இலங்கைப் பொருட்களுக்கான வரியை, 20சதவீதமாக குறைப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே அவரால் அறிவிக்கப்பட்ட 44சதவீத வரியை
குறைப்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் இறுதி நேரம் வரையில் உறுதி அளித்திருக்கவில்லை.
இதனால் தான் அநுர அரசாங்கம் பேசுகின்றோம், பேசுகின்றோம் என்று இறுதி வரையில்
கூறிக்கொண்டே இருந்தார்கள். இருப்பினும், கடைசி இரண்டு மணி நேரத்திற்குள் இருதரப்பு
பேச்சுக்களில் உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்கின்றன.
ஆனால் எட்டப்பட்ட உடன்பாடுகள் சம்பந்தமாக அமெரிக்கத் தரப்பிலோ அல்லது இலங்கைத்
தரப்பிலோ வெளிப்படுத்துவதற்கு எவரும் தயாராக இல்லை. அது வெளிப்படுத்தப்படப் போவதுமில்லை என்பது தற்போதைக்கு உறுதியாகிறது.
எதுஎவ்வாறாக இருந்தாலும், தற்போதைய உடன்பாட்டின் பிரகாரம் இலங்கைப் பொருட்கள்
தடையின்றி அமெரிக்க சந்தையை சென்றடையும் வாய்ப்பு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருக்கிறது.
ட்ரம்பின் அறிவிப்பின்பிரகாரம் 44சதவீதமான வரி தொடர்ந்திருந்தால் அமெரிக்கச் சந்தையில், இலங்கை பொருட்கள் பல்வேறு தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்தப் போட்டியை சமாளிப்பதற்கு, வரிக்குறைப்பு மாத்திரமே, ஒரே தெரிவாக இருந்தது.
இந்த வரிக்குறைப்பு முயற்சி சாத்தியப்படாமல் போயிருந்தால், இலங்கைக்கு பேரிடியாக
அமைந்திருக்கும். ஏனென்றால் குறைந்தளவு வரி விதிக்கப்பட்ட வியட்நாம், இந்தோனேசியா,
கம்போடியா, பங்களாதேஷ், தாய்லாந்து போன்ற நாடுகளுடன், இலங்கைப் பொருட்கள் மிகப்பெரிய அளவில் போட்டி போட வேண்டியிருந்திருக்கும்.
இலங்கைப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் போது, அவற்றினால் ஏனைய நாடுகளின் பொருட்களுடன் தாக்குப் பிடிக்க முடியாமல் போயிருக்கும்.
இலங்கைக்கான வரி அதிகமாகவும், ஏனைய நாடுகளுக்கான வரி குறைவாகவும் இருக்கின்ற போது, இலங்கை பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். அதனால், அமெரிக்க சந்தையில் இலங்கைப் பொருட்களுக்கான கேள்வி குறையும்.
அது இலங்கையின் ஏற்றுமதி வருவாயை பாதிப்பதுடன், அதனை நம்பி இருக்கும் உள்நாட்டு
தொழிலாளர்களின் எதிர்காலத்தையும் பெரிதும் சூனியமாக்கி இருக்கும். அத்தகைய ஆபத்தான சூழலில் இருந்து தப்பிக் கொள்வதற்காகவே, அரசாங்கம் வரியை குறைக்கின்ற முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருந்தது.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை முழுமையாகச் சாத்தியப்படுத்தியவர் முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க. அவர் ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகித்தவர்.
இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும், அப்போதைய அரசாங்கத்தை காப்பாற்றயவரும் இவர் தான்., இப்பொழுது அமெரிக்காவின் வரி நெருக்கடியில் இருந்து, அநுர அரசாங்கத்தை பிணையெடுத்து விட்டிருக்கிறார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட அவர்,
அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திலும் அதே பதவியில் நீடித்திருக்கிறார். அநுரகுமார ஆட்சிக்கு வந்ததும், வெளிநாடுகளில் அரசியல் ரீதியாக நியமனம் பெற்ற தூதுவர்கள் அனைவரையும் திருப்பி அழைத்தார்.
ஆனால் மஹிந்த சமரசிங்கவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அது அவர் மீதான
நம்பிக்கையினால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அமெரிக்காவுடனான உறவுகளை சரியான முறையில் முன்னெடுப்பதற்காக, வரி நெருக்கடியை சமாளிப்பதற்காகவே, அவர் அங்கு பதவியில் நீடித்திருக்க அனுமதிக்கப்பட்டார்.
அதன் மூலமாவே, அரசாங்கத்தினால் இந்த வரி நெருக்கடிக்குத் தீர்வு காண முடிந்திருக்கிறது.
வொஷிங்டனில் மஹிந்த சமரசிங்க தூதுவராக இல்லாமல் போயிருந்தால், இந்த வரிக்குறைப்பு
சாத்தியப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்.
இப்பொழுது 20சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கின்ற வரியை, மேலும் குறைப்பது பற்றி பேச்சுக்கள் நடத்தப்படுவதாக மஹிந்த சமரசிங்க கூறியிருக்கிறார். அதனை ஜனாதிபதி அநுரகுமாரவும் கூறுகின்றார்.
அது எந்தளவுக்கு சாத்தியம் என்பதை இப்பொழுது நிச்சயமாக கூற முடியாது.
அநுர அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அமெரிக்காவுடனான வரிக்குறைப்பு
சாத்தியமானமையானது.ஆனால் அமெரிக்கா இந்த வரிக்குறைப்பை மனமுவந்து மேற்கொள்ளவில்லை.
இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து, நெருக்கடி கொடுத்து, இந்த வரிக் குறைப்புக்கு இணங்கி இருக்கிறது.
தனது இலக்குகளை எட்டுவதற்கு இந்த வரியை ட்ரம்ப் நிர்வாகம் பயன்படுத்தியிருக்கிறது.
எல்லா நாடுகளுடனும் அமெரிக்கா இரண்டு நோக்கங்களின் அடிப்படையில், வரி தொடர்பான
நிலைப்பாட்டை எடுத்தது. அதில் முக்கியமானது அமெரிக்காவின் வர்த்தக நலன்களை பாதுகாப்பது-
நாடுகளுடனான வர்த்தக சமநிலையை பேணுவதற்கேற்ற சூழலை உருவாக்குவது.
அடுத்தது சீனாவுடன் அந்த நாடுகள் கொண்டிருக்கின்ற வர்த்தக உறவுகளை குழப்புவது. குறித்த
இரண்டு இலக்குகளின் அடிப்படையிலும் தான் பெரும்பாலான நாடுகளுடன் அமெரிக்கா வரி
தொடர்பான தீர்மானங்களை எடுத்தது.
இலங்கை தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் போதும், மேற்படி இரண்டு விடயங்களும், முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டில் அமெரிக்காவுக்கு, இலங்கையில் இருந்து 3பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால், அமெரிக்காவில் இருந்து இலங்கை வெறுமனே, 368.2 மில்லியன் டொலர்கள் பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட 2.6 பில்லியன் டொலர்கள் வர்த்தக இடைவெளி காணப்பட்ட நிலையில் அந்த
இடைவெளியை குறைப்பதற்கு, அமெரிக்கா முன்னுரிமை கொடுத்தது.
இலங்கை கூடுதலான பொருட்களை தம்மிடம் இருந்து இறக்குமதி செய்வதன் மூலமாக, இந்த வர்த்தக இடைவெளியை குறைக்க முடியும் என்ற ஆலோசனை கூறியது.
குறிப்பாக, எரிபொருள் மற்றும் திரவ எரிவாயு போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருக்கிறது. மின்சார வாகனங்களை தீர்வையின்றி இலங்கைக்குள் அனுமதிக்குமாறும்,
அமெரிக்க பொருட்களுக்கு இலங்கையில் விதிக்கப்படும் வரிகளை முழுமையாக நீக்குமாறும்,
அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கடைசி நேரத்தில் இந்த அழுத்தங்களுக்கு அரசாங்கம் பகுதியளவில் அடிபணிந்துள்ளது. 500மில்லியன் டொலர்களுக்கு எரிபொருளையும், 300 மில்லியன் டொலர்களுக்கு திரவ எரிவாயுவையும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் இரகசியமாக இணங்கியிருக்கிறது.
ஆனால் இந்தப் பொருட்களை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்து சேர்க்க 21 நாட்கள் ஆகும். இதற்காக, ஏற்படக் கூடிய கப்பல் செலவினங்கள் அதிகமாக இருக்கும். இது இலங்கையில் எரிபொருள்களின் விலைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதுமட்டுமன்றி, அரசாங்கம் சுமார் 2000அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விலக்கு அல்லது வரி
குறைப்பை மேற்கொள்வதாக இணங்கி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதன் மூலமாக
அமெரிக்கா தனது இலக்குகளை அடைந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த உடன்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் போது தான் உள்நாட்டில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை அரசாங்கத்துக்கு ஏற்படவுள்ளது. விசேடமாக விலை அதிகரிப்புக்கள் ஏற்படுகின்றபோது மக்கள் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாது போகும்.
அதேநேரம், நெடுங்காலமாக சீனா அமெரிக்காவுடன் கொண்டிருக்கின்ற முரண்பாடுகளாலும், அண்மைய நாட்களில் 25சதவீத தீர்வை வரிக்கு முகங்கொடுக்கும் இந்தியா அமெரிக்காவுடன் முட்டி மோதுவதற்கு தயாராகி வருகின்ற நிலையிலும் இரு நாடுகளும் இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருளை வழங்க முற்பட்டால் நிலைமைகள் மோசமடையலாம்.
விசேடமாக, அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினை சீனா செயற்படுத்த முனைந்தால் அது அமெரிக்காவிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் எரிபொருள் விற்பனைக்கு பெரும் இடஞ்சலாக அமையும். அதேபோன்று இந்தியாவும் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்து குறைந்த விலையில் வழங்கவே முனையும்.
அதுமட்டுமன்றி, இந்தியா தன்னுடன் மேற்கொள்ளப்பட்ட ஏழு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த அழுத்தங்களை பிரயோக்கும். மறுபக்கத்தில் சீனா தன்னுடன் மேற்கொண்ட கட்சிக்கிடையிலான ஒப்பந்தம் உட்பட 16ஒப்பந்தங்களை அமுலாக்கவே முனையும்.
இத்தகைய நிலைமைகளால் அநுர அரசாங்கம் அடுத்துவரும் காலத்தில் ‘பூனையிடம் சிக்கிய எலியை’ ஒத்த நிலைமைக்குள் தான் தள்ளப்பட்டப்போகிறது. இதிலிருந்து எவ்வாறு அநுர அரசாங்கம் மீளப்போகிறது.