நிகழ்நிலைக்காப்புச் சட்டம்அரசுக்கு ஒரு அக்னிப்பரீட்சை

2024 செப்டம்பர் ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்குப் பின்னர், இலங்கையின் அரசியல் களம் புதியதொரு அத்தியாயத்தை நோக்கி நகர்கிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம், பல சிக்கலான விடயங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அவற்றில், கடும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ள விடயங்களில் நிகழ்நிலைக்காப்புச் சட்டம் முதன்மையானது.
கடந்த அரசாங்கத்தால் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், இப்போது புதிய அரசாங்கத்தின் நுணுக்கமான ஆய்வுக்கும், திருத்தங்களுக்கும் உள்ளாகியுள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றுக்கு இடையேயான கடுமையான
முரண்பாடுகளை இது வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. ஆனால், இந்தச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக முன்னர் வழங்கிய வாக்குறுதியிலிருந்து தற்போதைய அரசாங்கம் விலகியுள்ளது.
அத்தோடு அரசாங்கம் அச்சட்டத்தில் திருத்தங்களை மட்டுமே மேற்கொள்ளத் தீர்மானித்து
அச்சட்டம்தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கோரி அண்மையில் விளம்பரமொன்றையும் அது வெளியிட்டுள்ளது.
நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தின் வரலாற்றை பின்நோக்கிப் பார்த்தால் அரசியல் அவசரமும், அடிப்படை உரிமைகளும் மோதிக்கொண்டதொரு கதையாகவே காணப்படுகிறது.
2023இன் பிற்பகுதியில் அப்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இணையக் குற்றங்கள், இணையவழி துன்புறுத்தல், மற்றும் தவறான தகவல்களைப் பரப்புகின்றமை ஆகியவற்றுக்கு எதிரானதொரு அவசியமான கருவியாக இந்தச் சட்டத்தை முன்வைப்பதாக கூறினார்.
முன்னைய அரசாங்கம், டிஜிட்டல் யுகத்தின் சிக்கல்களைக் கையாள தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதல்ல எனவும், இந்தச் சட்டம் பெண்கள், குழந்தைகள் உட்பட பலவீனமான குடிமக்களைப் பாதுகாக்கும் எனவும் வாதிட்டது.
இருப்பினும், அவசர அவசரமாக இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை அதிகாரத்தை பலப்படுத்துவதற்கும்,
மாற்றுக்கருத்துக்களை நசுக்குவதற்கும் ஒரு தெளிவான முயற்சி என்று பல்வேறு தரப்பினராலும்
பார்க்கப்பட்டது.
இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது அதற்கு எதிராக உடனடியாகவும்,
பரவலாகவும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. சிவில் சமூக அமைப்புகள், சட்ட வல்லுநர்கள், ஊடகச் செயற்பாட்டாளர்கள், மற்றும் தொழிற்சங்கங்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து எதிர்ப்புப் பிரசாரத்தை ஆரம்பித்தனர்.
அப்போது எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய அநுரகுமாரவின் அரசாங்கம் அந்த எதிர்ப்பின் முன்னணியில் இருந்து குரல்கொடுத்தது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, இந்தச் சட்டத்தை அரசியல் எதிர்ப்பை அடக்கும் திரைமறைவு முயற்சி என்று விமர்சித்தார்.
அதேபோல், தற்போதைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தச் சட்டமூலம் ‘மிகவும்
குறைபாடுடையது’ எனவும், ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
அவர்களின் எதிர்ப்புக் கருத்துக்கள் வரலாறாக இருக்கின்றபோதும் ஆட்சிக்கு வந்த பிறகு, தமது முந்தைய வாக்குறுதிகளின்படி செயற்படுவதற்கு பதிலாக எதிர்மறையான பதையில் செயற்படும் நிலையில் உள்ளனர்.
இச்சட்டமூலத்திற்கு எதிரான சட்டப் போராட்டம் மிக முக்கியமான தருணமாகும். குறித்த சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்துவதாக குறிப்பிட்டு 45 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அம்மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில், 31 திருத்தங்களை பரிந்துரைத்தது. இதன் மூலம், இந்தச் சட்டம் அதன் உண்மையன ஆரம்ப வடிவம் அரசியலமைப்புக்கு முரணானது எனவும், மனித உரிமைகளை மீறுகிறது எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இருப்பினும், தற்போதைய அரசாங்கம் கடந்தகால வாதங்களுக்கு மாறாக, மிகவும் நுணுக்கமான
அணுகுமுறையுடன் செயற்பட்டு வருகிறது. குறித்த சட்டத்தை முற்றாக நீக்குவதற்குப் பதிலாக, அது திட்டமிட்ட மீளாய்வுப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்தச் சட்டத்தின் தேவை குறித்து
வலியுறுத்தியுள்ளார். இணையக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஒரு புதிய சட்டப் பொறிமுறை அவசியமென அவர் வாதிடுகிறார்.
அதேசமயம், சட்டத்தின் தவறான பயன்பாட்டைத் தடுக்கத் திருத்தங்கள் தேவை என்பதை அவர்
ஏற்றுக்கொள்கிறார். இந்த நிலைப்பாடு, மக்களின் பாதுகாப்புக்கும், அடிப்படை உரிமைகளுக்கும்
இடையிலான சமநிலையை நிறுவுவதில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்களை டுத்துக்காட்டுகிறது.

இதேவேளை, நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தை உடனடியாக முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை தமது சமர்ப்பணங்களை நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பான குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
இந்தச் சட்டம் ஒரு முழுமையான சட்டக் குறைபாடு கொண்டதெனவும், இது சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்கவில்லை எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கான பரிந்துரைகளை அனுப்பிவைக்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் பொது அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டிருக்கும் நிலையில்,
அச்சட்டத்தை உடனடியாக முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி நாம் எமது நிலைப்பாட்டை
அனுப்பிவைத்துள்ளோம் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய அலுவலகம் தமது எக்ஸ் தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சட்டம் எவ்வாறு திருத்தப்படுகிறது என்பது, நாட்டின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்த அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய பரிசோதனையாக அமையும்.
இதுவொருபுறமிருக்க, தமிழ் அரசியல் கட்சிகள் இந்தச் சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது முக்கியமானதாகும். இச்சட்டம் தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளையும், கருத்துச் சுதந்திரத்தையும்
பாதிக்கும் வாய்ப்புள்ளது.
எனவே, தமிழ் அரசியல் கட்சிகள் அரசாங்கத்தின் இந்த இரகசிய நகர்வுகளைக் கண்காணிப்பதோடு,
அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
குறிப்பாக, தமிழ் மக்களின் அபிலாஷைகளை மையப்படுத்திய ஒரு பொதுவான நிலைப்பாட்டை எட்டி, ஒன்றுபட்ட குரலில் இந்தச் சட்டத்திற்கு எதிரான வாதங்களை முன்வைக்க வேண்டும்.
நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தின் தற்போதைய நிலை, ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் சூழலுக்கான
வாக்குறுதியை நிறைவேற்றுமா அல்லது ஜனநாயக சுதந்திரங்களை ஒடுக்குவதற்கான ஒரு கருவியாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள், இந்தச் சட்டத்தின் திருத்தங்களை அவதானிப்பதோடு, மக்களின் உரிமைகளுக்காகப் போராட வேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தச் சட்டம் திருத்தப்படுவது, புதிய அரசியல் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக இருக்கும்.