இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் பிரகாரம் வரையறுக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, சிறு குற்றங்களுக்காக அல்லது பெருங்குற்றங்களுக்காக நீண்டகாலமாக
சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளுக்கு விசேட தினங்களில் பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழக்கம்.
இந்த வழக்கத்தை பின்பற்றுவதற்காக சில நடைமுறைகள் உள்ளன. சிறைச்சாலைகள் திணைக்களம் பொதுமன்னிப்பு வழங்க தகுதியான கைதிகளின் பட்டியலை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கும்.
அங்கு பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் விடுதலை செய்ய தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொது மன்னிப்பு அளித்து விடுவிப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்படும்.
ஆனால், இதற்குள்ளேயும், மோசடிகள் நடக்கலாம் என்று, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பேரேரா வெளிப்படுத்தும் வரை - யாருக்கும் தெரியாது.
பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா இந்த குற்றச்சாட்டை கூறிய போது- ஆளும்கட்சியினர் அதனை பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஜனாதிபதி செயலகமும் சரி, சிறைச்சாலைகள் திணைக்களமும் சரி, எல்லாம் உரிய வழி முறைகளின்படியே இடம்பெறுகின்றன என்றே நியாயப்படுத்த முயன்றன.
4 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டவர், 10 நாட்களிலேயே பொதுமன்னிப்பில் விடுதலையானது எப்படி என்று ஆதாரத்துடன் அஜித் பெரேரா கேள்வி எழுப்பியதால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவிற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தொடக்கத்திலேயே முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. ஏனென்றால் ஜனாதிபதி செயலகத்தினால் பொதுமன்னிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்ட கைதிகளின் பட்டியலில், அதுல திலகரத்ன என்ற கைதியின் பெயர் இருக்கவில்லை.
மோசடி இடம்பெற்றதை உணர்ந்த ஜனாதிபதி செயலகம், உடனடியாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், இது ஒரு மிகப்பெரிய மோசடி என்பது வெளிப்பட்டுள்ளது.
உடனடியாக அநுராதபுர சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகரும், சிறைச்சாலை ஆணையாளர் நாயகமும் பதவிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோசடிகளில் இவர்கள் எந்தளவுக்கு தொடர்புபட்டிருக்கிறார்கள் - இவர்களுக்குத் தெரிந்தே தவறுகள் இடம்பெற்றதா- இவர்களுக்கு தெரியாமல் தவறுகள் இடம்பெற்றனவா- என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் இனிமேல் தான் பதில்கள் தெரியவரும். ஏனென்றால் இதுவொரு புது விதமான
மோசடியாகும்.
இந்த விடயத்தில் இவ்வாறான தவறுகள் நடக்கும் என்று அனுமானிப்பதற்கு, முன்னுதாரணங்கள் ஏதும் இருக்கவில்லை. இதற்கு பின்னால் ஒரு பெரிய வலையமைப்பு இருக்கிறது என்று ஊகிக்க முடிகின்றது.
ஏனென்றால், கிறிஸ்மஸ் பண்டிகையின் போது 57 பேரும், சுதந்திர தினத்தின் போது 11 பேரும், வெசாக் பண்டிகையின் போது மூன்று பேரும் சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்
நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.
அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், மாத்திரம் 71 பேர் இவ்வாறு தவறான முறையில்- சட்டத்துக்கு புறம்பாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இது பாரதூரமான ஒரு விடயம். இதற்கு முன்னரும் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றதா என்பது விசாரணைகளில் தான் வெளிப்பட வேண்டும். அதுபற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால், இதற்கு முன்னரே இந்த சட்டவிரோத வலையமைப்பு யங்கியிருப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால், தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கின்ற இந்த மோசடிக்கு, ஆட்சியில்
உள்ள அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
ஏனென்றால் தங்களின் ஆட்சியில் மோசடிகள், முறைகேடுகளுக்கு இடம் இருக்காது என தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தது.
அப்படியிருக்க, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பையே தவறாகப் பயன்படுத்துகின்ற பாரிய மோசடி ஒன்று அம்பலமாகியிருக்கிறது. இந்த மோசடியை நடக்காமல் தடுத்திருந்தால், அது இந்த அரசாங்கத்தின் வெற்றி எனக் குறிப்பிட்டிருக்கலாம்.
ஆனால்,அவ்வாறு நடக்கவில்லை. இந்த அரசாங்கத்தின் காலத்தில், ஒன்றுக்கு மூன்று முறை தவறுகள் இடம்பெற்றிருப்பதை, சட்டமா அதிபர் திணைக்களமே உறுதி செய்திருக்கிறது. ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டால் மாத்திரம் போதாது.
அதன் கீழ் விடுதலை செய்யப்பட்டவர்கள் பற்றிய கோப்புக்களை மீளப்பெற்று ஜனாதிபதி செயலகம் ஆராய்ந்திருந்தாலே, தவறுகள் இடம்பெற்றதை உறுதிப்படுத்தியிருக்க முடியும். அவ்வாறான எந்த வழிமுறையும் இருந்திருக்கவில்லை என்பது இந்த மோசடியின் மூலம் உறுதியாகியிருக்கிறது.
மேலிருந்து கீழ்நோக்கி உத்தரவு வழங்கப்பட்டதுடன் எல்லாமே சரி என்ற நிலைமை இருந்திருக்கிறது.
அதுவே மோசடிக்கு காரணமாகியிருக்கிறது. அந்த உத்தரவு எவ்வாறு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என கண்டறிந்திருக்க வேண்டியது ஒரு வினைத்திறன் உள்ள அரசாங்கத்தின் பொறுப்பு.
அந்த விடயத்தில் தற்போதைய அரசாங்கமும் தவறு இழைத்திருக்கிறது. இந்தத் தவறு அரசாங்கத்தினால் கண்டறியப்பட்டிருந்தால், அதனை தடுத்து விட்டதாக உரிமை கோரியிருக்க முடியும். அப்படியும் நடக்கவில்லை.
இதனை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர். அதைக் கூட உடனடியாக நம்புகின்ற நிலையில் ஆளும்தரப்பு இருக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் முக்கியத்துவத்தை, இந்த விவகாரம் ளிப்படுத்தியிருக்கிறது.
தவறுகளை சுட்டிக்காட்டி அரசாங்கத்தை வழிப்படுத்துவதில், எதிர்க்கட்சிக்கு முக்கிய பொறுப்பு உள்ளது.
தேசிய மக்கள் சக்தி அப்படியொரு எதிர்கட்சியாக செயற்பட்டதா என்ற சந்தேகங்கள் உள்ளன.
மஹிந்தவின் காலத்தில் ஜேவிபியாக இருந்த போது, போரை தூண்டி விட்டது.
பெரும் அழிவுகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது. தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஆனாலும் இதுபோன்ற மோசடிகள், முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவதில் பங்களிப்புச் செய்திருக்கிறதா என்று தெரியவில்லை.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறியது. ஆட்சிக்கு வந்த பின்னர் அது பற்றிய கோப்புகளை சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து ஆராய்ந்து வருவதாக கூறி பல மாதங்கள் ஆகிவிட்டன.
இன்னமும் கூட அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதே தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தான், சட்டவிரோதமான முறையில் ஒன்றிரண்டு அல்ல - 71 பேருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிகழ்வும் நடந்தேறி இருக்கிறது.
இந்த சம்பவம் அரசாங்க நிர்வாக கட்டமைப்பில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனென்றால் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பல்வேறு அரச நிறுவனங்களுக்குள் மோசமான சீர்கேடுகள் இருக்கின்றன, முக்கியமான நான்கு துறைகளில் இது மோசமாக இருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவே கூறியிருக்கிறார்.
அவரது இந்த கருத்து, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளகப் போர் ஒன்றுக்கு தயாராக வேண்டியிருப்பதை உணர்த்துகிறது. ஒன்று இரண்டு ஆண்டுகள் அல்ல ஐந்து ஆண்டுகள் போராடினால் கூட, இந்த நிலைமையை சீர்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.
தற்போதைய அரசாங்கம், கடந்த கால வழக்குகளை தோண்டி எடுப்பதில் கவனத்தை செலுத்துகின்ற போதும், நிகழ்கால ஆட்சியை சரியாக முன்னெடுப்பதில் கவனம் செலுத்தவில்லை.
இதனால் முறைகேடுகளும் மோசடிகளும் இன்னமும் கூட குறையாமல் இருக்கிறது. நிகழ்கால அரசாங்கத்தினால் இதனை சரியான முறையில் கையாள முடியாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம், இது எல் போர்ட் அரசாங்கம் என்பதே ஆகும்.