இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தனது இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை கடந்த வாரம் நிறைவு செய்திருக்கின்றார்.
இந்தியாவின் பிரதமராக தனது மூன்றாவது பதவிக்காலத்தில் இருக்கும் நரேந்திர மோடி நான்காவது தடவையாக இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கின்றார்.
முலாவது தடவையாக இலங்கைக்கு 2015இல் வருகை தந்திருந்த பிரதமர் மோடி கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பாராளுமன்றில் உரையாற்றியிருந்தார்.
அதன்பின்னர், இரண்டாவது முறையாக 2017 ஆம் ஆண்டு கொழும்புக்கும் கண்டிக்கும் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணம் மலையகத்துடனான இந்தியாவின் அரசியலை இறுகப் பிணைத்தது.
மூன்றாவது முறை, கொழும்புடனையே பயணத்தை நிறுத்திக் கொண்ட மோடி, நான்காவது முறை சம்பூர் மின் திட்டத்தை தொடங்கி வைப்பதற்கான நிகழ்ச்சி நிரல் இருந்தபோதும் திருகோணமலைப் பயணத்தை தவிர்த்து விட்டு, அவர் அநுராதபுரவுடன் இலங்கைப் பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்.
பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின்போது பாதுகாப்பு உட்பட ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு ஒப்பந்தத்தினால் இலங்கையின் இறைமை, மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தினை பிரதமர் மோடி வழங்கியிருக்கின்றார்.
அதேபோன்று, இலங்கையின் கடற்பரப்பு, நிலப்பரப்பு, வான்பரப்பு ஆகியன இந்தியாவின் தேசிய பாதுகாப்பு எதிராக பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்படாது என்ற உத்தரவாதத்தினை அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ளார்.
அநுரகுமார தலைமை தாங்கும் தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) தாய்க் கட்சி ஜே.வி.பி. இது தென்னிலங்கையில் ஆயுதக் கிளர்ச்சி மூலமாக தனது சுய அறிமுகத்தைச் செய்த தரப்பாகும்.
1971ஆம் ஆண்டிலும், 1987ஆம் ஆண்டிலும், ஆயுதக் கிளர்ச்சிகளை முன்னெடுத்த ஜே.வி.பி.யின் முக்கியமான கொள்கைகளில் ‘இந்திய எதிர்ப்புவாதம்’ பிரதானமானது.
ஜே.வி.பி.யின் இந்திய எதிர்ப்பு வாய்ந்த சித்தாந்தமானது இந்தியாவுக்கு எதிராக முழு அளவில் குரல் எழுப்புவதற்கும், அரசியல் ரீதியான தாக்கங்களைச் செய்வதற்கும் வெகுவாக ஒத்துழைப்புக்களை வழங்கியது.
ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில், இந்தியாவை பிராந்திய வல்லாதிக்க சக்தியாக நோக்கியதோடு இலங்கையை ஆக்கிரமிப்பு செய்யும் நாடாகவே கணித்தது. நோக்கியது. இதனால் ஜே.வி.பியின் பிரதான கொள்கையில் ‘இந்திய எதிர்ப்புக் கொள்கை’ என்பது தீவிரமாக பின்பற்றும் விடயமாகியது.
ஜே.வி.பியின். இந்த உறுதியான நிலைப்பாடானது, 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரான தீவிரமான பிரசாரத்துக்கு வித்திட்டது.
அதுமட்டுமன்றி, அப்போது ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு விஜயம் செய்த தருணத்தில் அவருக்கான வழங்கப்பட்ட அரசமரியாதை தருணத்தில் அவர் மீது, கடற்படைச் சிப்பாய் விஜேமுனி விஜித ரோஹண டி சில்வா தனது துப்பாக்கிப் பிடியினால், தாக்குதல் நடத்துவதற்கும் வழிசமைத்தது.
குறித்த கடற்படை சிப்பாய் ஜே.வி.பி. உறுப்பினராக இருந்திருக்கவில்லை. ஆனால் அவர் ஜே.வி.பியின் சித்ததாந்தத்தினால் ஈர்க்கபட்டவராகவே இருந்தார்.
அவ்விதமான இறுக்கமான இந்திய எதிர்ப்புக் கொள்கையில் இருந்த ஜே.வி.பி. தற்போது தன்னை தேசிய மக்கள் சக்தியாக அடையாளம் காண்பித்துவரும் நிலையில் பாதுகாப்பு ஒப்பந்தத்தினை இரகசியமான இந்தியாவுடன் மேற்கொண்டிருக்கின்றது.
அதுமட்டுமன்றி, இலங்கையின் உயரிய விருதான ‘இலங்கை மித்திர விபூஷண’ என்ற உயரிய கௌரவத்தையும் வழங்கியதோடு மட்டுமன்றி, பிரதமர் மோடிக்காக அநுராதபுரம் விமான நிலையத்தினை ஒருநாள் சர்வதேச விமான நிலையமாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரகடனப்படுத்தி மகாபோதி வழிபாடுகளை அடுத்து அவர் இராமேஸ்வரத்துக்கு உலங்கு வானூர்தியில் செல்வதற்கான சூழல்களையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
மேலும், இலங்கை, இந்திய மீனவர்கள் விடயத்தில் பிரதமர் மோடி மனிதாபிமான ரீதியில் அப்பிரச்சினையை அணுக வேண்டும் என்று கோரியதோடு மீனவர்களும், படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிய தருணத்தில் நல்லெண்ணமாக பதினொரு மீனவர்களையும் அநுர அரசாங்கம் விடுவித்துள்ளது.
இந்நிலையில் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் கொள்கை சம்பந்தமான விடயத்தினை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.
முதலில் இந்திய எதிர்ப்புக்கொள்கையைக் கொண்டிருந்த ஜே.வி.பி. தற்போது அதனை மாற்றியமைத்து இந்தியாவுடன் இணைந்து செல்லும் முடிவினை எடுத்திருக்கின்றது என்றால் அதுவொரு பாரிய மாற்றம். அதற்கான காரணம் என்ன என்று பல கேள்விகள் எழுகின்றன.
அதனைவிடவும், இந்திய எதிர்ப்புவாதம் அதன் உண்மையான கொள்கையாக இருந்திருந்தால், ஆட்சிக்கு வந்த பின்னர் அக்கொள்கையை மாற்றியமைத்திருக்க முடியாது.
ஒரு கட்சியினது கொள்கை என்பது மாற்ற முடியாது, மாற்றத்துக்கு உட்படவும் முடியாதது. ஆவ்வாறு மாற்றுவதாக இருந்தால் கூட வருடாந்த மாநாட்டில் தக்க காரணங்களை வெளிப்படுத்தி பகிரங்கமான அறிவிப்பைச் செய்ய வேண்டும் என்பது அரசியல் மரபாகும்.
ஆனால், ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் கொள்கை அவ்வாறானதல்ல. அது காலத்துக்கு காலம், பிராந்திய, பூகோள சூழல்களுக்கு ஏற்றவகையில் மாறக்கூடிய நெகிழ்ச்சித் தன்மையைக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் ஜே.வி.பி.தம்மை கொள்கைவாதிகளாக பிரகடனம் செய்து மார்பு தட்டிக்கொள்வது வெறுமனே வாக்குவங்கி அரசியலை மையப்படுத்தியதேயாகும்.
அதுவொருபுறமிருக்கையில், அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையை ஆட்சிப்பீடத்தில் அமர்வதற்கு முன்னதாகவே உணர்ந்து கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படையான விடயம்.
குறிப்பாக, இந்தியாவைப் பகைத்துக் கொண்டு கொழும்பில் ஆட்சி செய்ய முடியாது என்பது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நன்றாகத் தெரிந்த விடயம்.
பாரம்பரிய சிங்களக் கட்சிகளின் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்து, மாற்றுத்தரப்பு ஒன்றுக்கான வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது என்பதை முதலில் உணர்ந்து கொண்ட இந்தியா அநுரவை டில்லிக்கு அழைத்தது.
அந்த அழைப்பு, தமக்கான பிராந்திய அங்கீகாரமாக கருதிய அநுர இந்தியாவை அனுசரித்துப்போக வேண்டியதை தனது தோழர்களுக்கும் நிச்சயமாக விளக்கியிருப்பார்.
இந்தியாவைப் பகைத்துக் கொண்டு, சீனாவுடன் நெருக்கத்தை பேணிக் கொண்டு, இலங்கையில் ஆட்சியை நகர்த்துவது கடினம் என்ற இயற்கை நியதியின் புரிதலும், பொருளாதாரம் உள்ளிட்ட நெருக்கடிகளும் அதிகமுள்ள இந்தியாவை வைத்து இந்த சிக்கல்களை சமாளிப்பது தான், சுலபமான வழி என்று அநுரவுக்கும் தோழர்களும் நிச்சயமாக தெளிவாக புரிந்திருக்கும்.
இந்தப் பின்னணியிலேயே ஜே.வி.பி. தனது பாரம்பரிய கொள்கையான, இந்திய எதிர்ப்புவாதத்தை கைவிட்டிருக்கிறது. இன்னொரு முறை அதனைக் கையில் எடுத்துக் கொண்டு அரசியல் செய்ய முடியாது என்ற யதார்த்தமும் அதற்கு நன்றாகவே விளங்கியுள்ளது.
அந்த வகையில், இந்திய எதிர்ப்புவாதம் என்பது இனிமேல் ஜே.வி.பியாலோ அல்லது அது தலைமையிலான கூட்டணியான தேசிய மக்கள் சக்தியாலோ ஊக்குவிக்கப்படவோ முன்னெடுக்கப்படவோ முடியாதவொரு விடயமாகி விட்டது.
ஆகவே, ஜே.வி.பியின் அடிப்படைக் கொள்கை மாற்றம், அதன் ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்கானது என்பதற்கு அப்பால், நாட்டின் எதிர்காலத்துக்குமான புரிதல் மட்டும் அடுத்து அத்தரப்புக்கு ஏற்பட்டால் அதுவொரு பெருமாற்றமே.