மாகாண சபைத் தேர்தலுக்கான அழுத்தங்கள்

உள்ளுராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்டுள்ள கணிசமானளவுக்கு வீழ்ச்சியால் அண்மைய காலத்தில் தேர்தலொன்றுக்கு தயாரில்லாத நிலையிலேயே அரசாங்கம் உள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய புதிய அரசியலமைப்புக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன என்று அறிவித்திருக்கிறார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க புதிய அரசியலமைப்பு ண்டுவரப்படும் வரை மாகாணசபைகள் முறை தொடர்ந்து இருக்கும் என்று கூறுகின்றார். மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று
விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் சந்தன அபயரத்ன குறிப்பிடுகின்றார்.
ஆனால், மாகாணசபைகள் முறை இலங்கை மீது இந்தியாவினால் திணிக்கப்பட்டது என்பதே பொதுவில் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் குறிப்பாக சிங்கள தேசியவாத சக்திகளின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
1987 ஜூலை இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதை தொடர்ந்து
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை முறையை அன்றைய அரசாங்கம் உண்மையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரமே நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், தமிழர்களுக்கு பிரத்தியேகமாக எதையும் வழங்கவில்லை என்று சிங்கள மக்களுக்கு காட்டுவதற்காக இலங்கை அரசாங்கம் நாடு முழுவதும் மாகாண சபைகளை அமைத்தது.
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக அதிகாரப்பரவலாக்கத்தை கோரிய வடக்கு, கிழக்கு மக்களுக்கு மாத்திரம் மாகாண சபைகளை வழங்காமல் தென்னிலங்கையிலும் மாகாண சபைகளை நடைமுறைப்படுத்தியதன் மூலம் சிங்கள மக்கள் மீது உண்மையில் அவற்றை ஜனாதிபதி ஜே.ஆர்.
ஜெயவர்தனவே திணித்தார்.
மாகாண சபைகள் முறை 37 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகின்ற போதிலும், கடந்த எட்டு வருடங்களாக தேர்தல்கள் நடத்தப்படாமல் மாகாண நிருவாகங்கள் ஆளுநர்களின் கீழ் இயங்குவது குறித்து தென்னிலங்கை அரசியல் கட்சிகளோ அல்லது மக்களோ எந்த விதமான எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை.

ஆனால், மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டு மாகாணங்களின் நிருவாகங்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று தென்னிலங்கையில் அடிக்கடி வலியுறுத்துபவராக முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய விளங்குகிறார்.
கட்சி அரசியலில் இருந்து விலகிய ஜெயசூரியவின் தலைமையில் தற்போது இயங்கிவரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மாகாணசபை தேர்தல்களை அரசாங்கம் விரைவில் நடத்த வேண்டும் என்று கடந்த வாரமும் அறிக்கையை வெளியிட்டிருந்தது.
அரசின் ஏனைய சகல பிரதிநிதித்துவ நிறுவனங்களும் இயங்கிவருகின்ற ஒரு நேரத்தில், மாகாண சபைகளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்தும் வைத்திருப்பது அரசியலமைப்பை மீறுகின்ற ஒரு செயல் மாத்திரமல்ல, தங்களது பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் மக்களுக்கு இருக்கும் உரிமையை மீறுவதாகவும் அமைகிறது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
சமூகநீதிக்கான தேசிய இயக்கத்தைப் போன்று தேசிய சமாதானப் பேரவையும் மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்தவேண்டும் என்று அரசாங்கத்தை அடிக்கடி வலியுறுத்திவருகிறது.
மாகாணசபைகள் மக்கள் பிரதிநிதிகளினால் ஒழுங்கான முறையில் நிருவகிக்கப்படுவதற்கு பெரும் இடையூறாக விளங்கும் ஆளுநரின் மட்டுமீறிய அதிகாரங்களை குறைக்கும் சாத்தியம் குறித்து ஆராய்வதற்கு அரசாங்கம் அமைச்சரவை உபகுழுவை நியமிக்க வேண்டும் என்று கூட சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், பெரும்பாலான தமிழ்க் கட்சிகளிடம் இருந்து மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வருவதில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. வடக்கு,கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்திய பிரதமரை அல்லது இந்திய இராஜதந்திரிகளை சந்திக்கின்ற சந்தர்ப்பங்களில் மாத்திரம் 13ஆவது திருத்தத்தை முழுமையாக டைமுறைப்படுத்துவதுடன் மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று அவர்களை கேட்பதை
வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் அவற்றைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை.
தமிழீழ விடுதலை புலிகள் 13ஆவது திருத்தத்தை எதிர்த்த காரணத்தினால், அந்த இயக்கத்தின் மீதான தங்களின் விசுவாசத்தை இன்னமும் வெளிக்காட்டும் ஒரு அறிகுறியாக மாகாணசபைகள் மற்றும் 13ஆவது திருத்தம் பற்றி பேசுவதை சில தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்து வருகிறார்கள். ஆனால், மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படும் பட்சத்தில் அவர்களின் கட்சிகள் நிச்சயம் போட்டியிடும்.
முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான முதலாவது வடமாகாணசபை எத்தகைய நூற்றுக்கணக்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதில் காலத்தைச் செலவிட்டது என்பதையும் அதனால்
மாகாணசபைக்கு இருக்கக்கூடிய குறைந்தட்ச அதிகாரங்களையாவது பயன்படுத்தி மக்களுக்கு உருப்படியான எந்த சேவையையும் செய்யமுடியாமல்போனது.
இத்தகைய பின்புலத்தில், இணைந்த வடக்கு — கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் மாகாண ஆட்சிமுறையை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து தமிழ் மககள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடப் போவதாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பு கவனத்துக்கு உரியதாகிறது.
தேர்தல் அரசியலில் ஈடுபடுவதற்காகவோ அல்லது மீண்டும் பதவிகளை பெறுவதற்காகவோ இந்த முயற்சியில் இறங்கவில்லை என்று கூறும் பெருமாள் தமிழ் கட்சிகளையும் சகல மட்டங்களிலும் இருக்கக்கூடிய தமிழ் மக்களின் அபிலாசைகளில் அக்கறையுடைய புத்திஜீவிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களுடன் கலந்தாலோசனை நடத்தவிருப்பதாக கூறியிருக்கிறார்.
முதற்கட்டமாக பெருமாள் தனது முன்னாள் தோழர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.)யாழ்பாணத்தில் கலந்தாலோசனை நடத்தினார்.
தொடர்ந்து சி.வி.கே.சிவஞானம், டக்ளஸ் தேவானந்தா, சந்திரகுமார் என்று அவர் பலரைச் சந்தித்துள்ளார்.
அதேநேரம், வரதாரஜப்பெருமாளுடனான சந்திப்பின் பின்னர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மக்களுக்கு குறைந்தபட்சம் கிடைத்திருக்கும் அதிகாரங்களை கையில் எடுப்பதன்
மூலமாகவே வடக்கு, கிழக்கை பாதுகாக்க முடியும் என்பதுடன் இரு மாகாணங்களிலும் அரசாங்கம் மேற்கொள்ளும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை ஓரவுக்காவது தடுத்து நிறுத்தமுடியும்.
அதிகாரங்கள் கையில் இல்லாத காரணத்தினால் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக முன்னெடுக்கின்ற சகல நடவடிக்கைகளையும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த மாகாணசபையும் 13வது திருத்தத்தின் மூலமான அதிகாரங்களும் மாத்திரமே தற்போது எம் கைவசம் இருக்கின்றன. தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் வரையில் மாகாணசபையின் அதிகாரங்களை பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகருவதே புத்திசாலித்தனமானது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வரதராஜப்பெருமாளின் முயற்சி தொடர்பில் மற்றைய தமிழ்க்கட்சிகள் எத்தகைய பிரதிபலிப்பை யும் இதுவரையில் வெளிக்காட்டவில்லை. அவர் தனது முயற்சி தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கு உத்தியோகபூர்வமாக இன்னமும் அறிவிக்கவில்லை என்பது அதற்கு காரணமாக இருக்கலாம்.

தென்னிலங்கை மக்களை பொறுத்தவரை, மாகாணசபைகள் இயங்கினால்தான் அவர்களது தேவைகள் நிறைவேற்றப்படும் என்றில்லை. மத்திய அரசாங்கமே ஏழு மாகாணங்களிலும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும். ஆனால், வடக்கு, கிழக்கு மக்களை பொறுத்தவரை, மாகாண ஆட்சிமுறை அவர்களிடம் இருந்தால் மாத்திரமே ஓரளவுக்கேனும் மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடியதாகவும் பிராந்தியத்தில் இடம்பெறுகின்ற அத்துமீறல்களை தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். அதனால் மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மக்களிடம் இருந்தே வெளிக் கிளம்பவேண்டும்.