ட்ரம்பின் தீர்வை வரி அரசுக்கு புதிய சவால்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடந்த 9ஆம் திகதி வெளியிட்டுள்ள தீர்வை வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளமை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை உள்ளிட்ட பல வளர்முக நாடுகள் உடனடியாகவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு குறித்த வரி விதிப்பு அறிவிப்பை மீளப்பரிசீலிக்குமாறு அவசரமாக வெள்ளை மாளிகைக்கு கடிதத்தினை அனுப்பியிருந்தன. பகிரங்கமான கோரிக்கைகளையும் விடுத்திருந்தன.

இந்தப் பின்னணியில் தற்போது 90நாட்களுக்கு சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரி அமுலாக்கத்தை ஒத்திவைத்துள்ளார். உண்மையில் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த அறிவிப்பு இலங்கை உள்ளிட்ட வளர்முக நாடுகளுக்கு ‘மூச்சுவிடுவதற்கான காலம்’ தான். ஆனால் அது தற்காலிகமானது.

குறித்த தீர்வை வரி விடயத்தினை கையாள்வதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இலங்கையைப்  பொறுத்தவரையில் இந்த விடயத்தினை கையாள்வதற்காக நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு அனைத்துக் கட்சிகளின் முன்மொழிவுகளையும் பெறுவதற்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தக சம்மேளத்தினரைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக வெளிவிவகார அமைச்சு, இலங்கையில் உள்ள அமரிக்க தூதரகம் மற்றும் இராஜதந்திர தரப்புக்களுடனான உரையாடல்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.

இவ்வறான நிலையில் குறித்த தீர்வை வரி விதிப்பால் இலங்கைக்கு எவ்விதமான தாக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றை எவ்வாறு கையாள முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுதல் பொருத்தமானதாக இருக்கும்.

இலங்கையின் மொத்த ஏற்றுமதியானது 12.7பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் 22.8சதவீத ஏற்றுமதிகள் ஐக்கிய அமெரிக்காவிற்கே செல்கின்றன. அதன் தொகையானது 2911 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்த ஏற்றுமதியில், ஆடைத்துறை மட்டும் 1885மில்லியன் மதிப்பைக் கொண்டுள்ளது. அது மொத்த வெளிநாட்டு ஏற்றுமதியில் 64வீதமாகும்.

இலங்கையின் முக்கிய வருவாய்துறையான இறப்பர் 28 மில்லியன் டொலர்களையும், தேங்காய் 73 மில்லியன் டொலர்களையும்,  எக்டிவேடட் கார்பன்  49மில்லியன் டொலர்களையும், தேயிலை 48 மில்லியன் டொலர்களையும், இரும்பு 48 மில்லியன் டொலர்களையும் கொண்டுள்ளதோடு, ஆடை ஏற்றுமதியில் 38-40சதவீதம் அமெரிக்காவிற்கே ஏற்றுமதியாகின்றன.

இலங்கை வருடமொன்றுக்கு 12 பில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருமானத்தை பெறுகிறது. அதில் அமெரிக்காவுக்கும் மட்டும் இலங்கை கிட்டத்தட்ட 3000 மில்லியன் அதாவது 3 பில்லியன் டொலர்களுக்கு ஏற்றுமதி செய்கிறது. இது இலங்கை ஏற்றுமதி வருமானத்தின் கிட்டத்தட்ட 25சதவீதமாகும். இதற்கு 12.2சதவீதமான தீர்வை வரியே இதுவரை அறவிடப்பட்டது. தற்போது அத்தீர்வை வரியானது 44சதவீதமாகியுள்ளது.

இந்நிலையில், இலங்கை அமெரிக்காவிடமிருந்து சுமார் 300 மில்லியன் அளவுக்கே இறக்குமதி செய்கிறது. இதற்கு இலங்கை கிட்டத்தட்ட 88சதவீதமான தீர்வைகளை விதிக்கிறது. மேலும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் இலங்கைக்கு அதிக இலாபம் கிடைக்கிறது. அவ்வாறான நிலையில் ஜனாதிபதி ட்ரம்பின் பார்வையில் அவர் விதித்துள்ள 44சதவீத தீர்வை வரியானது  இலங்கை விதிக்கின்ற 88சதவீதத்தில் அரைவாசியாகும்.

இதேநேரம், இலங்கையைப் பொறுத்தவரையில் தற்போது தான் பொருளாதார ரீதியான மீட்சியை அடைவதற்காக மெல்லமெல்ல நகர ஆரம்பத்திருக்கின்றது. அவ்விதமான சூழலில் அமெரிக்க தீர்வை வரி அமுலாக்கப்பட்டால் மீளச் செலுத்த வேண்டியுள்ள நிதி மற்றும் கிடைக்கவுள்ள நிதிக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கும். வருமானம் குறைவடைந்து கடன் மீண்டும் அதிகரிக்கும்.

300பில்லியன் டொலர்களை தற்போது மீளச் செலுத்த வேண்டியுள்ளது. இதற்காக எங்கிருந்து நிதி திரட்டினாலும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும். இதனால் டொலர்களின் பெறுமதி அதிகரிக்கும். இந்நிலைமையானது, 2028ஆம் ஆண்டு மீள செலுத்த வேண்டியுள்ள கடனை செலுத்துவதில் தாக்கத்தினை ஏற்படுத்தும்.

இலங்கையானது கடந்த வருடத்தில் 5 சதவீத வருமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இருந்தபோதும் தற்போது அமெரிக்க தீர்வையால் ஏற்படும் புதிய நெருக்கடியால் வருமான வளர்ச்சி வீழ்ச்சியை சந்திக்கலாம். இதனூடாக இலங்கைக்கு பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெறும்.

சமகாலத்தில் வேலையின்மை அதிகரிப்பு, வறுமை அதிகரிப்பு என்பவற்றினால் இலங்கை சிக்கித் தவிர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த வரி விதிப்பினால் ஆடைத்துறை பாதிக்கப்பட்டு தொழில் இழப்புகள் ஏற்படுமாயின் அது நாட்டின் வேலையின்மைப் பிரச்சினையை மிகவும் மோசமாகத் தீவிரப்படுத்தும்.

வரி விதிப்பு அதிகரித்தன் காரணமாக அமெரிக்க வர்த்தகர்கள் இறக்குமதியாளர்கள் இலங்கையிலிருந்தான இறக்குமதிகளை குறைப்பதற்கே அதிகளவான சாத்தியப்ப்பாடுகள் காணப்படுகின்றன. அவ்விதமான நிலைமைகள் ஏற்பட்டால் இலங்கைக்கு அது மிகப் பெரிய பொருளாதார பேரிடியாகவே இருக்கும்.

உதாரணமாக கூறுவதாயின், இலங்கையில் கிட்டத்தட்ட ஆடைக் கைத்தொழில் துறையில் 3 இலட்சம் பேர் நேரடியாக தொழில் செய்கின்றனர். அவர்களில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கி வாழ்கின்றனர்.சிறியளவிலான ஆடைக் கைத்தொழில் நிறுவனங்களும் இலங்கையில் செயற்படுகின்றன.

அந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பினால் அவை தமது உற்பத்திகளை குறைக்க வேண்டி வரும் அல்லது நிறுவனங்களை மூட வேண்டிய அழுத்தம் கூட ஏற்படலாம். ஆனால், இலங்கை மட்டும் இந்த தீர்வை வரியை எதிர்கொள்ளவில்லை. மாறாக அதிகளவு ஏற்றுமதி செய்கின்ற மற்றுமொரு நாடான பங்களாதே{க்கு 37சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. (இலங்கையை விட குறைவு). வியட்நாமுக்கு 46சதவீதம், இந்தியாவுக்கு 26சதவீதம், கம்போடியாவுக்கு 49 சதவீதம் என தீர்வைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து நாடுகளும் பாரியளவில் பாதிப்பை சந்திக்கவுள்ளன.

எனினும், ஆடை உற்பத்தியில் ஈடுபடுகின்ற பெரும்பாலான நாடுகளுக்கும் வரி விதித்துள்ளதால் அமெரிக்க இறக்குமதியாளர்கள் எந்தவொரு நாட்டிடமும் இறக்குமதியே செய்யாமல் இருக்க முடியாது. அவர்களுக்கும் ஆடை உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கான அவசியமான தேவை இருக்கிறது.

எனவே, வரி அதிகமாக இருந்தாலும் இறக்குமதி செய்தாக வேண்டும். ஆனால், பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளை விட இலங்கைக்கான வரி அதிகமாக இருப்பதால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படலாம். குறிப்பாக, போட்டித்தன்மையான ஆடைத்துறைக்குள் குறித்த இரு நாடுகளும் அதிகம் பிரவேசிப்பதால் இலங்கை அச்சந்தையில் பின்தள்ளப்படலாம். இவ்வாறு தான் ஏனைய ஏற்றுமதிச் சந்திகளிலும் நிலைமைகள் நிகழவுள்ளன.

இந்நிலையில் தற்போது இலங்கைக்கு அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வெற்றி பெறுவதற்கு அப்பால், அமெரிக்காவிலிருந்து அதிகமாக இறக்குமதிகளை மேற்கொள்ளுதல், அமெரிக்கப் பொருட்களுக்கான உள்நாட்டு வரிகளை குறைத்தல், இருதரப்பு ஒருங்கிணைந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளுதல், தெளிவான மற்றும் நேர்மையான வர்த்தக நடைமுறைகளை ஏற்று அனுசரித்தல், உலக வியாபார அமைப்பு வழியாக சர்வதேச பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுதல், மாற்றுச் சந்தைகளை அடையாளம் காணுதல் ஆகியவையே உடனடியான தெரிவுகளாக உள்ளன.