பயங்கரவாத தடைச்சட்டம் நான்கு தசாப்பதங்கள் கடந்து நாட்டின் அனைத்து இனக்குழுமங்களையும் பரிதவிக்க வைக்கும் நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்தச் சட்டத்தால் இலக்குவைக்கப்பட்ட இனக்குழுமமாக தமிழினமே ஆரம்பத்தில் இருந்ததோடு பெரும் இன்னல்களுக்கும் முகங்கொடுத்திருந்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப்பின்னரான சூழலில் முஸ்லிம்களும், தொடர்ந்து பெரும்பான்மை சிங்கள மக்களும் கூட பயங்கரவாதச் சட்டத்தின் கோரமுகத்தினை நன்கே உணருமளவுக்கு நிகழ்வுகள் அரங்கேறியிருந்தன.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதாக உறுதி அளித்திருந்தது.
அதுமட்டுமன்றி தேசிய மக்கள் சக்தி ஆட்சிப்பொறுப்பினை ஏற்பதற்கு முன்னதாக, புதிய பயங்கரவாத தடைச்சட்ட மூலம், பயங்கரவார எதிர்ப்பு சட்ட மூலம் ஆகிய தலைப்புக்களில் இரண்டு வரைவுகள் கொண்டுவரப்பட்டிருந்தன.
அச்சட்ட மூலங்கள் பற்றிய கலந்துரையாடல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அழைக்கப்பட்டபோது அக்கட்சி, நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் மீண்டும் அதையொத்த சட்டமொன்று கொண்டுவருவதற்கான உரையாடல்களில் பங்கேற்பதற்கு தயாரில்லை என்று கூறி அனைத்து கலந்துரையாடல்களையும் தவிர்த்தே இருந்தது.
அவ்விதமான இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி பதவியேற்றதன் பின்னரான சூழலில் தனது முன்னைய நிலைப்பாட்டுக்கு எதிரான பிரதிபலிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பாராளுமன்றத்தில் தேசிய ஒற்றுமைப்பாடு மற்றும் நீதியமைச்சு தொடர்பான நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார உரையாற்றியபோது, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காலம் கடத்தவில்லை எனவும், அவ்விடயம் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
எனினும், அவர், சர்வதேச மனித உரிமைகள் மூலதர்மங்களுக்கு கட்டுப்பட்டதாகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது எனவும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் நாம் எதிர்;க்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
தற்போது புதிய சட்டத்தை உருவாக்குவதற்காக புதிய குழுவொன்றை நாம் நியமித்துள்ளோம். பழைய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும், புதிதாகக் கொண்டுவரப்பட்ட சட்டம் தொடர்பிலும் அந்த குழு மீளாய்வு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, பூகோள பயங்கரவாதம், பூகோள நூதண சவால்கள் என்பவற்றுக்கு முகங்கொடுக்ககூடிய வகையிலேயே பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தை கொண்டுவர எதிர்பார்க்கின்றோம் என்றும் புதியதொரு கற்பிதத்தை வழங்கியுள்ளார்.
முன்னைய அரசாங்கங்கள் இல்லாமல் செய்வதாக வாக்குறுதியளித்த – ஆனால் நிறைவேற்றாத – 1979 ஆண்டு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாக நடைமுறைக்கு வந்த வலுவான பயங்கரவாத தடைச்சட்டம் நபர் ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்ற சந்தேகம் உருவானால் அவரை நீதிமன்ற அனுமதியின்றி கைதுசெய்வதற்கும் சோதனையிடுவதற்கும் அனுமதிக்கின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சர் மூன்று மாதம் முதல் 18 மாத காலம் வரையில் நபர் ஒருவரை தடுத்து வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்கலாம் என்றும் அதன் பின்னர் செய்யப்பட்ட திருத்தங்கள் மத, இன, சமூக ஐக்கியமின்மையை ஏற்படுத்தியவர் அல்லது ஏற்படுத்த முயன்றார் என்று சந்தேகிக்கப்படுபவரை அவர் சரணடைந்தால் அல்லது சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டால் இரண்டு வருடங்கள் நீதிமன்ற விசாரணையின்றி தடுத்துவைப்பற்கு அனுமதியளித்தன.
போரின் பின்னரான காலத்தில் ஐரோப்பிய பாராளுமன்றம் தீர்மானமொன்றை நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை மீறுவதால் அதனை நீக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.
இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை உனடியாக நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த ஐரோப்பிய பாராளுமன்றம், ஜிஎஸ்பி வரிச்சலுகையை இரத்துச்செய்யப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தது.
இதற்குப் பதிலளித்த இலங்கை அரசாங்கம், தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பற்ற விதத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தது.
இந்த அறிவிப்பை தமிழ் மக்களின் பிரதிநித்துவத்தைக் கொண்டிருக்கும் எந்தவொரு அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.
மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளும், முற்போக்கான சக்திகளும் ஆதரிக்கவில்லை. விசேடமாக குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பை அப்போது எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தரப்பினர் மிகக் கடுமையாக எதிர்த்தனர்.
ஆனால் தற்போது ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்தவுடன் அந்த கடுமையான நிலைபாடுகள் மாற்றமடைந்துள்ளன. நாட்டுக்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவை என்ற கடந்த கால சிங்கள,பௌத்த மையவாத அரசாங்கங்களின் தீவிரமான சிந்தனையை பின்பற்றும் நிலைமையே தோன்றியுள்ளது.
இவ்வாறாக, பயங்கரவாத தடைச் சட்டத்தின் துஷ்பிரயோகம் தற்போது இலங்கையில் நன்கு அறியப்பட்ட உண்மையாகும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒரு நபர் குற்றம் சாட்டப்பட்டால், இப்போது சாத்தியமான துஷ்பிரயோகம் மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் தவறான தோற்றத்தை உருவாக்கும் முயற்சி குறித்து அதிக சந்தேகம் உள்ளது. வெறுமனே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்று மக்கள் இனி நம்பமாட்டார்கள் என்பதே நாட்டில் உள்ள அதிகளவிலானோரின் அபிப்ராயமாகும்.
அரசியலமைப்பின் 126 மற்றும் 140 ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கு மட்டுமே அனுமதிக்கும் போதுகுற்றவியல் நடைமுறைகோவையின் ஏற்பாடுகளை நீக்கிவிடுகிறது, குற்றங்கள் மிகக் கடுமையான குற்றங்களாக இருந்தாலும் சிறிய குற்றங்களாக இருந்தாலும் சரி சகல குற்றச்சாட்டுகளையும் கையாள்வதற்கு குற்றவியல் நடைமுறைகோவையே நீதிமன்றங்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறது.
நீதிமன்றங்களுக்கு அத்தகைய அதிகாரம் இருப்பதற்கான நியாயப்பாடானது, குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்ற அனுமானமாகும். ஒரு நபர் மீது நியாயமான காரணங்கள் இல்லாமல் குற்றம் சாட்டப்படலாம் மற்றும் குற்றச்சாட்டின் அடிப்படையில், நபர்களை கைது செய்து காவலில் வைக்கலாம் என்பது சட்டத்தால் நபர்களின் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. மக்களின் பாதுகாப்பைப் பறிப்பதற்காக சட்டமே பயன்படுத்தப்படும் இந்த ஒட்டுமொத்த நிகழ்வு, ஏனைய எதனையும் விட தேசத்திற்கு மிகவும் ஆபத்தானது.
மக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், கடுமையான குற்றங்களில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு போதுமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றங்கள் திருப்தி அடைந்தால், சட்டமானது அதன் இயல்பான நடைமுறைகளுக்குள் தடுப்புக்காவலை வழங்குகிறது. இந்த ஏற்பாடுகளைப் பயன்படுத்தாமல்,பயங்கரவாதத்தை தடுப்பது தொடர்பான முழுப் பாதுகாப்புப் பிரச்சினையையும் நிறைவேற்று அதிகாரத்தின் மீது வைப்பது ஆபத்தான செயலாகும்.
தீவிரவாத செயற்பாடுகள் இருந்தால், அவற்றைத் தடுப்பதாக சட்டங்களை இயற்றுவதாக கூறி துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் அது பொதுமக்களுக்க அச்சுறுத்தல் மற்றும் அச்சத்தை உருவாக்கும்.
ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதும், தேவைப்பட்டால், மக்களின் பாதுகாப்பை இறுதியில் நீதித்துறையின் கரங்களில் வைக்கும் சாதாரண சட்டத்தின் எந்த விதிகளையும் நீக்காமல் சட்டங்களைக் கொண்டுவருவதும் தான் இதற்கு வழியாகும். தேசத்தின் பாதுகாப்பிற்குத் தேவையானதை நீதித்துறைசெய்வதற்கு அதன்மீது நம்பிக்கை வைப்பதனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எதையும் இழக்கவில்லை.
அனைத்துக் கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களைக் கையாள்வதில் நீதித்துறையின் கரங்களை வலுப்படுத்துவதானது ,பயங்கரவாதச் சம்பவங்களைச்கையாள்வதற்கு அரச அதிகாரிகளுடன் இணைந்து செயற் படுவதில் மக்கள் மிகவும் தீவிரமாக ஈடுபடுவதற்கான மிகவும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும்.
பயங்கரவாதம் இருக்கும் இடத்தில் மக்களின் தீவிர ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே அதனை தோற்கடிக்க முடியும், ஆனால் மக்கள் சட்ட நடைமுறைகளை நம்பாமல், சட்டச்செயல்முறையானது வேறு ஏதாவதொன்றிற்கான போர்வையாகப் பயன்படுத்துவார்கள் என்று மக்கள் சந்தேகித்தால், அதற்கான ஒத்துழைப்பு நிச்சயம் இருக்காது.