சுகாதாரத்துறை சுயபரிசோதனை செய்யுமா?

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி மருத்துவமனையில் ஆரம்பித்து, வடக்கு மருத்துவத்துறையையே ஆட்டம் காண வைத்த மருத்துவர் அர்ச்சுனா விவகாரம் தற்போது நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கின்றது.

மருத்துவர் அர்ச்சுனாவுக்கு எதிராக மருத்துவத்துறை சார்ந்தவர்களால் 5 முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அவை நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன.

யார் மீதெல்லாம் மருத்துவர் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்கணைகள் எய்யப்பட்டனவோ அவை குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மருத்துவர் அர்ச்சுனாவுக்கு மட்டுமல்ல, சுகாதாரத் துறையில் ஊழல்கள், முறைகேடுகள் இருப்பதாக வீதிக்கு இறங்கிய மக்களுக்கும் இனிமேல் தான் உண்மையான சவால் காத்திருக்கிறது.

ஏனெனில் இது தனியே மருத்துவர் அர்ச்சுனா என்ற தனிநபர் மீதான வழக்கல்ல. மருத்துவர் அர்ச்சுனாவின் அளவுக்குமிஞ்சிய வீடியோக்கள், சமூக வலைத்தளப் பதிவுகள், சில அரசியல்வாதிகளுக்குச் சார்பான கருத்துகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மீதான விமர்சனங்கள், யாழ்ப்பாணத்துப்பெண்கள் பற்றிய பிற்போக்குத்தனமான பார்வை, பிற மருத்துவர்களின் கடமைக்கு இடையூறு, ஆதாரமற்ற குற்றச் சாட்டுகள் எனத் திடீரென எழுச்சி பெற்ற அவரது நாயக விம்பத்தைச் சிதைக்கும் சில விடயங்கள் அவராலேயே உருவாக்கப்பட்டன தான்.

ஆனால் அவற்றையெல்லாம் ஓரமாக வைத்து விட்டுப்பார்த்தால், சுகாதாரத்துறை தொடர்பில் அர்ச்சுனா உண்டாக்கிய அதிர்வலை மிகப்பல மானது. எவராலும் எதிர்த்துப் பேசமுடியாத ஒரு துறையாகவே சுகாதாரத்துறை இருந்து வந்தது.

குறிப்பாக அண்மைக்காலமாக இடம்பெற்ற பல மருத்துவத்தவறுகள் தொடர்பில் காத்திரமான நடவடிக் கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் இருந்தே வந்தது.

அத்துடன் நோயாளிகளை அரச மருத்துவமனைகளில் வேண்டாத விருந்தாளிகளாகக் கையாளும் மருத்துவர்கள், அதே நோயாளிகளை தனியார் மருத்துவமனையில் இராஜ உபசாரத்தோடும், தேனொழுகும் வார்த்தைகளோடும் மருத்துவம் செய்வதையும் பார்த்து மனதுக்குள் புழுங்கிய படி தான் மக்கள் இருந்தனர். அந்த மன அவசங்களை – புழுக்கங்களை- அந்தரிப்பை-மடை திறந்த வெள்ளம் போல வெளிப்ப டுத்த மருத்துவர் அர்ச்சுனாவின் ‘உள்ளகக் கிளர்ச்சி’ மக் களுக்கு உதவியது.

அதனாலேயே அவர்கள், எந்தவொரு பிரதிபலனுமின்றி, யாருடைய தூண்டுதலுமின்றி மருத்து வர் அர்ச்சுனாவுக்காகப் போராட வீதிக்கு வந்தார்கள்.

தெற்கில் அரகலய ஆட்சியையே அசைத்ததைப் போன்று, வடக்கில் ‘அர்ச்சுனாவுக்கான போராட்டம்’ சுகாதாரத் துறைக்கு எதிராக வலுப்பெற்றது.

ஒட்டுமொத்தமாக வடக்கு மாகாண சுகாதாரத்துறையில் நிலவும் குறைபாடுகளை, தாம் எதிர்கொள்ளும் சிக்கல்களை, தீராமல் இழுபடும் பிரச்சினைகளை மக்கள் துணிச்சலோடு வெளிப்படுத்தினார். சமூக ஊடகவெளியெங்கும் இத்த கைய போக்கையே கடந்த சிலநாள்களாக பரவலாகக் காணமுடிகின்றது. இந்தநிலையில் தனியே மருத்துவர் அர்ச்சுனா மீது வழக்குத் தொடுப்பதால் மட்டும் இந்தப் பிரச்சினை ஓய்ந்து விடப்போவதில்லை என்பதே யதார்த்தம். ஏனெனில் இது வெறுமனே மருத்துவர் அர்ச்சுனா என்ற தனிநபரின் பிரச்சினை இல்லை. வடக்கில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் பிரச்சினை.

அதனால் தான் அவர்கள் சுயமாகவே கிளர்ந் தெழுந்தார்கள். எனவே அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், அர்ச்சுனாவின் வாயை அடைப்பதில் மட்டுமே சுகாதாரத்துறையினர் அக்கறை காட்டுவார்களானால் இந்தப் பிரச்சினை மீண்டும் கொழுந்துவிட்டெரியக் கூடும். மக்களின் எழுச்சிக்கு மதிப்புக் கொடுத்து, அவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள், குறைகளைத் தீர்க்கவும், சுகாதாரத்துறைக்குள் இருக்கும் ‘களைகளை’ அகற்றி சுத்தப்படுத்தவும் பக்கச்சார்பற்ற, காத்திரமான நடவடிக்கைகளே இந்தப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக அமையமுடியும்.

சுகாதாரத்துறை தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து, புத்துயிர்பெற்று, மக்களிடம் நன்மதிப்பை உயர்த்துவதற்கு காலம் ஒரு தருணத்தை வழங்கியிருக்கிறது. அதனை வடக்கு மாகாண சுகாதாரத்துறை சரிவர நிறைவேற்றுமா? என்பதே இப்போது மக்களிடம் எஞ்சியுள்ள கேள்வி.