முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்து,
புதைகுழி மூடப்பட்டிருக்கின்றது.
50க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள், விடுதலைப் புலிகளுடையதாக இருக்கலாம் என்று கருதப்படும் பச்சை நிற உடைகள், சயனைட் குப்பிகள், த.வி.பு. என்று அடையாளமிடப்பட்ட இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், போர் எச்சங்கள் என ஏதோவொரு சம்பவத்தின் சாட்சியத்தை வலுவாகவே அந்தப் புதைகுழி பதிவுசெய்திருக்கின்றது.
புதைகுழிகள் இலங்கைக்குப் புதியன அல்ல. அவற்றின் பால் ஏற்பட்ட பட்டனுபவத்தால், கொக்குத்தொடு வாயில் மனிதப் புதைகுழியொன்று உள்ளதாக 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதன்முதல் வெளிப்படுத்தப்பட்டபோது தமிழர் தாயகத்திலிருந்து பெரும் கவனக்குவிவு இந்தவிடயத்தில் செலுத்தப்படவே செய்தது.
எனினும், நாம் அனைவரும் சந்தேகப்பட்டதைவிடவும், நிபுணர்கள் எதிர்வுகூறியதைவிடவும் பல மடங்கு பெரிதானதாகவும் ஏராளம் தடயங்கள் மற்றும் எச்சங்களைக் கொண்டதாகவுமே புதைகுழி அமைந்திருந்தது.
ஆனால், இறுதிப்போர் தொடர்பான விடயங்கள் எப்போதெல்லாம் வெளிச்சத்துக்கு வருகின்றனவோ -எப்போதெல்லாம் இவ்வாறான விடயங்கள் பேசு பொருள் ஆகின்றனவோ, அப்போதெல்லாம் ஒருவித மெத்தனப்போக்கையே அரசாங்கம் கைக்கொண்டது.
அதன் தொடர்ச்சியாகவே கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்திலும் அரசாங்கம் நடந்து கொள்ள எத்தனித்தது. அதைத்தாண்டியும் மூன்று கட்டங்களாக இந்தப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றால், அதற்குத் தமிழர் தாயகத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட அழுத்தமும் பிரதான காரணம் என்பதை அவ்வளவு இலகுவில் மறுத்துவிடமுடியாது. ஆனால், இதற்கு முன்னரும் எத்தனையோ மனிதப்புதைகுழிகள் தாயகத்திலும் தாயகத்துக்கு வெளியிலும் அவதானிக்கப்பட்டிருக்கின்றன.
இருப்பினும் அந்த மனிதப் புதைகுழிகள் அதிகாரக்கதிரைகளின் அழுத்தத்தால் மூடி மறைக்கப்பட்டனவே அன்றி நீதியானதும் நியாயமானதுமான விசாரணைகளையும் தீர்ப்புகளையும் எதிர்கொள்ளவேயில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்திலும் அவ்வாறான மழுங்கடித்தல்கள் இடம்பெற்று விடாது தடுப்பதற்காக நாம் அனைவரும் ஓரணியிலும் மிகமிக அவதானமாகவும் இருக்கவேண்டிய காலமிது.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மட்டு மல்ல, ஒட்டுமொத்த மனிதப் புதைகுழி விவகாரங் களிலும் சர்வதேசம் தலையிடுவதற்கான ஓர் ஆரம்பப் புள்ளியாகவும் இந்த விவகாரத்தை நாம் மாற்றிக் கொள்ளமுடியும். அதற்குரிய இயலுமை கொக்குத் தொடுவாய் மனிதப்புதைகுழிக்கு இருக்கவே செய்கின்றது.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற 10 நாள்களில் 6 நாள்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி பணிகளை நேரடியாகக் கண்காணித்தார். அமெரிக்கத் தூதரக அதிகாரிகளும், ‘காணாமலாக்கப்பட்டவர்களின் குரல்களுக்காக தாமும் அகழ்வுகளைக் கண்காணிக்கின்றோம்’ என்று தெரிவித்து அகழ்வுப் பணிகளில் கலந்துகொண்டிருந்தனர்.
இவை, இந்த விடயத்தில் சர்வதேசம் கொண்டுள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்தும் நிலையில், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தை மிகமிகத் தீவிரமானதாகவும், பாரதூரமானதாகவும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பேசுபொருளாக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுடையதும், சிவில் சமூகச்செயற்பாட்டாளர்களினதும் பிரதான கடமையாகும். உண்மைகளை வெளிக்கொண்டுவரும் மெய்யான அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கப்போகின்றோமா? அல்லது புதைகுழி புதைந்தேதான் போகப்போகின்றதா? என்பதை நாமும் நம் தலைவர்களும்தான் தீர்மானிக்கவேண்டும்.