ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு அது நடைபெறும் வரையில் மக்களுக்கு தேர்தல் மீதான நம்பிக்கையீனம் இருக்கச்செய்யும். அதை உறுதிப்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் 19ஆவது திருத்தத்துக்கு எதிரான வழக்குத் தாக்கல்களும், ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான சட்டத்திருத்த முயற்சிகளும் இடம்பெறுகின்றன.
சமநேரத்தில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களும் தென்னிலங்கையில் முழுவீச்சில் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
தமிழர் தரப்பு இம்முறை ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் புதியதொரு அணுகு முறையைக் கையில் எடுத்துள்ளது. தமிழ்ப்பொது வேட்பாளரைக் களமிறக்கி தமிழர்கள் முழுமையாக அவரை ஆதரிப்பது என்ற கொள்கை முடிவு தமிழ்த் தேசியக் கட்சிகளாலும் சிவில் அமைப்புகளாலும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்ப்பதற்கான வேகம் தான் போதாமல் உள்ளது.
ஏனெனில் இதுவரை காலமும் தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தல்களில், யார் குறைந்தளவு சேதத்தை உருவாக்குவார் என்ற ஒப் பீட்டு அடிப்படையில் கணித்து, ஏதேனுமொரு சிங்கள வேட்பாளர்களுக்கே வாக்களித்து வந்திருந்தனர். அதிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் மக்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழ்ப் பொது வேட்பாளரை தமிழ் மக்கள் ஏன் ஆதரிக்கவேண்டும் என்பதை அவர்களை உணரச்செய்யவேண்டும். போரின் பின்னரான கடந்த காலங்களிலும் ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் வேட்பாளராக சிவாஜிலிங்கம் போட்டியிட்டிருந்தார்.
அப்போதெல்லாம் அவரை ஆதரிக்காமல், சிங்கள வேட்பாளரை ஆதரிக்குமாறு கூறியிருந்தமையால், இப்போது தமிழ்ப் பொதுவேட்பாளரை களமிறக்கும்போது மக்கள் மத்தியில் எழும் சந்தேகங்களை தீர்க்கவேண்டும். ஆனால் தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் அரசியல் தரப்புகளோ அல்லது சிவில் அமைப்புகளோ இதை முழுவீச்சில் இதுவரை செய்யவில்லை.
இறுதி நேரத்தில் மக்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது. அதை இப்போதே திட்டமிட்டு முன்நகர்த்த வேண்டும்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் யார் என்பதையும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக் கின்றது. ஏனெனில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற கொள்கை நிலைப்பாட்டை மலினப்படுத்த விரும்புகின்ற தரப்புகள் எல்லாம், இவர்தான் அடுத்த பொது வேட்பாளர் என்று கூறி அதை ஒரு கோமாளிக்கூத்தாக்க முயற்சிக்கின்றன.
அது தமிழ் மக்களிடத்தே பிழையான விம்பத்தை உருவாக்கிவிடும். எனவே தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கம் தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தரப்புகள் இது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தவேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பதை இலங்கையைச் சுற்றி பூகோள அரசியல் மோதலில் ஈடுபடும் தரப்புகளே தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தன, இருக்கவும் போகின்றன.
அந்தச் சக்திகளைப் பொறுத்தவரையில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கக்கூடும் . எனவே பொது வேட்பாளர் முயற்சியை நீர்த்துப்போகச் செய்வதற்கான நகர்வுகளை அந்தத் தரப்புகளும் முன்னெடுக்கலாம்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரத்தை முன்னெடுக்கும் தரப்புகளுக்கு அழுத்தங்களையும் அவர்கள் பிரயோகிக்கக்கூடும். எனவே, தமிழ்ப் பொதுவேட்பாளரை தமிழ் மக்கள் ஏன் ஆதரிக்கவேண்டும் என்பதையும், தமிழ்ப் பொதுவேட்பாளர் யார் என்பதையும் தமிழ் மக்களுக்கு நேர காலத்துடன் அறிவிப்பதே பொருத்தமாக இருக்கும்.