தமிழ் மக்களை பலப்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு மாகாண சபை சட்டத்தரணி கோசலை மதன் சுட்டிக்காட்டு

தமிழ் மக்களைப் பலப்படுத்துவதற்காக எவ்விதமான அடிப்படைக் கட்டமைப்புக்களும் காணப்படாத நிலையில் மாகாண சபை முறைமை அரசியலமைப்பு ரீதியாக அந்த வெற்றிடத்தினை தற்காலிகமாகவேனும் பூர்த்தி செய்வதாக உள்ளது. ஆகவே மாகாண சபைகளுக்கு அதியுச்சமாக காணப்படுகின்ற அதிகாரங்களின் பிரகாரம் அவற்றை முன்னெடுப்பதற்கான விருப்பம் மக்கள் பிரதிநிதிகளுக்கும், மக்களும் முதலில் ஏற்பட வேண்டும் என்று யாழ்.பல்கலைக்கழத்தின் சட்டபீடத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான சட்டத்தரணி கோசலை மதன் தெரிவித்தார்.

வன்டெக்ஸ்ட் இனிஷஜயேற்றிவ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 21-09-2025 அன்று  யாழ்.ரில்கோ விடுதியில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடமாகாண சபையை பிரதிநிதித்துவம் செய்த இலங்கைத் தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி. ஆகியவற்றின் முன்னாள் அமைச்சர்கள், உறுப்பினர்களின் பங்கேற்புடன் ‘வடமாகாண சபையின் அனுபவ பகிர்வும், மாகாண சபைகளுக்கான தேர்தலும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய நிலையில், சுயாட்சிக் கட்டமைப்பை நோக்கிய தமிழர்களின் நீண்டபோராட்டம் பல்வேறு வகையில் முன்னெடுக்கப்பட்டு தோல்வி கட்ட நிலையில் தான் ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பின்னர் ஆயுதப்போராட்டமும் தோல்வி கண்டுள்ள நிலையில் தான் தற்போது, பூச்சியத்திலிருந்து எமது போராட்டத்திற்கான பயணத்தினை ஆரம்பிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் தற்போதும் மாகாண சபை முறைமை எமக்கு தேவையா இல்லையா என்பது தொடர்பில் உறுதியான தீர்மானமற்ற சமூகமாக இருக்கின்றது.

மாகாண சபைகளுக்கான தேர்தல் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுகின்றது. அவ்விதமான சந்தர்ப்பத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பில் தமிழ் தரப்புக்குள் வாதப்பிரதிவாதங்களை தொடர்ந்து கொண்டிருப்பது தேவையில்லாதவொரு விடயமாகும்.

மாகாண சபைமுறைமையானது, அரசியலமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, எமக்கு முன்னால் காணப்படுகின்ற விடயமாக உள்ளது. ஆனால் மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்வதில் பல சித்தாந்தவாதிகளுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன.

சமஷ்டி முறைமையிலான தீர்வொன்றை நாம் கோரி நிற்கின்ற நிலையில் ஒற்றையாட்சிக்குள் மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று உறுதியாக கூறுகின்ற தரப்பொன்று எம்மத்தியில் உள்ளது.

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு, சமஷ்டி முறைமையிலான தீர்வொன்று அவியமாக இருக்கின்றபோதும், மாகாண சபை முறையை தூக்கியெறிந்து விட்டு அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது தொடர்பில் தெளிவான நிலைப்பாடுகள் இல்லாத நிலையே உள்ளது.

அந்த வகையில், அரசியலமைப்பு ரீதியாக, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை வினைத்திறனாக செயற்படுத்துவதன் ஊடாக படிப்படிப்படியாக கட்டமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அரசியலமைப்பு ரீதியாக 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளபோதும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தினையும், இந்தியாவையும் கெஞ்சிக்கேட்கும் நிலைக்கு வந்துள்ளோம்.

இந்தப் பலவீனமான நிலைமைக்கு ஏதேவொரு வகையில் தமிழ்த் தரப்பும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். வடக்கு மாகாண சபை செயற்பட்டிருந்த காலத்தில் சட்டரீதியாக காணப்பட்ட அதியுச்ச அதிகாரங்களை வினைதிறனாக கையாண்டிருக்கவில்லை என்ற விமர்சனம் இருக்கின்றது.

குறிப்பாக, மாகாண சபையானது, நியதிச்சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தினைக் கொண்டிருக்கின்றது. ஆனால் வடக்கு மகாhணசபையின் ஆயுட்காலத்தில் எத்தனை நியதிச் சட்டங்கள் இயற்றப்பட்டன என்ற கேள்வி எழுகின்றது.

அக்கேள்விக்கு சிலவேளைகளில் அதில் பங்கேற்ற உறுப்பினர்கள், ஆளுநர் தடையாக இருந்தார் என்று காரணத்தினைக் கூற முடியும்.

அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். விசேடமாக முதலமைச்சர் நிதியத்தினை உருவாக்குவதற்காக நியதிச்சட்டம் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பபட்டபோது அது அங்கீகரிக்கப்படவில்லை. அதனைவிடவும் ஏனைய விடயங்கள் சம்பந்தமாக எவ்வாறான நியதிச்சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள என்பதில் கேள்விகள் நீடிக்கின்றன.

வடமேல் மாகாணம் போன்ற தென்னிலங்கை மாகாண சபைகள் பல்வேறு நியதிச்சட்டங்களை நிறைவேற்றிருக்கின்றன. அத்தகைய நியதிச்சட்டங்களை வட மாகாண சபை நிறைவேற்ற முடியாது போனமைக்கான காரணம் என்ன?

மாகாண சபையின் சட்டவாக்கப்பகுதியை எடுத்துக்கொண்டால் அது சுயாதீனமாகவே உள்ளது. குறிப்பாக மாகாண சபைக்கான நிரலில் உள்ள அனைத்து விடயங்கள் சம்பந்தமாகவும் நியதிச்சட்டங்களை இயற்ற முடியும்.

மாகாண நிரலில் உள்ள விடயங்கள் சம்பந்தமாக பாராளுமன்றம் சட்டங்களை இயற்ற முடியாது. அவ்வாறு பாராளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டுமாக இருந்தால் அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையான மாகாண சபைகளின் அங்கீகாரம் அவசியமாகும்.

ஆகவே, வடமகாண சபையானது, நியதிச்சட்டங்களை இயற்றுகின்ற முக்கியமான விடயத்தில் போதுமான அளவில் செயற்பட்டிருக்கவில்லை. வெறுமனே 12நியதிச்சட்டங்கள் தான் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

அடுத்தபடியாக, மாகாண சபைக்கான நிதிச் சுயாதீனம் பற்றிய விடயம் முக்கியமானது. மாகாண சபைக்கான நிதிச் சுயாதீனம் பலவீனமான நிலையில் உள்ளது.

ஆனால், நியதிச்சட்டங்களை முறையாக இயற்றிக்கொள்வதன் ஊடாக, மாகாண சபை தனக்கான வருமானத்தினை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

உறுதிகள் மூலமாக கிடைகின்ற முத்திரை வரிகளைப் பெற்றுக்கொள்வதற்கான நியதிச்சட்டத்தினை வடக்கு மாகாண சபை இயற்றியிருந்தபோதும் ஏனைய வருமானம் ஈட்டுகின்ற வழிகளை மையப்படுத்திய நியதிச்சட்டங்களை இயற்றியிருக்கவில்லை.

இதற்கு அடுத்தபடியாக, வடக்கு மாகாண சபையின் அதிகமான பிரதேசங்கள் போரினால் பாதிக்கப்பட்டவையாகும். அந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி ரீதியாக மீள்கட்டியெழுப்புவது தொடர்பில் எவ்விதமாக தனது அதிகாரங்களை பயன்படுத்தியது என்ற விடயமும் கவனத்துக்குரியதாகும்.

அந்தவகையில் பார்க்கின்றபோது, போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான தேவைகள் என்வென்பது தொடர்பில் கள ஆய்வுகள் செய்யப்பட்ட தரவுத்தளமொன்று வட மாகாண சபையிடத்தில் காணப்பட்டிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இத்தகைய குற்றச்சாட்டுக்கள் எழாதிருக்க வேண்டுமாக இருந்தால் வடமாகாண சபை தனக்கு காணப்பட்ட சட்ட அதிகாரத்தினைப் பயன்படுத்தி விடயங்களை முன்னெடுத்திருப்பதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் நடைமுறையில் விடயங்கள் செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை.

வடமாகாண சபையில் பங்கேற்றிருந்த அரசியல் கட்சிகளுக்கு இடையில் காணப்பட்ட உட்பூசல்கள் தங்களுக்கு காணப்பட்ட வரையறுக்கப்பட்ட சட்டங்களைக் கூட பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கைநழுவிச் செய்வதற்கு வித்திட்டுள்ளது.

இந்நிலையில் மாகாண சபைகளுக்கான சட்ட அதிகாரம் பற்றிய உரையாடலில் அதிகமாக, காணி, பொலிஸ் அதிகாரங்கள் பற்றியே கவனத்தினைச் செலுத்துகின்றோம்.

மாகாண பொலிஸ் ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கான அதிகாரம் மாகாண சபைக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. மாகாண பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உத்தியோகத்தர்கள் பதவி நிலையில் சிறியவர்கள் தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

ஆனால் மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள மாகாண பொலிஸ் ஆணைக்குழுவினை அமைத்து சிறிய குற்றங்களை கையாள்வதற்கான கட்டமைப்பை வட மாகாண சபை உருவாக்கியதா என்றால் இல்லை.

அதிகார எல்லையின் அளவு பற்றிய விடயத்திற்கு அப்பால் அரசியலமைப்பில் கூறப்பட்டிருக்கின்ற கட்டமைப்புக்களை நிறுவுதற்கான சந்தர்ப்பம் ஏன் தவறவிடப்பட்டுள்ளது என்பதற்கான பதிலில்லை.

அடுத்து மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டால் நாம் அறிந்திருக்கின்ற ஏலவே மாகாண சபையினை பிரதிநித்துவம் செய்தவர்கள் தான் மீண்டும் கணிசமான அளவில் மக்கள் பிரதிநிதிகளாக வரப்போகின்றார்கள்.

அவ்வாறான நிலையில், அவர்கள் மாகாண சபைகளுக்கு காணப்படுகின்ற சொற்ப அதிகாரங்கள் பற்றிய முழுமையான தெளிவினைக் கொண்டிருப்பதன் ஊடாகவே மாகாண சபையின் ஊடாக மக்களின் தேவைகளை மையப்படுத்திய செயற்பாடுகளை அரசியல் பேதங்களின்றி முன்னெடுக்க முடியும்.

தென்னிலங்கையில் உள்ள மாகாண சபைகள் ஒப்பீட்டளவில் வினைத்திறனாக செயற்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ் மக்கள் தான் உரிமைகளுக்காக போராடியபோது அவர்களின் கோரிக்கையை முழுமையாக பூர்த்தி செய்யாது விடினும் அதற்கான குறைபாடுகளுடன் மாகாண சபைக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. போராடியமைக்காக கிடைத்த மாகாண சபைக் கட்டமைப்பை அதற்கு காணப்படுகின்ற அதிகாரங்களுடன் முறையாக பயன்படுத்தவில்லை. அவ்வாறான நிலைமை தொடர்ந்தால் தமிழினத்தின் நிலைமையும், எதிர்காலமும் எங்கு செல்லப்போகின்றது என்பதை சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது உள்ளோம்.