ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் இச்சமயத்தில் அரசியல் அக்கப்போர் தொழிற்சங்கப் போராட்டமாகவும் வேறு வடிவம் எடுக்கும் தோற்றம் – போக்கு – தென்படுகின்றது.
தொழிற்சங்கப் போராட்டங்கள் வழக்கமாக ஆளும் தரப்புக்கு தலையிடி தரும். செல்வாக்கை இழக்க வைக்கும். இப்போது ஜனாதிபதித் தேர்தலை முகாந்தரமாக முன்னிறுத்தி, தீவிரமடையும் தொழிற் சங்கப் போராட்டம் ஆளுந்தரப்புக்குத் தொல்லையாக – தலையிடியாக – மாறிவருகின்றது என்பது உண்மைதான்.
ஆளும் தரப்புக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் நெருக்கடியாக அது மாறி வருகின்றமை கண்கூடு. ஆனால், இந்தப் போராட்டம், அதை நடத்துபவர்களுக்கு ஆதரவையும் செல்வாக்கையும் வலிமையையும் கூட்டி, ஆளும் தரப்புக்கு செல்வாக்கு இழப்பையும், பாதிப்பையும் தருமா அல்லது தலைகீழாக மாறுமா என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
மக்களின் கடந்த கால அனுபவங்கள், நெருக்கடிகள், அது பற்றிய அவர்களின் கருத்தியல்கள், மனக் கோலங்கள் போன்றவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு, மதிநுட்பத்துடன் ஆராய்ந்து, நுணுக்கமாக தீர்மானம் எடுக்க வேண்டிய தொழிற்சங்கங்கள், மாறாக, சூதாட்டத்தில் நம்பிக்கை வைப்பது போல இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திலும் நம்பிக்கைவைத்துச் செயற்படுகின்றனவோ என்றுதான் சந்தேகம் எழுகின்றது.
ஆனால் ஆட்சி தரப்பு – ஆளும் தலைமை – கனகச்சிதமாகவும், அந்தரப்படாமலும் பதில் காய் நகர்த்தல்களை செய்கின்றது என்றே தெரிகிறது. இந்த வேலைநிறுத்தம் அரசுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் எதிரானது என்ற எண்ணத்தை – கருத்தை – அரசு தந்திர மாக விதைத்து வருகிறது.
நாடு பொருளாதார ரீதியில் எத்தகைய அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தது, 2022 வரிசை யுகத்தில் எப்படி நெருக்கடிகளை அனுபவித்தோம் என்பவை எல்லாம் அவ்வளவு விரைவில் மக்கள் மனதை விட்டு அகலமாட்டா. அதிலிருந்து மீளுவதற்காக எக்கச்சக்கமான வரிகளை ஒவ்வொரு பொருள்களுக்கும் – ஒவ்வொரு சேவைக்கும் – தாங்கள் இன்று செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் உணர்ந்து, கொதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வரி உயர்வுத் தாக்கத்தை சகிக்க முடியாமல் வேலை நிறுத்த அழுத்தம் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது சம்பள உயர்வு கோரி போராடுபவர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கும் வசதி, வாய்ப்பு, நொடித்துப் போய் இப்போதுதான் மீண்டெழுந்து வரும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு கிடையவே கிடையாது என்ற தனது இயலாமையை ஆட்சித் தரப்பு வெளிப்படையாக திறந்து காட்டிக்கொண்டு இருக்கின்றது.
அது சரியோ, தவறோ, உண்மையோ, பொய்யோ அதனை மக்கள் நம்பும் நிலைமையே இங்கு நீடிக்கின்றது. மக்களின் மனதை அந்த கணக்கு ஆழமாகத் தாக்கியும் உள்ளது.
இந்தச் சமயத்தில் இப்படித் தொழிற்சங்க போராட்டம் என்று கழுத்தைப் பிடிப்பவர்களின் அழுத்தத்திற்கு அரசு மசிந்து, இணங்கிப் போவதாயின், மீண்டும் வற் வரி போன்றவற்றை அதிகரித்து, அந்தச் சுமையை மக்கள் வாங்கும் பொருள்கள் மற்றும் பெறும் சேவைகள் மீதுதான் சுமத்த வேண்டி இருக்கும் என்று பகிரங் கமாக – திரும்பத்திரும்ப – கூறுவதன் மூலம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ள தொழிற்சங்கங்களின் பந்து வீச்சுக்குச் சரியான பதிலாட்டத்தை அரசு முன்னெடுக்கின்றது என்பது தெளிவு.
இப்போது தரப்புக்கள், தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் நாடு தழுவிய தேசிய வேலை நிறுத்த இயக்கமாக மாறக்கூடிய சூழல் இருந்தாலும், அதற்கு எதிரான மக்கள் உணர்வும் நிறையவே வெளியே தெரியாமல் – அசு மாத்தமின்றி – சத்தம் சந்தடியின்றி – கருக் கொண்டு, உருக்கொண்டு வருவதும் அவதானிக்கத்தக்கது.
இந்த வேலைநிறுத்தக்காரர்களின் மோச மான நிபந்தனைகளுக்கு – அழுத்தங்களுக்கு – வேறு வழியின்றி அரசுத் தலைமை இணங் குமாயின், அந்தச் செலவினம் வற் வரி அதி கரிப்பாக உடனடியாக – நேரடியாக – தங்கள் மீது கட்டப்படும் என்று செய்தியை ஆளுந்தரப்பு மக்களுக்கு தெளிவுபட, அவர்களின் மனதில் உறைக்கத்தக்க விதத் தில் உரைத்து வருவது இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் முக்கிய விடயம்.
துண்டு துண்டாக முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தம், பணிப் புறக்கணிப்பு, சட்டப்படி வேலை போன்ற அதிருப்தி நடவடிக்கைகள் நாடு தழுவிய தேசிய வேலை நிறுத்தமாக விஸ்வரூபம் எடுக்க லாம். ஆனால் அதற்கு எதிராக மக்கள் கருத்தும் விஸ்வரூபம் எடுக்கும் ஆபத்தும் இல்லாமல் இல்லை.