட்னவும் தேர்தலில் களமிறங்கினார். தமிழர் தாயகத்தின் வாக்குகள் பொன்சேகாவுக்கு அள்ளி வழங்கப்பட்டன.

கருணாரட்ன வால் வெறும் 7 ஆயிரத்து 55 வாக்குகளையே பெறமுடிந்தது. இன்று பொதுவேட்பாளர் என்று சிந்திக்கும் தமிழ்த் தேசியத் தலைமைகள் அன்று இடதுசாரித் தலைவர் என்ற முடிவை எடுத்திருந்தால் கருணாரட்னவுக்கான கெளரவம் என்றோ வழங்கப்பட்டிருக்கும். ஆனால், வெள்ளம் வீட்டை மேவிய பின்னர் அணைகட்டும் எங்களின் ‘அரசி யல் முதிர்ச்சியாளர்களுக்கு’ அன்று ஓர் இடதுசாரித் தலை மையின் தேவை உணரப்படாமை ஆச்சரியத்திலும் ஆச்சரியமே.

‘இறுதிப் போரில் இராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை. தமிழர்கள் தங்களின் வாக்குகளை எனக்கு அள்ளி வழங்கியமையே இதற்குச் சாட்சியம்’ என்று, பொன்சேகாவால் இன்று புளுகித்தள்ள முடிகின்றது என்றால், அது தமிழ்த் தேசியத் தலைவர்களுடைய தவறின் பிரதிபலிப்பே. இதில் பொன் சேகாவை நொந்துகொள்ள ஏதுமில்லை.

தமிழர்களின் அரசியல் போராட்டமும் அதன்வரலாறும் வழிநெடுகிலும் துரோகங்களாலும், தவறுகளாலும் நெய்யப்பட்ட ஒன்றே. தமிழ்த் தேசியத்தின் பெரு மதிப்புக்குரிய ‘மாமனிதர்’ கலாநிதி விக்ரமபாகு கருணா ரட்னவை தமிழர் தாயகமும் தமிழ்த் தேசியமும் கொண் டாட மறந்த கதையும் அத்தகையதுதான்..!