ஜனாதிபதி ‘அருணகுமார திசாநாயக்க’ (சில மணித்தியாலங்களில்
திருத்தப்பட்டாகிவிட்டது) விளிக்கப்பட்ட கடிதத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப், இலங்கைக்கான தீர்வை வரியை 30சதவீதமாக அறிவித்திருக்கின்றார்.
தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரையில், 30சதவீதம் என்பது கடுமையான
பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துக்கின்றதொரு விடயம் தான். அதிலும் குறிப்பாக
இலங்கையைப் பொறுத்தவரையில் ‘மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்ததைப்’
போன்றதொரு நிகழ்வாகும்
முன்னதாக, ஏப்ரல் 2ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கையில்
இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகயை 44சதவீதம் என்று
அறிவித்தபோது, பொருளாதார வங்குரோத்து அடைந்திருந்த நாடென்ற வகையில்
பேரதிர்ச்சியாக இருந்தது.
ஏனென்றால், 3பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களை, அமெரிக்க சந்தைக்கு
அனுப்புகின்ற இலங்கையினால், ட்ரம்பின் இந்த அறிவிப்பையிட்டு அதிர்ச்சியடையாமல்
இருக்க முடியாது.
இலங்கை பொருட்களின் விலை உயரும்போது, சந்தையில் கிடைக்கும் மாற்று போட்டிப்
பொருட்களின் பக்கம் அமெரிக்க நுகர்வோர் திரும்புவார்கள். இது இலங்கை
பொருட்களுக்கான கேள்வியை குறைத்து, ஏற்றுமதி கணிசமாக வீழ்ச்சி அடையும்
நிலையை ஏற்படுத்தும்.
ட்ரம்பின் அறிவிப்பு வெளியானதும், உடனடியாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி
அலுவலகத்துடன் பேச்சுக்களை ஆரம்பித்த ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான
அரசாங்கம், இரண்டு தடவைகள் வொஷிங்டனுக்கு உயர்மட்ட குழுக்களையும்
அனுப்பியிருந்தது.
இந்த பேச்சுக்களுக்குப் பின்னர், கூட்டறிக்கை வெளியிடப்படும் என்றெல்லாம்
அரசாங்கம் கூறிய போதும் எதுவும் நடக்கவில்லை. இரண்டாவது பட்டியலில் தான்
இலங்கைக்கான வரி 30சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.
44சதவீதமாக அறிவிக்கப்பட்ட வரி, 30சதவீதமாக குறைக்கப்பட்டதையிட்டு நிம்மதி
கொள்வதா? அல்லது 30சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதற்காக கவலை கொள்வதா?
என்று தெரியாத நிலையே தற்போது ஏற்பட்டிருக்கிறது.
ட்ரம்பின் கடிதம் வெளியானதும், அதுபற்றி கருத்து வெளியிட்ட வெளிவிவகார பிரதி
அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, தீர்வை வரிக்குறைப்பு தங்களின் இராஜதந்திரத்திற்கு
கிடைத்த வெற்றி என்றும், பேச்சுக்களின் மூலம் அதிகபட்ச வரிக்குறைப்பு பலனை எட்ட
முடிந்திருப்பதாகவும், குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இதுவொன்றும் பெருவெற்றி அல்ல. 14சதவீதம் வரியே குறைக்கப்பட்டிருக்கிறது
என்பது உண்மை. 30சதவீதம் வரி அறவிடப்படுவது இலங்கைக்கு ஏற்படுத்தப் போகும்,
பாதிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டால், இதையிட்டு நிம்மதியடைய முடியாது.
இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்களில் மிக
முக்கியமானது ஆடைகளாகும். அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதியில் இலங்கைக்கு
போட்டியாக இருக்கும், சீனாவுக்கு, 55சதவீத வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இது நிம்மதி
அளிக்கக் கூடிய ஒன்று.
அதுபோல, இந்தோனேசியாவுக்கு 32 சதவீதமும், பங்களாதேஷுக்கு 35சதவீதமும்,
தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கு 36 சதவீதமும் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இவை
இலங்கையை விட அதிகம்.
இந்த நாடுகள், இலங்கையை விடக்கூடுதல் வரியை செலுத்தியே, அமெரிக்கச் சந்தையை
எட்ட முடியும். இதுவுவொரு வகையில் இலங்கைக்கு சாதகமான நிலைமையாகும்.
ஆனால், ஆடை ஏற்றுமதியில், அண்மைக்காலத்தில் இலங்கைக்கு கடும் போட்டியாக
இருக்கின்ற நாடு வியட்நாம். 2024ஆம் ஆண்டு 16.7பில்லியன் டொலர்கள்; பெறுமதியான
ஆடைகளை, அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்திருந்தது வியட்நாம்.
இப்பொழுது, அந்த நாடு, இலங்கை உள்ளிட்ட ஏனைய போட்டியாளர்களுடன், இன்னும்
வீரியத்துடன் போட்டி போடக்கூடிய நிலையில் இருக்கிறது.
ஏனென்றால் இரண்டாம் கட்டமாக ட்ரம்ப் கடிதம் மூலம், நாடுகளுக்கான வரிகளை
அறிவிப்பதற்கு முன்னர், வியட்நாமுக்கு 20சதவீத வரியை விதிக்கும் இணக்கப்பாட்டை
ஏற்படுத்தியிருந்தார்.
இலங்கையை விட 10சதவீதம் குறைந்த வரியுடன், வியட்நாமின் ஆடைகள் மற்றும்
ஏற்றுமதிப் பொருட்கள், அமெரிக்கச் சந்தையை அடைகின்ற போது, அது இலங்கைக்கு
பாதகமானதாக இருக்கும்.
ஆனால், இலங்கை அரசாங்கம், விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல,
மக்களுக்கு ஒரு பொய் விம்பத்தை காட்ட முனைந்திருக்கிறது.
எவ்வாறாயினும், வர்த்தக சமநிலையை ஏற்படுத்துவதன் மூலம், வரிக் குறைப்பு
சாத்தியப்படும் என்று ட்ரம்ப் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அரசாங்கம் இரண்டு முறை அமெரிக்காவுக்கு சென்று பேச்சுக்களை நடத்திய போதும்,
அத்தகைய வர்த்தக சமநிலையை ஏற்படுத்துவதுது தொடர்பாக வாக்குறுதிகளை
கொடுக்கவில்லை.
அமெரிக்காவிடம் இருந்து கூடுதல் பொருட்களை இறக்குமதி செய்யுமாறு, ட்ரம்ப்
நிர்வாகத்தினால், கோரிக்கை விடுக்கப்பட்டது. இயற்கை எரிவாயு போன்ற, எரிசக்தி
பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதும்,
சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால், சீனா எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கவுள்ள சூழலில், அமெரிக்காவிடம்
இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய முனைந்தால், அது சீனாவுக்கு எரிச்சலை
ஏற்படுத்தும்.
இதனால் தான் அரசாங்கம் அமெரிக்காவிடம் இருந்து எரிவாயு கொள்வனவுக்கான
சாத்தியம் குறித்து ஆராய்வதில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. இதன் விளைவு,
இலங்கை அமெரிக்காவின் 30 வீத வரியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதேநேரம், இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நெருங்கிய வர்த்தக உறவுகள்
இருக்கின்றன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, வியட்நாம் தமது செலவில்,
அழைத்து பேச்சுக்களை நடத்தி விட்டு, விசேட ஜெட் விமானத்தில் ஏற்றி, உள்ளுராட்சித்
தேர்தலில் வாக்களிப்பதற்காக அவரை திருப்பி அனுப்பி வைத்தது நினைவிருக்கலாம்.
கம்யூனிச ஆட்சி நடக்கின்ற வியட்நாம், இலங்கையை காப்பாற்றுவதற்கு விரும்பினால்,
ஒரு ஏற்பாடு செய்யலாம். இலங்கைப் பொருட்களை வியட்நாமின் உற்பத்தி என்று கூறி,
அமெரிக்க சந்தைக்கு அனுப்ப முடியும். அதற்கான வாய்ப்புகள் இருப்பதை மறுக்க
முடியாது.
சர்வதேச வர்த்தகத்தில் இவ்வாறான ஏமாற்று வேலைகள், இரகசிய வர்த்தகங்கள்
இடம்பெறுவது வழமை. ஐரோப்பிய சந்தையில் ஜிஎஸ்பி பிளஸ் சலுகைக்காக, வேறு
நாடுகளில் இருந்து இறக்குமதி செய்த பொருட்களை இலங்கை உற்பத்தி என்று மீள்
ஏற்றுமதி செய்யும் வழக்கம், நீண்டகாலமாக உள்ளது.
அது குறித்த விசாரணைகளும் முன்னர் இடம்பெற்றிருந்தன. ஆனால், இவ்வாறான
முயற்சிக்கும், ட்ரம்ப் ஆப்பு வைத்திருக்கிறார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் , வரியில்
இருந்து தப்பிக்கின்ற வகையில், மாற்று ஒழுங்கு முறைகளின் ஊடாக அமெரிக்காவுக்கு
பொருட்களை ஏற்றுமதி செய்ய முயன்றால், தண்டனை வரிகளை எதிர்கொள்ள நேரிடும்
என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆக, இப்போது இலங்கை, ட்ரம்பின் காலடியில் விழ வேண்டும் அல்லது உலகளவில் புதிய
சந்தை வாய்ப்புகளை தேட வேண்டும். அவ்வாறு தேடுவதற்கு அரசாங்கம் தீவிரமான
கரிசனைகளைக் கொண்டிருப்பதாக கூறியிருக்கின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், அரசாங்கமும் அமெரிக்காவுடன் தொடர்ந்தும்
பேச்சுக்களை மேற்கொள்ளவிருப்பதாகவும், ஆகஸ்ட் மாதத்துக்குள் வரிகளைக்
குறைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளது.
ஆனால், பிரித்தானியா இலங்கையின் மீது கருணை காண்பித்துள்ளது. அதாவது,
இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
செயன்முறையை இலகுபடுத்தக்கூடியவகையில் பிரித்தானியா அதன் அபிவிருத்தி
அடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக செயன்முறையின்கீழ் புதிய சலுகை
மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இப்போதைக்கு இலங்கைக்கு
நிம்மதியான விடயம்.