மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பாராளுமன்ற
உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை முடிவுக்குக் கொண்டுவர முன்வைத்த யோசனையானது, ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மத்தியில் மிகக் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அச்சுறுத்தியுள்ளது. இந்த முடிவு, இலங்கையின் அரசியல் அரங்கில் முக்கியமானதொரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அரசாங்கத்தின் சார்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர்.நளிந்த ஜயதிஸ்ஸ, பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ‘அஸ்வெசும’ போன்ற சமூக நலன்புரித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஜே.வி.பி., எதிர்க்கட்சியாக இருந்தபோதிலிருந்தே, கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இது, அவர்களின் தேர்தல்
வாக்குறுதிகளில் ஒன்றாகவும் இருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயலாளரும் முன்னாள் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினருமான பேமசிறி மானகே, அரசாங்கத்தின் குறித்த முடிவினால் ஏற்படும் விளைவுகள் குறித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அவர், எமது ஒன்றியம் அனைத்தினங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஜே.வி.பி. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கியது.
தனிப்பட்ட சலுகைகளுக்காக மட்டும் இந்த ஒன்றியம் அமைக்கப்படவில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள், நாட்டின் சவால்களுக்குத் தீர்வு காண்பதில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று நம்புகிறோம். இதுவொரு தனிப்பட்ட சலுகைகளை மட்டும் பாதுகாக்கும் குழு அல்ல நாட்டின் முன்னேற்றத்துக்குப் பங்களிக்கும் தளமாகம் என்றும் மானகே குறிப்பிட்டார்.
இவ்வாறிருக்கையில், பொதுமக்கள் மத்தியில், ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் என்ற தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளது. ஆனால், அது முற்றிலும் உண்மையல்ல என்று மானகே சுட்டிக்காட்டியுள்ளார்.
‘பெரும்பாலான நாடுகளில், ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் உட்பட சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. இலங்கையில், எங்களுக்கு மிகக் குறைந்த ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது.
பொதுத்தேர்தல்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்களில் அரசியல் இலாபத்திற்காக, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்றொரு தவறான பிம்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஓய்வூதியத் தொகை மிகவும் குறைவானது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒரே ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. அது அவர்களின் சேவைக்காலத்தைப் பொறுத்தது. ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் அடிப்படைச் சம்பளம் 54,000 ரூபாவாகும்.
அதிகபட்ச ஓய்வூதியம் அதில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும். சில சிறிய கொடுப்பனவுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இக்கொடுப்பனவுகளை சேர்த்தாலும்கூட, எந்தவொரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் ஓய்வூதியமும் 80,000 ரூபாவை விட அதிகமாக இருக்காது’ என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை ஒழிப்பதற்காக அண்மையில் ஒரு சட்டமூலம்
அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு எதிராக தற்போது மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமத்ன தெரிவித்திருக்கிறார். இந்நிலையில்அதைப்பற்றியும் மானகே தனது கருத்தைத் தெரிவித்தார்.
‘முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை ஒழிப்பது முற்றிலும் தவறு. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மிகவும் கடினமான காலகட்டத்தில் நாட்டை வழிநடத்தினார்கள். மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்காவிட்டால், ஜே.வி.பி.அரசாங்கத்தை அமைக்கும் நிலையில்கூட இருந்திருக்காது.
அதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார். ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடியின்போது நாட்டை ஸ்திரப்படுத்தினார். ஒவ்வொருவரும் நாட்டிற்காக பெரும் தியாகங்களைச் செய்துள்ளனர். அவர்களுக்கு இத்தகைய அவமரியாதையை வழங்குவது தவறு என்பது தனது நிலைப்பாடாகும் என்றார்.
ஓய்வூதியத்தை ஒழிப்பதன் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பேமசிறி மானகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர், இந்த நடவடிக்கை சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். 1940கள் மற்றும் 1950களில் இருந்ததைப் போல, செல்வந்த குடும்பங்களின் கைகளில் மட்டுமே அரசியல் சிக்கிக்கொள்ளும் ஆபத்துக்கள் நிறைந்துள்ளன.
ஒரு சாதாரண குடிமகன் தனது வேலையை விட்டுவிட்டு பாராளுமன்றத்தில் சேவை செய்தால், அவருக்கு எந்த ஓய்வூதியமும் இல்லையென்றால், அவர் அரசியலுக்கு வரத்தயங்குவார். இதனால் நேர்மையான மற்றும் திறமையானவர்கள் அரசியலில் இருந்து விலகிச் செல்வார்கள். இது ஜனநாயகத்திற்கும், நல்லாட்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றார்.
ஒரு அரச சேவைப் பணியாளர் பாராளுமன்ற உறுப்பினராக மாறும்போது, அவரது எஞ்சிய காலம் கேள்விக்குறியாகின்றது என்றும் தன்னை உதாரணம் காண்பித்து அவர் கூறினார்.
‘நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு பட்டதாரி ஆசிரியர். நான் பாராளுமன்ற உறுப்பினராகத்
தெரிவுசெய்யப்பட்டபோது, எனது ஆசிரியர் வேலையை இராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. இதன்மூலம், எனது சம்பள உயர்வு, பதவி உயர்வுகள் மற்றும் எனது பொதுச்சேவை ஓய்வூதியம் என்று நான் ஈட்டிய அனைத்துச் சலுகைகளையும் இழந்தேன். இப்போது, பாராளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தையும் இழக்கப்போகிறேன். இது நியாயமானதா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்’ என்ற அவர் கேள்வியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற நாடுகளில் ஓய்வுபெற்ற அரசியல்வாதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும், அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, நியூசிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர், மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில், ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் அல்லது கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
பல நாடுகளில், ஓய்வூதியம் 55 அல்லது 60 வயதில் தொடங்குகிறது. ஆனால் இலங்கையில், பதவிக்காலம் முடிந்தவுடன் ஓய்வூதியம் கிடைக்கிறது. பல நாடுகளில் மருத்துவக்காப்பீடும் வழங்கப்படுகிறது. இலங்கையில் அப்படி எந்த ஏற்பாடுகளும் இல்லை என்றும் அவர் கூறினார்.
முன்னாள் ஜே.வி.பி. உறுப்பினர் என்ற முறையில், வேறு எந்தக் கட்சியும் தங்கள் றுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை முழுமையாகக் கட்சிக்கு வழங்கும்படி கேட்பதில்லை. ஜே.வி.பி.யில், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் கட்டாயமாகப் பெறப்படுகின்றன என்று அவர் கூறினார்.
நான் ஒரு பிரதேச சபை உறுப்பினராகவும், மாகாண சபை உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியபோது, எனது வருமானத்தில் ஒரு பகுதியைக்கூட நான் பெறவில்லை. ஐந்து வருடங்களும் 11 மாதங்களும் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, எனது மாதாந்தச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் சுமார் 250,000ரூபாவைக் கட்சி நிதிக்காக வழங்கினேன்.
வாகன அனுமதிப்பத்திரங்களையும் கட்சி எடுத்துக்கொண்டது. இதனால் பலர் கட்சியை விட்டு விலகினர்.
இப்போது ஓய்வூதியத்தை ஒழிக்கும் முன், கட்சி எங்களிடம் இருந்து எடுத்த பணத்தைத் திரும்பத்தர வேண்டும் என்று நாங்கள் கோரவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஓய்வூதியத்தை ஒழிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக, நாங்கள் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை, ஜெனீவா மற்றும் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் ஆகியவற்றில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளோம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுத்துபூர்வமாகத் தெரிவித்துள்ளோம். இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்படும்போது, நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் அதற்கு எதிராக வழக்குத் தொடருவோம்.
மனித உரிமைகள் ஆணையத்திலும் தெரிவிப்போம் என்றும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் மக்களின் எதிர்ப்பு ஏன் குறைவாக உள்ளது என்பது குறித்து, பார்க்கின்றபோது அனைத்து அரசியல்வாதிகளும் ஊழல் நிறைந்தவர்கள் என்ற ஒரு எண்ணத்தை அவர்களுக்குள் உருவாக்கியுள்ளமையே பிரதானமாகின்றது. அதனால் பொதுமக்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் உண்மைகளை விளக்கத்
தொடங்கும்போது, அரசாங்கம் தவறான பரப்புரைகளில் ஈடுபடுவதை மக்கள் புரிந்துகொள்ளத்
தொடங்குவார்கள். என்றும் அவர் குறிப்பிடத்தவறியிருக்கவில்லை.