வட,கிழக்கில் ஹர்த்தால்அரசியல் தோல்வி?

வட,கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட அரைநாள் ஹர்த்தால், எதிர்பார்த்த முழுமையான வெற்றியை அடையவில்லை. தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரனே இதனை ஏற்றுக்கொண்டதுடன், இப்போராட்டத்தை வெற்றிபெற விடாமல் தடுப்பதற்கு அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலைப்பாடு பல கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, அரசாங்கம் ஏன் இந்தப் போராட்டத்தை இவ்வளவு தீவிரமாக எதிர்த்தது என்பது பலரின் மனதிலும் ஒரு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்த முழு அடைப்புப் போராட்டம் ஒரு இளைஞனின் மரணத்திற்குக் காரணமான இராணுவத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவப் பிரசன்னத்துக்கு எதிரான ஒரு போராட்டமாகவும் இது பார்க்கப்பட்டது. வடக்கு, கிழக்கில் இராணுவமயமாக்கல் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், படையினர் விலக்கப்பட வேண்டும் என்றும் தமிழர்கள் தரப்பில் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் ஒரு கோரிக்கையை முன்வைத்தும், இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் படைக்குறைப்பு கோரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டதில்லை. நல்லாட்சி அரசாங்கம் படைக்குறைப்புக்கு அல்லது படை விலக்கத்துக்கு இணங்கிய போதும், அதைச் சரியாக முன்னெடுக்கவில்லை. சில இடங்களில் இருந்து படையினர் குறைக்கப்பட்டு, இன்னொரு இடத்தில் குவிக்கப்பட்டார்கள். இப்போதும் கூட, இராணுவத்தின் பெரும்பாலான படைப்பிரிவுகள் வடக்கு, கிழக்கிலேயே நிலை கொண்டிருக்கின்றன.
இப்படி ஒரு முக்கியமான கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டத்தை, அரசாங்கம் தடுக்க விரும்பியது. அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர்கள், இராணுவ மற்றும் பொலிஸ் பேச்சாளர்கள் என்று அரசாங்கத்தின் அனைத்து மட்டத்திலும் இந்தப் போராட்டம் அவசியம் இல்லையென வலியுறுத்தப்பட்டது.
இராணுவத் தரப்பு நியாயமாக நடந்து கொள்வதாகவும், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாகவும் ஒரு விம்பம் கட்டியெழுப்பப்பட்டது. அதேசமயம், இச்சம்பவத்திற்கும் இராணுவத்திற்கும் தொடர்பு இல்லை என்ற மறுப்பும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இவ்வாறான சம்பவங்கள் இனரீதியாக இடம்பெறவில்லை என்றும், நாட்டின் பிற மாவட்டங்களிலும் இடம்பெறுகின்றன என்றும் அரசாங்கம் ஒரு நியாயத்தை முன்வைத்தது.
இதன் மூலம், அரச படைகளின் அத்துமீறல்களை ஒரு சாதாரண விடயமாக அடையாளப்படுத்த முயற்சித்தது.
அரசாங்கம் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க ஒத்துழைப்பதாகக் கூறியிருந்தாலும், அதைக் காரணம் காட்டி நீதியைக் கோரும் ஒரு போராட்டத்தை தவறானதாகக் கூற முடியாது.
அந்தப் போராட்டத்தை அரசியல் நலனுக்கான போராட்டமாக, அரசியல் செல்வாக்கை மீட்டெடுப்பதற்கான போராட்டமாக, இனப்பதற்றத்தைத் தூண்டுவதற்கான போராட்டமாக அரசாங்கம் அடையாளப்படுத்த முற்பட்டது. இனவாதம் இல்லாத ஆட்சியை நடத்துவதாகக் கூறிக்கொண்ட அரசாங்கம், தானே இனவாதத்தை கையில் எடுத்து தமிழர்கள் மீது திணிக்க முயன்றது. ஒட்டுமொத்த அரசாங்கக்கட்டமைப்பும் இந்தப் போராட்டத்தை விரும்பவில்லை, இதனை தோற்கடிக்கவே விரும்பின.
இச்சூழ்நிலைக்குப் பின்னணியில், அடுத்த மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. அந்தப் பிரேரணையில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய விடயங்கள் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு அல்லது தடுப்பதற்கு இத்தகைய போராட்டங்கள் நடக்காமல் இருப்பது முக்கியம். அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் முன்வைத்திருந்த அறிக்கையில், தண்டனை விலக்கு நிலையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
தண்டனை விலக்கு என்பது, இலங்கையில் நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு புற்றுநோயைப் போன்றது.
எந்தவொரு அரசாங்கத்திடமும், தண்டனை விலக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அரசியல் துணிவு இருந்ததில்லை. இப்போதைய அரசாங்கத்திடமும் அது இல்லை. தண்டனை விலக்கை முடிவுக்குக் கொண்டு வர முயன்றால், அது தங்களுக்குத் தாங்களே ஆபத்தாக அமைந்துவிடுமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
அதனால் தான் எந்த ஒரு அரசாங்கமும் தண்டனை விலக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்குத் தயங்குகிறது.
ஜெனிவாவில் கொடுக்கப்படும் அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமானால், இத்தகைய சம்பவங்கள் நடக்கவில்லையென நிரூபிக்க வேண்டும். ஆனால், தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சம்பவங்கள், புதிய அரசாங்கம் நியாயமாகச் செயற்படுகிறது என்று நிரூபிப்பதற்குத் தடையாக இருக்கின்றன.
இதனால்தான், முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், அதற்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி ஒரு போராட்டம் முன்னெடுக்கப்படுவதை அரசாங்கம் விரும்பவில்லை. அது அரசாங்கத்துக்கு எதிரான மனோநிலை வடக்கு,
கிழக்கில் இருக்கிறது என்ற கருத்தை ஏற்படுத்தி விடுமோ என அரசாங்கம் அஞ்சியது. எனவேதான், ஒட்டுமொத்த அரசாங்கமும் இந்தப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கியது.
இத்தகைய ஒரு மனோநிலை அரசாங்கத்திடம் இருந்தது என்பதை உணர்ந்து கொண்டு, தமிழரசுக் கட்சி இப்போராட்டத்தை இன்னமும் வீரியமானதாக முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், அக்கட்சி அவ்வாறு செய்யவில்லை. தமிழரசுக் கட்சி இம்முறை ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்பவில்லை. தாங்கள் தனித்துவமான முறையில் ஜெனிவாவுக்குச் சொல்ல வேண்டிய விடயத்தைச் சொல்லுவோமென சுமந்திரன் கூறியிருந்தார்.
அதன் ஒரு அங்கமாக இந்த முழு அடைப்புப் போராட்டம் இருந்திருக்கலாம். அப்படியானால், அதனை வெற்றிகரமாக முன்னெடுத்திருக்க வேண்டும். அதற்கான நகர்வுகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. இது அரசாங்கத்திற்கு சாதகமான விடயமாக மாறிவிட்டது. ஒட்டுமொத்த அரசாங்கமும் இந்தப் போராட்டத்தை எப்படி எதிர்த்ததோ, அதேபோல, இந்தப் போராட்டம் தோல்வியடைந்துவிட்டது என்று அரசாங்கம் கூறுகின்ற நிலையும் ஏற்பட்டுவிட்டது. இதன் மூலம், அரசாங்கம் அடைய நினைத்த இலக்கை அடைவதற்கு, தமிழரசுக் கட்சியே துணை போயிருக்கிறது.
முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குச் சென்ற கபில்ராஜ் என்ற இளைஞன் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, இலங்கை தமிழரசுக் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்ட இந்தப் போராட்டம், முதலில் ஆகஸ்ட் 15ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் 18ஆம் திகதிக்கு மாற்றப்பட்டு, அதன் பின்னர் முழு அடைப்பு அரைநேர அடைப்பாக மாற்றப்பட்டது.
அண்மைக்கால வரலாற்றில், ஒரு போராட்டம் இந்தளவுக்கு விமர்சனங்களுக்கும், மாற்றங்களுக்கும் உள்ளாகியதில்லை. இது போன்ற பிசுபிசுத்த ஒரு போராட்டம் நடத்தப்படுவது இதுவே கடைசியானதாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் தமிழ் மக்கள், உயிர்களை விலையாகக் கொடுத்து ஜனநாயக வழியில் மிகப்பெரிய போராட்டங்களை டத்தியிருக்கிறார்கள்.
தமிழரசுக் கட்சியின் நிறுவுநர்களில் ஒருவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அரசாங்கத்திற்கு எதிராக சட்ட மறுப்புப் போராட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் பலவற்றை நடத்தியவர். ஆனால், அத்தகைய பாரம்பரியத்தில் இருந்து வந்த தமிழரசுக் கட்சி, குறுகிய அரசியல் நலன்களை முன்னிறுத்தி முன்னெடுத்த இந்த முழு அடைப்புப் போராட்டம், அதன் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகவே பதிவு செய்யப்படும்.
ஏன் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது என்பதில் தொடங்கி, அது முன்னெடுக்கப்பட்ட விதம் தொடர்பாக ஏராளமான விமர்சனங்கள் இருக்கின்றன. தமிழரசுக் கட்சியின் அண்மைக்காலப் போக்கும், செயற்பாடுகளும் தான்தோன்றித்தனமானவையாக இருப்பது கண்கூடு. தேர்தல்களில் அந்த கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் அல்லது ஆசனங்களை வைத்துக் கொண்டு, ஏக பிரதிநிதித்துவ நிலையில் தன்னை வைத்துக் கொள்வதற்கு அது முயற்சிக்கிறது.
தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளும், ஆசனங்களும் கட்சி மீதான பற்றுதலில் மட்டும் கிடைக்கவில்லை.
பிற கட்சிகள் மீதான விமர்சனங்கள், ஆளுங்கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற உணர்வு எனப் பல காரணிகள் இதற்கு உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அதைக் கணக்கிலெடுக்காமல், தமிழரசுக் கட்சி தான்தோன்றித்தனமாக, தான் நினைத்ததை தமிழ் மக்களின் மீது திணிக்க முனைகிறது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாங்களே என்று இறுமாப்புடன் அது செயற்பட முற்படுகிறது. அதன் விளைவுதான் இந்த முழு அடைப்புப் போராட்டமும் அதன் தோல்வியும் ஆகும்.
போராட்டத்தை அறிவிப்பதற்கு முன்னர் பரந்துபட்ட கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான ஆதரவைத் திரட்டியிருக்க வேண்டும். அதனைச் செய்யாமல், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பெரிய கட்சி என்ற அகம்பாவத்துடன், தமிழரசுக் கட்சி போராட்டத்தை அறிவித்தது. அதன் பலவீனத்தை இன்று அது எதிர்கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தின் ஊடாக, தமிழரசுக் கட்சி இரண்டு பெரிய தவறுகளை இழைத்திருக்கிறது. ஒன்று, திரண்டு தமிழ் மக்கள் முன்னெடுத்திருக்க வேண்டிய ஒரு போராட்டத்தை, அவர்களைக் கொண்டே பலவீனப்படுத்தியிருக்கிறது.
இது தமிழர்கள் தங்களின் கைகளாலேயே தமது கண்களைக் குத்திக்கொள்வதற்கு ஒப்பானது. மற்றொன்று, தமிழரசுக் கட்சி தனது செல்வாக்கையும் பலத்தையும் தானே கீழறுத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் தோல்வி, தமிழர்களின் தோல்வியாக, தமிழர்கள் முன்வைக்கும் கோரிக்கையின் தோல்வியாக சிங்களத் தரப்பினரால் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதுதான் மிகப்பெரிய பாதிப்பு.