உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மே ஆறாம் திகதி நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றது. முடிவுகளைப் பார்க்கையில் இலங்கை சுதந்திரம் அடைந்து 77ஆண்டுகளின் பின்னரும் இரண்டு தேசங்களாக நாடு பிளவடைந்து நிற்கின்றது என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
கடந்த ஆறாம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு காலை ஏழு மணி முதல் மாலை 4 மணி வரையில் நடத்தப்பட்டது.
எல்பிட்டிய பிரதேச சபைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டதாலும், கல்முனை மாநகர சபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாலும் அவ்விரு மன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் 28மாநகர சபைகள், 36நகர சபைகள், 275பிரதேச சபைகளுக்கு 8,287உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 13,759வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அத்துடன், 49அரசியல் கட்சிகள், 257சுயேச்சைக்குழுக்கள் ஆகியவற்றிலிருந்து 75இ589 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்த நிலையில் 17,296,330பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதிதேர்தல் மற்றும், பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த வேட்பாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுக்கையில் இம்முறை 155,976பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில், 10,616,087வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளித்திருந்த நிலையில் 10,410,810வாக்குகள் மட்டுமே செல்லுபடியானதாக கருதப்பட்டது.
205,277வாக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அது 1.93சதவீதமாக காணப்படுகின்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 300,300ஆக காணப்பட்டதோடு அதன் சதவீதம் 2.2ஆகும்.
அதேபோன்று கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 667,240வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்ததோடு அதன் சதவீதம் 5.65ஆகும். அந்த வகையில் பார்க்கின்றபோது இத்தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை குறைவடைந்திருக்கின்றது.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் 3,820,738வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. பாராளுமன்றத் தேர்தலில் 5,992,348 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. இந்நிலையில் இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் 6,747,528வாக்காளர்கள் வாக்களித்திருக்கவில்லை.
மேற்படி புள்ளிவிபரமானது, நாடாளவிய ரீதியில் உள்ள வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதில் ஈடுபாடின்மையை அல்லது அரசியலில் பங்கேற்பதில் விரக்தியான மனோநிலையில் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது.
குறிப்பாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பில் பங்கேற்காதிருப்பதற்கு ஜனாதிபதியாக இடதுசாரி சிந்தனைகள் நிறைந்த ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக வந்திருந்ததையே ஒரே காரணமாக இருந்தது.
ஆனால், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வாக்களிப்பில் பங்கேற்காது ஒதுங்கியிருந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, முறைமையை மாற்றத்தை மையப்படுத்தி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த ஆட்சியாளர்கள் அவற்றில் எதனையும் நடைமுறைப்படுத்தாமையாகும்.
வடக்கு,கிழக்கைப் பொறுத்தவரையில் இந்நிலைமைக்கு காரணம் தமிழ்க் கட்சிகளுக்குள் காணப்படுகின்ற உள்ளகப் பிரச்சினைகளும் கட்சிகளுக்குள் காணப்படுகின்ற ஒற்றுமையின்மையுமே ஆகும்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஆளும் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 4,503,930வாக்குகளைப்பெற்று, 3927உறுப்பினர்களை தனதாக்கி ஆதிக்கம் செலுத்துகின்றது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 2,258,480வாக்குகளைப் பெற்று, 1,767உறுப்பினர்களை தனதாக்கியுள்ளதோடு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 954,517வாக்குகளைப் பெற்று 742உறுப்பினர்களை தனதாக்கியுள்ளது.
பழம்பெரும் கட்சியான, ஐக்கிய தேசியக் கட்சி 488,406வாக்குகளைப் பெற்று 381உறுப்பினர்களை தனதாக்கியுள்ளதோடு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி 307,657வாக்குகளைப் பெற்று 377உறுப்பினர்களை தானதாக்கியுள்ளது.
பொதுஜன முன்னணி 387,098வாக்குகளைப் பெற்று, 300உறுப்பினர்களையும்; சர்வஜன அதிகாரம் 294,681வாக்குகளைப் பெற்று 226உறுப்பினர்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 139,858வாக்குகளைப் பெற்று 116உறுப்பினர்களையும் தானதாக்கியுள்ளன.
ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு 89,177வாக்குகளைப் பெற்று, 106 உறுப்பினர்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 75,268 வாக்குகளைப் பெற்று 60உறுப்பினர்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 71,655வாக்குகளைப் பெற்று 54உறுப்பினர்களையும் தனதாக்கியுள்ளன.
அகில இலங்கை தமிழ் காங்கரஸ் 70,944வாக்குகளைப்பெற்று 101 உறுப்பினர்களையும் மக்கள் போராட்ட முன்னணி 50,492வாக்குகளைப் பெற்று 16உறுப்பினர்களையும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 39,791வாக்குகளைப் பெற்று 37உறுப்பினர்களையும் தேசிய சுதந்திர முன்னணி 39,443வாக்குகளைப் பெற்று 26உறுப்பினர்களையும் தனதாக்கியுள்ன.
ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு 33,921வாக்குகளைப் பெற்று 30உறுப்பினர்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 21,656வாக்குகள் 35உறுப்பினர்களையும் இலங்கை தொழிலாளர் கட்சி 19,635வாக்குகள் 26உறுப்பினர்களையும் சுயேட்சைக் குழு 1-19,455வாக்குகளைப் பெற்று 8உறுப்பினர்களையும் தேசிய காங்கிரஸ் 18,816வாக்குகளைப் பெற்று 22 உறுப்பினர்களையும் தனதாக்கியுள்ளன.
இந்த முடிவுகளின் பிரகாரம், ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்குள் பெரும் வாக்குவங்கிச் சரிவை எதிர்நோக்கியிருக்கின்றது. இலங்கை தேர்தல் வரலாற்றில் ஆட்சிக்கு வந்து மிகக் குறுகிய காலத்தில் ஆளும் தரப்பொன்று பெற்றுக்கொண்ட அதியுச்ச வாக்குவங்கிச் சரிவாக இது காணப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் 5,634,915 வாக்குகளைப் பெற்று 42.3சதவீத வாக்குவங்கியைக் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தேர்தலில் 6,863,186வாக்குகளைப் பெற்று 61.56சதவீதமாக வாக்குவங்கியை அதிகரித்திருந்தது.
ஆனால் அத்தரப்பின் கடந்த ஆறுமாதகால ஆட்சியின் விளைவால் இத்தேர்தலில் அக்கட்சி 4,503,930வாக்குகளைப் பெற்று தனது வாக்குவங்கியை 43.26சதவீதமாக குறைத்திருக்கின்றது. அதாவது தேசிய மக்கள் சக்தியின் வாக்குவங்கி 18.3சதவீதத்தால் குறைந்திருக்கின்றது.
இதனால் அக்கட்சியால் 265சபைகளில் முன்னிலை பெற்றிருந்தாலும் 116சபைகளில் தான் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியுமாக இருக்கின்றது. ஏனைய 120சபைகளில் பெரும்பான்மை இல்லாத நிலைமையும் 29சபைகயில் சமநிலையான நிலைமையுமே காணப்படுகின்றது.
இதற்குள் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் தோல்வி அடைந்த ஏனைய தரப்புக்களுடன் கைகோர்க்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளமையானது, அந்தக் அதன் தனிக்கட்சி ஆதிக்கத்தை வெளிப்படுத்துவதால் ஏனைய தரப்புக்களும் கைகோர்க்க தயாரில்லாத நிலையிலேயே உள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் 4,363,035வாக்குகளைப் பெற்று 32.76சதவீத வாக்குவங்கியைக் கொண்டிருந்த சஜித் பிரேமதாச தலைமயிலான ஐக்கிய மக்கள் சக்தியானது, பாராளுமன்றத் தேர்தலில் 1,968,716வாக்குகளைப் பெற்று தனது வாக்குவங்கியை 17.66சதவீதமாக குறைத்துக்கொண்டது.
ஆனால் அக்கட்சியானது, இத்தேர்தலில் 2,258,480வாக்குகளைப் பெற்று 21.69சதவீதமாக தனது வாக்கு வங்கியை அதிகரித்துள்ளதோடு, கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 4.03சதவீதமாக அதன் வாக்குவங்கி அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் 2,299,767வாக்குகளுடன் 17.27சதவீதமான வாக்குவங்கியைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தேர்தலில் 500,835வாக்குகளைப் பெற்று 4.49சதவீதமாக தனது வாக்குவங்கியை குறைத்துக்கொண்டது.
இம்முறை அக்கட்சியானது, 488,406 வாக்குளையே பெற்றுக்கொண்ட நிலையில் அதன் வாக்குவங்கியானது 4.69சதவீதமாக காணப்படுகின்றது. இது 0.2சதவீத அதிகரிப்பைக் காண்பித்தாலும் வாக்குகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதேநேரம், நாமல் ராஜபக்ஷ தலைமையில் இத்தேர்தலுக்கு முகங்கொடுத்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவானது மீண்டெழுந்திருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலில் 342781வாக்குகளுடன் 2.5சதவீதமான வாக்குகளைக் கொண்டிருந்த அக்கட்சியானது, பாராளுமன்றத் தேர்தலில் 350,429வாக்குகளைப் பெற்று 3.14சதவீதமாக வாக்குவங்கியை அதிகரித்திருந்தது. இத்தேர்தலில் பொதுஜனபெரமுன 954,517வாக்குகளைப் பெற்று 9.17சதவீதமாக தனது வாக்குவங்கியை அதிகரித்துள்ளதோடு தேசிய ரீதியில் மூன்றாவது நிலைக்கு முன்னேறியிருக்கின்றது.
இதனைவிடவும், சிங்கள, பௌத்த தேசியவாத சக்திகளை ஒருங்கிணைத்து திலித் ஜயவீர தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சர்வஜன அதிகாரம் கட்சியானது ஜனாதிபதி தேர்தலில் 0.92சதவீதமாக கொண்டிருந்த தனது வாக்குவங்கியை 2.83சாவீதமாக அதிகரித்திருக்கின்றது.
வடக்கு,கிழக்கில் உள்ள தமிழ்த் தேசிய கொள்கைத் தளத்தில் பிரிந்து நின்று பயணிக்கும் தரப்புக்கள் எழுச்சி அடைந்திருக்கின்றன.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியானது, பாராளுமன்றத் தேர்தலில் வட,கிழக்கின் எட்டுமாவட்டங்களிலும் 257,813வாக்குளைப் பெற்று 2.31சதவீதமாக கொண்டிருந்த தனது வாக்குவங்கியை இந்தத் தேர்தலில் 307,657வாக்குகளைப் பெற்று 2.96சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதேபோன்று, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியானது பாராளுமன்றத் தேர்தலில் 65,382வாக்குகளைப் பெற்று 0.59சதவீதமாக கொண்டிருந்த தனது வாக்குவங்கியை இத்தேர்தலில் 89,177வாக்குளைப் பெற்று 0.86சதவீதமாக அதிகரித்துள்ளது.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸும் பாராளுமன்றத் தேர்தலில் 33,911வாக்குளைப்பெற்று 0.30சதவீதமாகக் கொண்டிருந்த வாக்குவங்கியை இத்தேர்தலில் 70,944வாக்குகளைப் பெற்று 0.63சதவீதமாக அதிகரித்திருக்கின்றது.
ஆனால் இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஆகிய மூன்று தரப்புக்களுடன் நான்காவதாக தமிழ் மக்கள் கூட்டணியும் தார்மீக அடிப்படையில் ஒருங்கிணைந்து ஒன்றுசேராது விட்டால் தமிழ் மக்களின் ஆணை வீணாகிவிடும்.