என்று விடியும் ஜூலையின் இரவுகள்!

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே நாள்களில் இலங்கைத்தீவு பற்றியெரிந்தது. கறுப்பு ஜூலை என்று அடையாளப்படுத்தப்பட்டன அந்த நாள்கள்.
இன்று வரையும் அந்த நாள்களும் சரி, அதற்கான காரணங்களும் சரி, தமிழர்களின் வாழ்வும் சரி தொடர்ந்தும் இருண்மை சூழ் நிலையிலேயே இருக்கின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் திருநெல்வேலி தபால்பெட்டி சந்தியில் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதையடுத்து நாடெங்கிலும் இயல்பாகவே ஒரு பதற்றம் ஏற்பட்டிருந்தது. அதை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்வதைப் போன்று இறந்த சிப்பாய்களுக்கு மிகப்பெரும் எடுப்பில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.

காடையர்கள் மதுவால் உருவேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்தே கொழும்பில் உச்சக்கட்ட வேகத்தில் ஆரம்பித்தது இந்த வெறியாட்டம்.
சுமார் ஒரு வாரத்துக்கும் மேலாக இடம்பெற்ற இந்த மிலேச்சத்தனமாக தாக்குதல்களில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்தனர். பல்லாயிரக் கணக்கானவர்கள் காயமடைந்தனர். இதன் பின்னர்தான் இலங்கைத் தீவில் தமிழர், சிங்களவர் பிரச்சினைகளும் பிரிவினை வாதங்களும் உச்சவேகம் பெறத் தொடங்கின.

ஆனால், எதற்காக இந்தக் கறுப்பு ஜூலை கலவரங்கள் இடம்பெற்றன என்று எண்ணிப் பார்த்தால் அதற்கான காரணங்கள், இன ஒடுக்குமுறைகளும் அடக்குமுறைகளும்தான்.

துயரம் என்னவெனில் இப்படியொரு மிகக் கேவலமான குருதிச் சகதி இடம்பெற்ற பின்னரும், அதன் தோற்றுவாயான காரணங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் அப்படியே தான் இருக்கின்றன.

இன்று தமிழர் தேசத்தில் இடம்பெறும் அத்துமீறல்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. ஏகப்பட்ட வடிவங்களில் பல்வேறு பிரச்சினைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

குருந்தூர்மலை, வெடுக்குநாறி மற்றும் எண்ணற்ற தமிழர் தாயகப் பகுதிகளில் புதிது புதிதாக பௌத்த விகாரைகள், சைவ ஆலயங்கள் மீதான தாக்குதல்கள், சிங்களக் குடியேற்றங்கள், தமிழ்மொழி புறக்கணிப்பு, தனிச் சிங்கள நியமனங்கள், காணி அபகரிப்பு, இராணுவமயமாக்கல், காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், மனிதப்புதைகுழிகள் என்று எண்ணற்ற பிரச்சினைகளை இன்று தமிழர் தாயகம் தாங்கி நிற்கின்றது.

ஆக, எதற்காக இந்தத் தேசத்தில் தமிழ் மக்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் இவ்வளவு பாரதூரமான விரிசல் விழுந்ததோ அந்த விரிசலை நெருக்கமாக்குவதற்குப் பதிலாக இன்னும் பிளவுபடுத்தி’அந்தப்பிரிவினையை தமது வாக்குவங்கியாக்கி ‘தேர்தலிகளில் வென்று ‘ ஆட்சியதிகாரத்தில் குளிர்காயவே சிங்கள- பௌத்த பேரினவாதத்தை உயிர்மூச்சாகக் கொண்ட சிலர் கங்கணம்கட்டி நிற்கின்றனர்.
வரலாறு ஒரு பேராசான். அது ஆகச்சிறந்த கற்பிதங்களை யதார்த்தமாக உணர்த்தும். அதை ஆராய்ந்து அந்த ‘இழிநாள்களுக்கு’என்ன காரணமோ அதைத் தீர்த்து சகோதர மனப்பான்மையையும்
இனப்பன்மைத்துவத்தையும் கட்டியெழுப்புவது தான் ஓர் அரசின் உன்னதமான பணியாக இருக்க முடியும்.

ஆனால், என்ன காரணத்துக்காக கறுப்பு ஜூலை இடம்பெற்றதோ, அதை இம்மியும் தளர்ந்துபோக விடாது மேலும் மேலும் ஊதிப்பெருப்பிப்பதைத்தான் இதுவரை மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் செய்தன. செய்து கொண்டிருக் கின்றன. இந்த மெத்தனப் போக்கில் ஆத்மார்த்தமான மாற்றங்கள் ஏற்படாதபட்சத்தில், ஜூலையின் இரவுகள் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் இருண்டே தான் இருக்கும்.