பொறுப்புக்கூறல், முழுமையான ஆய்வு நடத்தல்
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டப் பணிகள்
கடந்த9ஆம் திகதியுடன் தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரையில் 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54
மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. முதலாம்
கட்டத்தில் 9நாட்களும், இரண்டாம் கட்டத்தில் 14நாட்களுமாக மொத்தம் 23நாட்கள்
அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு;ள்ளன.
யாழ்.மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில்
அகழ்வுப்பணிகள் நடைபெற்றதோடு யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட
வைத்திய அதிகாரி எஸ்.பிரதாபன் உள்ளிட்ட குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.
இவ்வாறிருக்கையில், செம்மணிப் புதைகுழி இதுவரையில் 2செம்மணிப் புதைகுழி
கிட்டத்தட்ட 30 ஆண்டு வரலாற்றை கொண்டது. 1996ஆம் ஆண்டு, யாழ்ப்பாணக்
குடாநாடு முழுமையாக இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர்,
நூற்றுக்கணக்கானவர்கள், கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
அவர்களில் பெரும்பாலானவர்கள், செம்மணி பகுதியில் கொன்று
புதைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. கிருசாந்தி குமாரசாமி படுகொலையை
தொடர்ந்து, அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட
சோமரத்ன ராஜபக்ஷ என்ற, கோப்ரல் தர இராணுவ அதிகாரி, செம்மணியில்
நூற்றுக்கணக்கானோர் கொன்று புதைக்கப்பட்டதாக சாட்சியம் கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் செம்மணியில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அகழ்வு பணிகள்
மேற்கொள்ளப்பட்ட போதும் அது முழுமையாக முன்னெடுக்கப்படாமல்,
இடையிலேயே கைவிடப்பட்டது.
அது தொடர்பான விசாரணைகள், யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரத்திற்கும்
பின்னர் கொழும்பிற்கும் மாற்றப்பட்டன. அந்த வழக்கு இரண்டரை தசாப்தங்களுக்கு
மேலாக நடந்து கொண்டு இருந்தாலும், எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை.
ஏனென்றால், வழக்குத்தொடுநர் தரப்போ அல்லது வழக்கை விசாரிக்கும் தரப்போ –
இந்த விடயத்தில் நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன்
செயற்பட்டிருக்கவில்லை.
இவ்வாறான நிலை தான், போர்க்காலத்தில் இடம்பெற்ற பெருமளவிலான
மீறல்களுக்கு உள்நாட்டில் நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கை பாதிக்கப்பட்ட
மக்கள் மத்தியில் ஏற்படுவதற்கு காரணம்.
வடக்கில் அப்போது நிலவிய போர்ச் சூழல், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு
இருந்த அச்சுறுத்தல்கள், பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து நீதியைப் பெற்றுக்
கொடுப்பதற்கான சூழல் இல்லாமை போன்ற காரணங்களால் செம்மணி புதைகுழி
விவகாரம் மூடி மறைக்கப்பட்டு விட்டது.
வரலாற்றில் மறைக்கப்பட்ட அந்தப் புதைகுழி அண்மையில் வெளிச்சத்துக்கு
வந்திருக்கிறது. இந்த புதைகுழி கண்டறியப்பட்டதும் அதனை நீதிமன்றத்திற்கு
தெரியப்படுத்தி, அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கான அனுமதியை பெற்றுக்
கொள்வதற்கு கூட, தனிப்பட்ட முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டே
சாத்தியமானது.
இல்லாவிட்டால் இதுவும் கூட, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் மூடி
மறைக்கப்பட்டிருக்கும். இப்பொழுது இது சர்வதேச கவனிப்பைப் பெற்ற ஒன்றாக
மாறி இருக்கிறது. சிங்கள மக்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஆனால் இத்தகைய ஒரு புதைகுழியின் வரலாறு இன்னமும் முற்றும் முழுதாக
சரியாகப் பதிவு செய்யப்படவில்லை.
யாழ்ப்பாண குடாநாட்டில் அப்பொழுது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எத்தனை
பேர், எப்போது தொடக்கம் எப்போது வரை அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள்,
அவர்களுக்கு என்ன நடந்தது, யாரால் நடந்தது, என்பன போன்ற வரலாற்று
தரவுகள், முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை.
இது தொடர்பான குழப்பமான அல்லது மாறுபட்ட தகவல்கள் உள்ளன. ஆனால்
நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பது
மட்டும் உண்மை.
அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று இன்று வரை
தெரியாவிட்டாலும், அவர்களில் கணிசமானோர் செம்மணியில் கொன்று
புதைக்கப்பட்டார்கள் என்பதில் ஐயம் இல்லை.
செம்மணி என்பது, அப்போது, யாரும் செல்வதற்கு அஞ்சுகின்ற ஒரு இராணுவ
பிரதேசமாக இருந்தது. அந்தப் பெருவெளியை கடந்து தென்மராட்சிக்கு
செல்பவர்களும் சரி, வலிகாமத்துக்கு வருபவர்களும் சரி, அச்சத்துடன் உயிரை
கையில் பிடித்துக் கொண்டு சென்ற காலம் அது.
அப்படிப்பட்ட இடத்தில் இரவோடு இரவாக கொன்று புதைக்கப்பட்டவர்களை
யாரும் தேடிச் செல்லக் கூடிய நிலை இருந்திருக்கவில்லை. அதனை நேரில் யாரும்
பார்த்திருப்பதற்கும் வாய்ப்பில்லை. அப்படி பார்த்திருந்தாலும் கூட, அவர்கள்
வெளியே அதை சொல்வதற்கு நிச்சயம் முன்வந்திருக்கவும் மாட்டார்கள்.
அப்படிப்பட்ட ஒரு பயங்கரமான சூழலில் யாழ்ப்பாண குடாநாடு இருந்தது.
ஆனால், இந்த புதைகுழி அகழ்வு சூடு பிடிக்க தொடங்கிய பின்னர், அதனை திசை
திருப்புவதற்கு – அதனை மலினப்படுத்துவதற்கு பல்வேறு தரப்புகளும்
முயற்சிக்கின்றதை அவதானிக்க முடிகிறது.
இது ஒரு பாரிய மனிதப் புதைகுழி. அங்கு கொன்று புதைக்கப்பட்டவர்களுக்கு
என்ன நேர்ந்தது? -அவர்கள் யார் ? – அவர்களை கொன்று புதைத்தவர்கள் யார்?
என்பன போன்ற கேள்விகளுக்கு இனிமேல் தான், விசாரணைகளின் ஊடாக
விடைகளை தேடிப் பிடிக்க வேண்டியிருக்கிறது.
தற்போதைய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களை
அதிபுத்திசாலிகளாக காட்டுகின்ற வகையில் சிலர் செயற்படுவது இந்த
விசாரணைகளுக்கு இடையூறை ஏற்படுத்துவதாக சட்ட நிபுணர்கள்
தெரிவித்திருக்கிறார்கள்.
அகழ்ந்தெடுக்கப்படும் மனித எலும்பு கூட்டுத் தொகுதிகளை வைத்து, பலர்
செயற்கை நுண்ணறிவு மூலம் படங்களை உருவாக்குகிறார்கள். எலும்புக்கூடுகளின்
வடிவங்களை மாற்றி அமைக்கிறார்கள். இவ்வாறான படங்கள் இணைய வெளியில்
பெருமளவில் உலாவுகின்றன.
இது விசாரணைகளுக்கும் உண்மையான எலும்புக்கூடுகள் பற்றிய தேடல்களுக்கும்
பெரும் இடையூறை ஏற்படுத்தும். தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகள்
முழுமையடையும் என்பது நிச்சயமில்லை. அது இடைநடுவில் கைவிடப்படலாம்.
அவ்வாறு ஏற்கனவே நடந்திருக்கிறது.
அப்படியான நிலையில் மீண்டும் ஒருமுறை விசாரணை தொடங்கப்படுமானால்,
இந்தப் படங்கள் உண்மையா என, இன்னும் சில பத்தாண்டுகளில் கேள்விகள்
எழுப்பப்படக் கூடும்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் இது ஒரு செயற்கையான படம் என்று
நிரூபிக்கப்படும். அவ்வாறான நிலையில், இந்த புதைகுழி பொய்யான ஒன்றாக
மதிப்பிடப்படுகின்ற ஆபத்து இருக்கிறது.
நவீன தொழில்நுட்பங்கள் எல்லா விடயங்களுக்கும் பயன்படுத்தக் கூடியவை அல்ல.
அவை கற்பனையுடன் ஒருங்கிணைக்கப்பட்டவை. கற்பனையினால்
உருவாக்கப்படுகின்றவை.அவை உண்மையானவை அல்ல. உண்மையான
உருவங்கள் அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
இவ்வாறான நிலையில் ஒரு எலும்புக்கூட்டை செயற்கை நுண்ணறிவு மூலம்
வடிவமைத்து உருவத்தை கொடுக்கின்ற போது, அது உருவாக்கிக் கொடுக்கின்ற
படத்தை அடையாளப்படுத்த முடியாத நிலை கூட ஏற்படலாம்.
அது பாதிக்கப்பட்டவர்களை இன்னும் சிக்கலான சூழலுக்குள் தள்ளும்.
விசாரணைகளுக்கு மாத்திரமன்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கும் கூட இந்த செயற்கை
நுண்ணறிவு படங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்.
அதைவிட இந்த படங்களை வைத்துக் கொண்டு இப்பொழுது பலர், பலவிதமான
கதைகளை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் இப்படி நடந்திருக்கலாம்,
அப்படி நடந்திருக்கலாம் என்று தம் விருப்பப்படி பதிவுகளை இடத் தொடங்கி
இருக்கிறார்கள். இது கூட ஒரு வரலாற்று திரிபுக்கே வழிவகுக்கும்.
இன்றைக்கு இது கற்பனையானதாக எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் இன்னும்
சில பத்தாண்டுகளில் இது உண்மையானதாக பதிவு பெறக் கூடிய ஆபத்து உள்ளது.
வரலாறு தெளிவாக- சரியாக பதிவு செய்யப்படாத போது, திரிபுகளும்
பொய்களுமே அதனை ஆக்கிரமித்துக் கொள்கிறது.
செம்மணி படுகொலைகள், புதைகுழிகள் தொடர்பான வரலாறு முழுமையாக பதிவு
செய்யப்படாமல் இருக்கின்ற சூழலில், அதை ஒட்டி கற்பனையாக கட்டவிழ்த்து
விடப்படுகின்ற விடயங்கள், எப்போதும் ஆபத்தானவை.
அவை இந்த படுகொலை விடயத்தில் நீதி பெறுகின்ற முயற்சிகளை
பின்னடைவுக்குள் தள்ளும். வரலாறு என்பது வரலாறாகவே பதிவு செய்யப்பட
வேண்டும். மகாவம்சத்தைப் போல, கற்பனையாக பதிவு செய்யப்பட்டு விடக்
கூடாது.
வரலாற்றைப் பதிவு செய்கின்ற போது, திரிபுகளுக்கும் இடைச்செருக்கல்களுக்கும்
இடம் கொடுக்கப்படுமேயானால் அது வரலாற்றையே திசை திருப்பி விடும்.
வரலாற்றின் உண்மைகளை புதைகுழிக்குள் தள்ளிவிடும்.
உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக தோண்டப்படும் செம்மணிப்
புதைகுழிகள், உண்மைகளை புதைப்பதாக அமைந்து விடக் கூடாது. இதில்
ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது.