புதிய கூட்டின் எதிர்காலம்

“77 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர் தேசம் தனது அரசியல் அபிலாஷைகளை
திருப்திப்படுத்தும் விதத்திலும் தன்னுடைய தனித்துவம், பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
நோக்கிலும், வடக்கு – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தனது மரபுவழித் தாயகத்தில்
ஒரு தனியான தேசம் என்ற அடிப்படையில் தனது பிறப்புரிமையான சுயநிர்ணய
உரிமையின் அடிப்படையில் தனது விவகாரங்களைத் தானே கையாளக்கூடிய விதத்திலும்
தனது சுதந்திரத்தை நிலைநிறுத்தும் வகையிலும் பூரண பொறுப்புவாய்ந்த ஒரு சுயாட்சி
அரசியல் ஆட்சி முறையைப் பெற்றுக் கொள்வதற்கு உரித்துடையது என்ற யதார்த்தத்தின்
அடிப்படையிலும், இந்த இலக்கினை அடைவதற்கு தமிழ்த் தேசத்தினால் தொடர்ந்து
நிராகரிக்கப்பட்டு வந்திருக்கும் ஒற்றையாட்சி எனப்படும் அரசியல் ஆட்சி முறையின்
எந்தவொரு ஏற்பாட்டின் கீழும் அறவே இடமில்லை என்பதுடன் பூரண சுயாட்சி அதிகாரம்
கொண்ட அரசு ஒன்றினைஇ தமிழ்த் தேசத்தின் மரபுவழித் தாயகத்தில்,இலங்கைத் தீவு
என்ற யாதார்த்த ரீதியான வரையறைக்குள் ஏற்படுத்துவதற்கு, ஒற்றுமையாகவும்
உறுதியாகவும் பாடுபட நாம் தீர்மானித்துள்ளோம் என்பதையும்
பிரகடனப்படுத்துகின்றோம்”
என்று குறிப்பிட்டு தற்போது தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயக தமிழரசுக்கட்சி,
பசுமைத்தாயகம், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸை தலைமையாகக் கொண்டு
செயற்பட்டுவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன ஒன்றிணைந்து
உருவாக்கியுள்ள தமிழ்த் தேசியப் பேரவைக்கும், புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்.,
ஜனநாயக போராளிகள் உள்ளவற்றின் கூட்டான ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி
ஆகிய ஒன்றிணைந்து ‘கொள்கைக் கூட்டணி’ ஒன்றை அமைத்துள்ளன. இக்கொள்கைக்
கூட்டணியானது, பின்வரும் ஒன்பது விடயங்களின் உடன்பாடுகள் கண்டுள்ளதாக
வெளியிடப்பட்டுள்ளது. அவ்விடயங்களாவன,
1. தமிழ் மக்களின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழ்த்
தேசத்தின் இறைமையின் பாற்பட்டும் வடக்கு-கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய
மரபுவழித் தாயகத்தில், ஒரு பூரணமான சமஷ்டி ஆட்சி முறை,அரசியல்சாசன ரீதியாக
ஏற்படுத்தப்படுவதே தமிழ்த் தேசத்தின் இறைமையை ஏற்பதாகவும் தியாகம்
செறிந்ததுமான நீண்ட விடுதலைப் போராட்டத்தின் அர்த்தமுள்ள அங்கீகாரமாகவும்
இருக்க முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம். 
மேலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எமது முஸ்லிம் சகோதரர்களின்
உரிமைகளையும் அபிலாஷைகளையும் நிலைநிறுத்தும் விதத்தில் அரசியல் சாசன
ரீதியானவையும், வலுவானவையுமான அரசியல் நிர்வாக ஏற்பாடுகள், முஸ்லிம்
சமூகத்தின் சம்மதத்துடனும் இணக்கப்பாட்டுடனும் ஏற்படுத்தப்படவேண்டும்
என்பதையும் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

2. அரசியல் யாப்பிற்கான 13 ஆவது திருத்தம் என்பது தமிழ்த் தேசிய
இனப்பிரச்சினைக்கான முழுமையானதோ இறுதியானதோ தீர்வு அல்ல என்பதனை
சுட்டிக்காட்டுகின்றோம்.
3. கடந்த 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கத்தின் அரசியல் நிர்ணய சபையினால்
உருவாக்கப்பட்ட அரசியல் சாசன வரைபு என்பது, ஒற்றையாட்சிக்கு உட்பட்டது என்ற
காரணத்தால் தமிழ்த் தேசத்தின் சுயாட்சிக்கு இடமளிக்கப்படவில்லை என்ற
அடிப்படையில் அதனை நாங்கள் ஏற்கனவே நிராகரித்துள்ளோம் என்பதனை
இருதரப்பினரும் வெளிப்படுத்துகின்றோம். 
4. போரின் போதும் அதற்குப் பின்னும் இழைக்கப்பட்ட மற்றும்
இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித
குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறைகளை முழுமையாக
நிராகரித்துச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை ஒன்று அவசியமானது என்பதனை இரு
தரப்பினரும் வெளிப்படுத்துகின்றோம். 
5. இந்த இலட்சியப் பயணத்தில் தமிழ் தேசத்தின் நலனை விரும்பும் சகல தமிழ்த் தேசிய
சக்திகளும் நேர்மையாகவும், விரைவாகவும் இணைத்துக் கொள்ளப்படுவதற்குச்
சாத்தியமான சகல முயற்சிகளும் எடுக்கப்படவேண்டும் என்பதையும் நாம்
வலியுறுத்துகின்றோம். 
6. இந்த அடிப்படையில் பிரதிநிதித்துவ ஆட்சி முறை ஒன்றின் கீழ் கிடைக்கும் சகல
சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும், தமிழ்த் தேசியம் சார்ந்து நேர்மையாக செயற்படும்
சக்திகள் ஒன்றிணைந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும், அதே நேரத்தில்
இலங்கைக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் புலம் பெயர் ஈழத் தமிழர்கள் மற்றும்
பரந்த தமிழர் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரதும் ஒருமித்த ஆதரவு
பெற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் நாங்கள் விரும்புகின்றோம். இந்த
அடிப்படையில் இந்த முயற்சிகளுக்கு எமது மக்கள் அனைவரினதும் ஆதரவையம்
ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் நாங்கள் நாடி நிற்கின்றோம். 
7. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வலியுறுத்துவதிலும் அரசியல் சாசன ரீதியாக
அவற்றை நிலைநாட்டிக் கொள்வதிலும் தமிழ் மக்கள் நேர்மையாகவும் உறுதியாகவும்
தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளனர். தமிழ் மக்களின் முழுமையான அபிலாஷைகளைப்
பூர்த்தி செய்யும் முகமாக எதிர்காலத்தில் நேர்மையுடனும் கொள்கை உறுதியுடனும் தமிழர்
தேசத்தின் அரசியல் செயல்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக
ஏற்கனவே பல்வேறு தமிழ்த் தேசியக் கட்சிகளும் வெகுசன அமைப்புகளும்
ஒருங்கிணைந்து மக்களின் பங்கேற்புடன் தயாரித்து 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள்
வெளியிடப்பட்ட தீர்வுத் திட்டத்தை அடிப்படையாகக் கொள்ளமுடியும் என நாம்
கருதுகின்றோம். 
8. இந்தக் குறிக்கோளை ஜனநாயக ரீதியான செயற்பாடுகளாலும்,மக்கள்
எழுச்சியினாலுமே சாதிக்க முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்திஇ ஒரு பரந்த ஜனநாயக
அரசியல் கட்டமைப்பாகவும், இந்த இலக்கினை முன்வைத்து சகல தமிழ்த் தேசிய

சக்திகளையும் ஒன்றிணைத்துச் சாத்தியமான விதத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கும்,
அதை முன்னெடுத்துச் செல்வதற்கும் எமது மக்களின் ஆதரவினை நாடிநிற்கின்றோம்.
9. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் இரண்டு தரப்பினரும் எதிர்காலத்தில்
தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம் என்பதனையும்
வெளிப்படுத்துகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கொள்கை உடன்பாட்டில் புதிய விடயங்கள் எவையும் இல்லை. தமிழ் மக்களின்
அடிப்படை அபிலாஷைகளாக இருக்கின்ற விடயங்கள் தான் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறித்த அபிலாஷைகளை ஜனநாயக வழியில் பெற்றுக்கொள்ள முடியாதெனக் கருதிய
இளைஞர்கள் ஆயத ரீதியில் போராடினார்கள். அவர் பின்னர் இந்திய, இலங்கை
ஒப்பந்தத்துடன் ஜனநாயக வழிக்குத் திரும்பினார்கள். மாகாண சபைகள் முறைமையையும்
ஏற்றுக்கொண்டார்கள்.
இத்தகையவர்களின் ஒன்றிணைந்த அணியாகவே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி
இருக்கின்றது. அந்தக் கூட்டணியில் இருந்து உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக
பிரிந்த அணியினரான தமிழ்த் தேசிய கட்சியினரும், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக
ஆசனப்பகிர்வில் பிரச்சினைகள் ஏற்பட்டு தமிழரசுக்கட்சியில் இருந்து வெளியேறிய
தரப்பினரான ஜனநாயக தமிழரசுக்கட்சியினரும் ஒன்றிணைந்துள்ளனர்.
கடந்த காலத்தில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸை கடுமையாக எதிர்த்த மேற்படி
தரப்புக்கள் தற்போது ஒன்றாகக் கைகோர்த்துள்ளன. ஒற்றையாட்சி எதிர்ப்பு, மாகாண
சபை முறைமை எதிர்ப்பு போன்வற்றில் தீவிரமாக இருக்கும் தமிழ் காங்கிரஸுடன்
இணைந்திருப்பதானது அத்தரப்புக்கள் தமது கொள்கை நிலைப்பாட்டை மாற்றிக்
கொண்டுள்ளனவா என்ற கேள்வியை இவ்விடத்தில் எழுப்புகின்றது.
ஆனால், சற்று ஆழமாகப் பார்க்கின்றபோது, இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு ‘செக்’
வைப்பதற்கான ஒரு நகர்வையே மேற்படி தரப்புக்கள் எடுத்திருக்கின்றன. அவை
உள்ளுராட்சி மன்றங்களை மையப்படுத்தியதாக தற்போது வெளிப்படுத்தப்பட்டாலும்
அடுத்த மாகாண சபைகளுக்கான தேர்தல் நடந்தால் அதிலும் தொடர்வதற்கான
சாத்தியப்பாடுகளே காணப்படுகின்றன. அதுவரையில் பொறுத்திருந்து தான் பார்க்க
வேண்டும். கொள்கைக் கூட்டின் பயணம்.