ஜனநாயகத்துக்கான சிவப்பு எச்சரிக்கை?

அநுரகுமார திசாநாயக்க ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து ஆறு மாதங்கள் நிறைவுக்கு வந்திருக்கின்றன. இத்தகைய
நிலையில் கடந்த மே 14ஆம் திகதியன்று கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஜே.வி.பி.யின் 60ஆவது
ஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கட்சியின் தலைவர் என்ற வகையில்
உரையொன்றை ஆற்றினார்.
அந்த உரையானது, நாட்டின் ஜனநாயக மரபுகளுக்கும், மாண்பியங்களுக்கும் விடுக்கப்படுகின்ற மிகப்பெரிய
சிவப்பு எச்சரிக்கையாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சியாக இருக்கும் ஜே.வி.பிக்கு பலத்த அடியை
வழங்கியிருக்கின்றது. அந்தப் பின்னணியில் அநுரகுமார வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் ஜனநாயக
அடிப்படைகளை பெயர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
அரசியல்முறைமை மாற்றத்தினை எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கும், முற்போக்கு ஜனநாயக
வாதிகளுக்கும் அநுரவின் உரையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தினையும்
அளித்திருக்கின்றது.
அக்கருத்துக்கள் ஜனநாயகவாதிகள் என்று தங்களை வெளிப்படுத்தி ஆட்சிக்கு வந்திருக்கும் அநுரவினதும்
அவரது தோழர்களினதும் உண்மையான முகத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி என்ற
சாயம் வெளுத்திருக்கிறது.
அநுரகுமார தனது உரையில் ‘என்னிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கிறது, நிறைவேற்று
அதிகாரம் இருக்கிறது. சட்டத்தை மாற்றுவதன் மூலம் எதையும் செய்ய முடியும் என்பதை நினைவில்
வைத்துக்கொள்ளுங்கள்’ என்றார்.
ஏன் இவ்வாறு கூறினார் என்று பார்க்கின்றபோது, 339 உள்ளுராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி
பெரும்பான்மை ஆசனங்களை பெற்றிருப்பது, 152 சபைகளில் மாத்திரமே. அங்கு ஆட்சி அமைப்பதில் எந்த
பிரச்சினையும் இல்லை. முதல் நாளிலேயே அவர்களால் ஆட்சியமைக்க முடியும். ஆனால் 115 உள்ளுராட்சி
சபைகளில் தொங்கு நிலை காணப்படுகிறது.
தொங்கு நிலையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் கூட்டிணைந்து ஆட்சி அமைப்பதற்கு
முயற்சிக்கின்றன. அதற்கான பேச்சுக்கள் நடைபெறுகின்றன. இதில் கொழும்பு மாநகர சபை பிரதானமானது.
யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்டவற்றில் இரண்டாவது இடத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி அங்கும்
சுயேச்சைக்குழு அங்கத்தவர்களை வளைத்துப்போட்டு ஆட்சி அமைக்கவே முயற்சிக்கிறது.
அதுமட்டுமன்றி, வடக்கு,கிழக்கில் தமிழர்கள் செறிவாகவுள்ள ஏதாவது ஒரு சபையில் ஆட்சி அமைத்துவிட
வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி கங்கணம் கட்டிச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த பின்னணியில் தான், எதிரணிகளை அநுரகுமார எச்சரிக்கும் வகையில் தனது உரையில் கருத்துக்களை
வெளிப்படுத்தியிருக்கின்றார். இது ஜனநாயக முறைமைக்குள் பிரள்வானதொரு அரசியல் செயற்பாடாகும்.
தேசிய மக்கள் சக்தியை பொறுத்தவரையில், தாங்கள் கூடுதலாக ஆசனங்களை பெற்ற 267 உள்ளுராட்சி
சபைகளிலும் தங்களுக்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள் என்பது தான் வாதமாக இருக்கின்றது.
அவ்வாறான இடங்களில் தாங்கள் ஆட்சி அமைப்பதை வேறு தரப்புகள் தடுக்கக் கூடாது – குழப்பக் கூடாது
என்று எதிர்பார்க்கிறது. அதனை வெளிப்படையாகவும் கூறுகின்றது. ஆனால் அந்தத் தொனி அதிகாரத்தின்
அடிப்படையிலானது.
உலகில் உள்ள ஜனநாயக வழக்கத்தில் அவ்வாறானதொரு போக்கு எங்குமில்லை. எதிர்க்கட்சிகள் இணைந்து
கூட்டாக ஆட்சி அமைக்கின்ற வழக்கம், எல்லா நாடுகளிலும் உள்ளது.

அதிக ஆசனங்களை பெற்ற கட்சிக்கு மாத்திரமே மக்கள் ஆணை வழங்கப்பட்டது என்று அர்த்தம் கற்பிக்க
முடியாது. அதிக வாக்குகளை பெற்று விட்டதால், அல்லது அதிக ஆசனங்களைப் பெற்று விட்டதால், தேசிய
மக்கள் சக்தி தான் மக்கள் ஆணை பெற்ற கட்சி என்று கருத முடியாது.
ஏனைய கட்சிகளுக்கும் வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அந்த கட்சிகளும் உறுப்பினர்களை
பெற்றிருக்கின்றன. ஆனால், அவற்றை மக்கள் ஆணையில்லாத கட்சிகளாக அடையாளப்படுத்த
முனைகின்றனர் அநுரவும் அவரது சகாக்களும்.
பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொண்ட ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆணை
பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர, மற்ற எல்லா அதிகாரமும் தன்னிடம் இருக்கிறது
என்று அப்போது கூறியிருந்தார்.
இப்போது அநுரகுமார திசாநாயக்க உள்ளுராட்சி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை, எதிர்க்கட்சிகள்
பறிக்கின்ற நிலை ஏற்பட்டால், தன்னிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கிறது, அதை
கொண்டு சட்டத்தை மாற்றுவேன். நிறைவேற்று அதிகாரமும் தனக்கு துணையாகவுள்ளது என்று
எச்சரித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, வடக்கில் தமிழ்க் கட்சிகளுக்கே மக்களாணை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஏற்க மறுக்கிறார்
அநுர. தங்களுக்கு வடக்கில், இரண்டாவது அதிக வாக்குகள் கிடைத்திருப்பதால், மக்கள் தங்களை
நிராகரிக்கவில்லை என்றும் கணித பெறுமானங்களை ஒப்பிட்டு பார்க்காது கருத்துக்களை
வெளிப்படுத்துகிறார்.
அவரது வெளிப்படுத்தலும், தர்க்கமும் சிறுபிள்ளைத் தனமானது. ஆதிகார மோகத்தின் ஆதங்கத்தின்
வெளிப்பாடாகவே கொள்ள வேண்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி இந்தத் தேர்தலில் 4,503,930 இலட்சம்
வாக்குகள் தான் கிடைத்திருக்கின்றன. அது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 43.26 சதவீதம் மாத்திரமே.
அப்படியானால் எஞ்சிய 57 சதவீத வாக்குகள் ஏனைய கட்சிகளுக்கே அளிக்கப்பட்டிருக்கின்றன.
அதனடிப்படையில் பார்க்கின்றபோது பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆணை
வழங்கியிருக்கவில்லை. அவர்கள் அந்த கட்சியை நிராகரித்திருக்கிறார்கள்.
அப்படி இருக்கையில் தங்களுக்கு மாத்திரமே மக்கள் ஆணை வழங்கப்பட்டிருக்கிறது என்று அநுரகுமரவால்
எவ்வாறு உரிமை கோர முடியும்? அடிப்படைகளற்ற நிலையில் அவரது தர்க்கமானது வெறுமனே அதிகாரத்தை
மையப்படுத்தியது.
அந்த அதிகாரத்துக்காக, தன்னிடமுள்ள நிறைவேற்று அதிகாரத்தையும், பாராளுமன்ற பெரும்பான்மை
அதிகாரத்தையும் பயன்படுத்துவதற்கு துணிவது அதிகார மோகத்தின் அதியுச்சம். ஆகவே, அநுரவும் அவரது
தோழர்களும் கூட்டிணைந்து இப்போது கிராமிய அதிகாரத்தையும் தமதாக்கி ஒட்டுமொத்த அதிகார
கட்டமைப்பையும் தமக்குள் வைத்திருக்கவே முனைகின்றனர்.
தேசிய மக்கள் சக்தி என்ற போர்வையை விலக்கி ஜே.வி.பி. என்ற தாய்க்கட்சியை தனிக்கட்சியாக,
அடையாளப்படுத்தி அதன் தலைமையில் அதிகாரக்குவிப்பைச் செய்யவே விளைகின்றனர்.
அதற்காக ஜனநாக அடிப்படைகளை , மரபுகளை, மாண்புகளை மறுதலிக்கின்றனர். எதிர்க்கட்சிகளை
மட்டுமல்ல, அவர்களுக்கு வாக்களித்த மக்களையும் வாக்களிக்காத மக்களையும் கூட பகிரங்கமாகவே
மிரட்டுகின்றனர், அச்சுறுத்துகின்றனர்
இவையெல்லாம் அவர்களின் சுயத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளது. இதற்கு மேல் ‘முறைமை
மாற்றத்தினை’ ஜே.வி.பியிடம் எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வியை அதியுச்சமாக எழுப்பியிருக்கின்றது.
நிறைவேற்று அதிகாரமும், மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் மக்கள் வழங்கியுள்ள ஆணையே. மக்கள்
வழங்கிய ஆணையை அவர்கள் மீளப்பறித்த வரலாற்றுப்பாடம் நிகழ்ந்து சில ஆண்டுகள் தான்
கடந்திருக்கின்றன.
ஆகவே அதிகாரத்தை தலையில் வைத்து கோலோச்சுவதன் ஊடாக நல்லாட்சியை ஏற்படுத்திவிடலாம் எனக்
கூறுவதை ஏற்கவே முடியாது. அதேபோன்று அளிக்கப்பட்ட அதிகாரத்தினை அடுத்த நான்கு ஆண்டுக்களுக்கு
பறிக்க முடியாது என்று கருதுவதும் பிற்போக்குத்தனம்.

தீர்மானம் எடுப்பவர்கள் மக்களே. மக்கள் தீர்ப்புக்கு தலைபணிந்தேயாக வேண்டும். தேர்தல்
விஞ்ஞாபனத்தினை முன்னிலைப்படுத்தி மக்கள் ஆணைபெற்ற ஜே.வி.பி. அதற்கிணங்க செயற்படுவது தான்
அதன் அரசியல் இருப்பை உறுதி செய்வதற்கு வழிசமைக்கும்.