புதிய பயங்கரவாதச் சட்டத்தை இயற்றுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது.
ஒருபக்கத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம்
ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஹர்ஷ குலரத்ன
தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய அடுத்தகட்டமாக உரிய நடவடிக்கைகள்
எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதோடு அந்த பரிந்துரைகளுக்கான காத்திருப்பு
நீடிக்கிறது.
மறுபக்கத்தில் பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பரிந்துரைகளை
முன்வைப்பதற்கான கோரிக்கை பகிரங்கமாக விடுக்கப்பட்டிருக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக்குழு இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு
நிறைவு செய்திருக்கும் இத்தருணத்தில் தான் இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பிளஸ் வரிச்சையை இலங்கைக்கு
வழங்குவதற்காக விதித்திருந்த நிபந்தனைகளில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக
நீக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமானதாக இருந்து வருகின்றது.
நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக பதிலீட்டுச்
சட்டங்களை கொண்டுவருவதற்கு முயற்சித்தது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், தீவிரவாத
எதிர்ப்புச் சட்டம் என்று இரண்டு வேறுவேறு பட்ட பெயர்களில் அச்சட்டங்களை
அமுலாக்குதவற்கு முனைந்தது.
ஆனால் அதற்கு கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்தமையால் அவ்விடயத்தினை
முன்னெடுப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.
குறிப்பாக, தற்போது ஆளும் தரப்பாக இருக்கும் தேசிய மக்கள் சக்தியானது, மேற்படி இரு
சட்டங்கள் குறித்தும் உரையாடுவதற்கு கூட தயாரில்லாத நிலையில் தான் இருந்தது.
பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றே கூறிவந்தது.
ஆனால் தற்போது அதே ஜே.வி.பி.தலைமையிலான அரசாங்கம் தற்போது பயங்கரவாதச்
சட்டத்திற்கு பதிலீட்டுச் சட்டத்தினை கொண்டுவருவதற்கு முனைந்து
கொண்டிருக்கின்றது. இந்த நடவடிக்கையானது தனது ஆரம்ப நிலைப்பாட்டில் இருந்து
அக்கட்சி பின்னோக்கிச் செல்வதாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையில், பயங்கரவாதத்தினை முறியடிப்பதற்கென தற்போது
காணப்படுகின்ற பிரதான சட்டவாக்கங்களாக பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும்
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் என்பனவே காணப்படுகின்றன.
எவ்வாறெனினும், பிணையெடுத்தலல் தடுப்புச் சட்டம் மற்றும் கணிணிவழிக் குற்றச்
சட்டம் போன்ற வேறு பல சட்டங்களும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றங்களை
உள்ளடக்கியுள்ளன.
அரசியலமைப்பின் உறுப்புரை 155 உடன் இணைத்து வாசிக்கின்றபோது, திடீர் மற்றும்
உடனடி ஆபத்தொன்றினை நாடு எதிர்கொள்கின்ற சந்தர்ப்பத்தில் பொதுமக்கள்
பாதுகாப்பு சட்டத்தின் பிரயோகத்தினை ஏற்கமுடியும். ‘பொதுமக்களின் பாதுகாப்பு பற்றிய
அக்கறையின் நிமித்தம் மற்றும் பொது ஒழுங்கினை பாதுகாக்கும் நிமித்தம்’ ஜனாதிபதி
சட்டத்தின் பிரிவு 5 இற்கு அமைவாக அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்த
இயலும்.
அவசரகால நிலைமையினை பிரகடனப்படுத்தல் மற்றும் நிலைபேறுள்ள அவசரகால
அதிகாரங்களின் பிரயோகம் தொடர்பான அரசியலமைப்பு மற்றும் நியதிச்சட்டக்
கட்டமைப்பானது மிகப்பழமையானவையாகக் காணப்படுகின்றன. இது நிறைவேற்று
தற்துணிபிற்கு அனுமதியளிக்கின்ற அதேவேளை, தற்போது சர்வதேச மனித உரிமைகள்
சட்டம் மற்றும் ஒப்பீட்டுரீதியிலான அரசியலமைப்பு சட்டங்களில் குறிப்பிட்ட
தரநிலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சுதந்திரத்தினை, சமநிலைத் தன்மையுடன்
பாதுகாப்பதற்கான காப்பீடுகளை கவனத்திலெடுக்கத் தவறியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டமானது 1978ஆம் ஆண்டு தற்காலிகப் பொறிமுறையாக
இயற்றபட்டபோதும், அது 1982ஆம் ஆண்டு நிரந்தர சட்டவாக்கமாக்கப்பட்டது. அது
முன்னர் சாதாரண சட்டங்களினால் குற்றமாகக் கருதப்பட்டிராத விடயங்;களைக்
குற்றங்களாக்கியதுடன், அவை துஷ்பிரயோகப்படுத்தப்;பட்டு அச்சட்டம் வலுவிலுள்ள
கடந்த 47 வருட காலமாக பாரிய மனித உரிமை மீறல்களை விளைவாக வருவித்திருந்தன.
பயங்கரவாதத் தடைச் சட்டமானது மிக அவசரமாகப் பாராளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டது என்பதுடன் அது அரசியலமைப்பினால்
உத்தரவாதப்படுத்தப்பட்டிருந்த பல அடிப்படை உரிமைகளை குறைந்தளவான
மேற்பார்வையோடு மீறத்தக்க தெளிவான பல ஏற்பாடுகளை உள்ளடக்கியிருந்ததுடன்
அது தண்டனையிலிருந்து விடுபடுகின்ற கலாசாரத்திற்கு வழிவகுத்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டமானது மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு
பிரச்சினைகளுக்கு வித்திட்டுள்ளதுடன் அதிகமானளவில் விமர்சனங்களுக்கு
உட்பட்டுள்ளது. யுத்தம் நிறைவுற்ற பின்னரும்கூட, பயங்கரவாதத் தடைச் சட்டம்
தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டு வந்ததுடன், அதன் கீழ் 2011ஆம் ஆண்டு
வழங்கப்பட்ட விதிமுறைகளானவை உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டன.
கடந்த காலங்களில் இச்சட்டத்தை ரத்து செய்யுமாறு தேசிய மற்றும் சர்வதேச மனித
உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்தன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை இரத்து செய்து ஒரு புதிய சட்டவாக்கத்தினை
கொண்டுவருவதற்கான கோரிக்கை, இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு செப்ரம்பர்
மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 30/1 என்ற தீர்மானத்தினை
நிறைவேற்றியதனைத் தொடர்ந்து மேலும் வலுவடைந்தது. தீர்மானத்தின் 12ஆம்
பந்தியானது,
“பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கான மற்றும்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு பதிலீடாக, சர்வதேச சிறந்த
நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை
உருவாக்குவதற்கான இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பினை வரவேற்கின்றது” என்று
குறிப்பிடுகின்றது.
இதேநேரம், சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான பொறிமுறைகள் மீதான
முதலாவது பிரகடனமானது 1994ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஐ.நா.பொது சபையினால்
ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர், ஐ.நா.பொது சபையானது பயங்கரவாதத்தை
முறியடிப்பதுடன் தொடர்புடைய பல்வேறு தீர்மானங்களை ஏற்றுக்கொண்டது.
இவ்வாறான பின்னணியில் தற்போதும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை இலங்கை
அரசாங்கம் பயன்படுத்திவருகின்ற அதேநேரம் புதிய நட்டத்தினைக்
கொண்டுவருவதற்கும் தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்தச் சட்டத்தால் தமிழினம் எவ்வாறு பாதிக்கப்பட்டதோடு அதையொத்த
நிலைமைகளை ஜே.வி.பி.யும் தனது இரண்டு கிளர்ச்சிகளின் பின்னர் முகங்கொடுத்தது.
அதேநேரம், உயிர்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்கள் குறித்த சட்டத்தால்
நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இத்தனை அனுபவங்களை அநுர அரசாங்கம் அறிந்திருந்தும் தெரிந்திருந்தும் மீண்டும்
பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துவதும், அதனை புதிப்பிப்பதற்கு
விளைவதும் பாரிய கேள்விகளை ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக, எதிர்காலத்தில் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற மக்கள்
போராட்டங்களை, எதிர்ப்பலைகளை தடுப்பதற்கு முன்கூட்டியே இத்தகைய
ஏற்பாடுகளை புரிகின்றதோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
அதேநேரம், வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ்க் கட்சிகள்
அரசாங்கத்தின் இந்த முயற்சியை மிகக் கடுமையான எதிர்த்துள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், “பயங்கரவாத
தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்று நாம் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக
தொடர்ச்சியாக கோரிவருகின்றோம். எனினும் அந்தச் சட்டம் தொடர்ச்சியாக
அமுலாக்கப்பட்டே வருகின்றது.
விசேடமாக குறித்த சட்டத்தின் மூலமாக தமிழ் மக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு
வந்ததோடு போரின் பின்னரான சூழலில் அரசியல் ரீதியாக பழிவாங்கும் செயற்பாடுகள்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும், பதிவு
செய்வதற்கும் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதனைத் தாண்டிச் செயற்படுபவர்கள்
மீது திட்டமிட்டு பயங்கரவாதச் சட்டம் பாய்கின்ற நிலைமை தான் உள்ளது.
ஆகவே நாம் இந்தச் சட்டத்தினை முழுமையாக நீக்குமாறே கோருகின்றோம்.
இலங்கையில் ஏற்கனவே காணப்படுகின்ற குற்றவியல் சட்டங்கள் போதுமானவையாக
உள்ளன. ஆகவே அச்சட்டங்களை பயன்படுத்துவதற்கு மேலதிகமாக புதிதாக
பயங்கரவாத தடைச்சட்டத்தினைக் கொண்டுவர வேண்டிய தேவைகள் எதுவுமில்லை”
என்று குறிப்பிடுகின்றார்,
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பதில் பொதுச்செயலாளருமான
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் இரண்டு
தடவைகள் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலீடாக புதிய சட்டமொன்றை
இயற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
அந்தச்சந்தர்ப்பங்களில் அப்போதைய அரசாங்கம் கலந்துரையாடல்களுக்கு
அழைத்தபோது எதிர்க்கட்சியில் இருந்த அநுரகுமார திசாநாயக்கவும் அவரது
கட்சியினரும் எந்தவொரு கலந்துரையாடல்களிலும் பங்கேற்கவில்லை.
அவர்கள் அக்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலீடாக
புதிய சட்டங்கள் உருவாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றே
கூறினார்கள்.
ஆனால் ஆட்சி அதிகாரத்தினை பெற்றவுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தினை
பயன்படுத்துவதோடு, அதற்கு பதிலீடாக புதிய சட்டத்தினைக் கொண்டுவருவதற்கும்
முயற்சிக்கின்றார்கள். அதிகாரத்துக்கு வந்தவுடன் தமது கொள்கையிலிருந்து விலகிப்
பயணிக்கின்றமையானது இதன்மூலமாக அம்பலமாகியுள்ளது” என்று
சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும், ஊடகப்பேச்சாளருமான
சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், “பயங்கரவாத தடைச்சட்டத்தினால்
பாதிக்கப்பட்ட அமைப்பாகவே ஜே.வி.பியினர் இருக்கின்றார்கள். ஐரோப்பிய ஒன்றியம்,
ஐ.நா.மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தரப்பினர் பயங்கரவாத
தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
எனினும் அரசாங்கம் அந்த வலியுறுத்தல்களையெல்லாம் கருத்தில் கொள்ளாது புதிய
சட்டமொன்றை உருவாக்குவதற்கு முனைகின்றார்கள்.
உண்மையில் அரசாங்கத்தின் செல்வாக்கு மலிந்து வருகின்ற நிலையில் அதற்கு எதிராக
போராட்டங்கள், கருத்துருவாக்கங்கள் எழக்கூடாது என்றே கருதும் நிலையொன்று
காணப்படுகின்றது. ஆகவே தமக்கு எதிரான நிலைமைகளை கையாள்வதற்கே புதிய
பயங்கரவாத தடைச்சட்டத்தினை உருவாக்குவதற்கு அரசாங்கம் முனைகின்றது”என்று
கூறியுள்ளார்.
ஆக, மீண்டும் தமிழ் மக்களின் விருப்பமின்றி தற்போதைய அரசாங்கமும்
சட்டமியற்றுகின்ற நிலைமைகள் தான் நீடிக்கின்றன. இந்த விடயத்தில் அரசாங்கம் தனது
நிலைப்பாட்டினை மாற்றி செல்வதை மிகவும் கவலைக்குரியது.