இலங்கையில் எரிபொருளால் ஏற்படப்போகும் பூகோளப்பதற்றம்

இந்து மா சமுத்திரத்தின் கேந்திர மையமாக இருக்கும் இலங்கைத் தீவு பூகோளப் போட்டிக்களமாக மாறிவருகின்றமை பரகசியமான விடயமாகும்.  அந்நிலைமையானது தற்போது எரிபொருளை மையப்படுத்தி தீவிரமடையும் நிலைமையை எட்டியுள்ளது.

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தினையும், முதலாவது கன்னி விஜயத்தினையும் கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவு செய்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இம்மாதத்தின் 13ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதி வரையிலான நான்கு நாட்கள் உத்தியோக பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டு சீனாவுக்கு சென்று திரும்பியிருக்கின்றார்.

பொதுப்படையில், பார்க்கின்றபோது இந்திய விஜயத்திற்கு ஒருபடி மேலாகவே சீனாவின் விஜயம் அமைந்திருக்கின்றது. இது இயல்பாக ஏற்படக்கூடியதொன்று. ஏனென்றால் அநுரகுமாரவையும், அவரது தலைமையிலான மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடைய அரசாங்கத்தினையும் சீனா ‘தன்னுடைய அரசாங்கமாகவே’ பார்க்கின்றது.

இடதுசாரத்துவக் கொள்கை, இந்திய எதிர்ப்பு மனோநிலை, மேற்கத்தேய எதிர்ப்பு வாதம் உள்ளிட்ட ஜே.வி.பியின் சித்தாந்த ரீதியான கடந்த கால வரலாறும் சீனாவின் வரலாறும் ஏறக்குறைய ஒன்றித்துப்போகின்றன.

இவற்றுக்கும் மேலாக சீனாவுக்குச் சென்றிருந்த அநுரகுமார தாய்வானை சீனாவின் தாய்நிலத்துக்குச் சொந்தமானது என்பதை ஏற்றுக்கொண்டு ‘ஒருசீனக்கொள்கையை ஏற்றுக்கொள்கின்றேன்’ என்று அறிவித்தமையானதும் சீனாவுடன் அநுர கொள்கை ரீதியில் எவ்வளவு தூரம் நெருங்கியிருக்கின்றார் என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது.

இதேநேரம், சீனாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் 15உடன்பாடுகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அத்திட்டங்கள் பற்றிய முழுமையான வெளிப்படைத்தன்மையை இருதரப்பினரும் பேணாத நிலைமையே நீடிக்கின்றது.

எனினும், இருநாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக பேச்சுக்கள் நடைபெற்று இணக்கப்பாடு எடுக்கப்பட்ட அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதுபற்றிய பேச்சுக்கள் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும் அதன்பின்னர் அதற்கு எதிரான எதிர்ப்பலையொன்று காணப்பட்டது.

அந்த எதிர்ப்பலையில் பிரதான சக்தியாக இருந்தது ஆட்சியில் தற்போதுள்ள ஜே.வி.பி.தான். 4.5பில்லியன் டொலர்கள் முதலீட்டை அடிப்படையாகக் கொண்டு குறித்த சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதன் ஊடாக சிறிலங்கா பாரிய நன்மைகளை அடையும் என்று அப்போதிருந்த ராஜபக்ஷக்கள் அர்த்தம் கற்பித்தனர்.

எனினும், அம்பாந்தோட்டை துறைமுகத்தினை 99ஆண்டுகளுக்கு சீனாவுக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்ட நிலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் அங்கு உருவாக்கப்பட்டால் அதுபெரும் பாதகமான நிலைமையை உருவாக்கும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியிருந்தன.

ஆனால் தற்போது சீனாவுக்குச் சென்றிருந்த அநுரகுமார அந்த உடன்படிக்கையை வெறுமனே 3.7பில்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்ததாக கையொப்பமிட்டிருக்கின்றார். எதற்காக பெறுமதி குறைக்கப்பட்டது, அதற்கான தீர்மானம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது சம்பந்தமாக எந்தவிதமான தகவல்களும் தற்போது வரையில் இல்லை.

அதுமட்டுமன்றி, இலங்கையில் சீனாவின் முதலீடுகள் அனைத்தும் டொலர்களின் பெறுமானம் கூறப்பட்டாலும் அவற்றுக்கான நிதி யுவானில் தான் வழங்கப்பட்டுவந்த மரபுகள் இருக்கின்றன.

அவ்விதமான நிலையில் இந்த முதலீட்டையும் சீனா யுவானில் முதலீடு செய்வதற்கு முன்வருமாக இருந்தால் நாட்டின் அந்நியச் செலாவணி நெருக்கடிகளுக்கு தீர்வினை வழங்கப்போவதில்லை.

அதேவேளை, அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவிருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு இரண்டு இலட்சம் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்யக் கூடியதாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், 2 இலட்சம் பீப்பாய்கள் என்பது, இலங்கையின் நாளாந்த எரிபொருள் தேவையை விட மிகமிக அதிகமானது. இலங்கையில் 2019 ஆம் ஆண்டு அதிகபட்சமாக ஒரு இலட்சத்து 35 ஆயிரம் பீப்பாய் எண்ணெய் ஒரு நாளில் நுகரப்படுகின்ற சூழல் ஏற்பட்டாலும் கூட- 65 ஆயிரம் பீப்பாய் எண்ணெய் நாளொன்றுக்கு மிகையாக உற்பத்தி செய்யப்படும்.

2021 ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து 16 ஆயிரம் பீப்பாய்களாக காணப்படும் எண்ணெய் நுகர்வு 2022 ஆம் ஆண்டு, இந்த எண்ணிக்கை 98 ஆயிரமாக குறைந்துள்ளது. 

அவ்விதமான நிலையில் மிகையாக சுத்திகரிக்கப்படும் எண்ணெய் நுகர்வினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் சீனாவுக்கு இருக்கிறது. அந்நிறுவனத்தின் திட்டப்படி நாளொன்றுக்கு இரண்டு இலட்சம் பீப்பாய் எரிபொருளை சுத்திகரிக்குமேயானால், அதில் பாதியை விட அதிகமானதை  ஏற்றுமதி செய்ய வேண்டியிருக்கும்.

இதற்காக அம்பாந்தோடை;டை துறைமுகத்தில் சீனா அதிகமான கப்பல் பிரசன்னத்தினை ஏற்படுத்த வேண்டிய நிலைமைகள் ஏற்படும். இந்த நிலைமையானது சீனாவின் பிரசன்னத்தினை மேலும் அங்கு அதிகரிக்கச் செய்யும்.

அதுமட்டுமன்றி 2015 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக இலங்கைக்கு வந்த போது திருகோணமலையை தெற்காசியாவின் எண்ணெய் கேந்திரமாக மாற்றுவதாக கூறியிருந்தார்.

அப்போது, இரண்டு நாடுகளின் தலைவர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையிலும் கூட, அந்த விடயம் இடம்பெற்று இருந்தது. ஆனால் சீனக்குடா எண்ணெய் தாங்கிகளை பெரியளவில் அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா முன்வரவில்லை.

இருந்தாலும் இந்தியாவுக்கு அந்த இலக்கை அடையும் நோக்கம் இன்னமும் இருக்கின்றது. அவ்விதமான நிலையில் சீனாவின் அம்பாந்தோட்டையில் சீனா ஆதிக்கம் செலுத்தி எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா விரும்பாது என்பது பகிரங்கமாக உணரக்கூடியதொரு விடயமாகும்.

இதற்கிடையில், திருகோணமலை சீனக்குடாவில் உள்ள  எண்ணெய் தாங்கிகளை முழுமையாக இயங்க வைப்பதற்கு இந்தியா காய்களை நகர்த்தியுள்ளது. இதன் காரணமாகவே அரசாங்கம் சீனாவின் உதவியுடன் இந்தியாவின் முகாமையில் அத்தாங்கிகளை இயங்கச் செய்வதற்கு முயற்சிப்பதாக கூறினாலும் இந்தியா அதற்கு இணங்குமா என்ற கேள்வி இருக்கிறது.

ஏனென்றால் சீனா இந்தளவு பெரிய முதலீட்டிற்கு இணங்கியுள்ள நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணெய் நுகர்வை கொண்ட ஒரு நாட்டில், ஏட்டிக்கு போட்டியாக பெருமளவு முதலீட்டைச் செய்வதால், தமக்கு பயன் கிடைக்காது என்றே இந்தியா சிந்திக்கும்.

இவ்வாறான நிலையில், சீன பயணத்தின் போது, பெறப்பட்ட முதலீடுகளும், செய்து கொள்ளப்பட்ட  உடன்படிக்கைகளும் தொடர்பாக, இந்தியா எத்தகைய பிரதிபலிப்பை வெளிப்படுத்தப் போகிறது என்ற கேள்விகள் இருக்கின்றன.

மேலும் சிறிலங்காவில், பெற்றோலிய கூட்டுத்தாபனம், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செயற்படுகின்றது. அத்துடன் தனது நிருவாகத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்கின்ற பணியையும் அது முன்னெடுக்கின்றது.

இதற்காக, இந்தியாவின் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக, கணிசமானவு எரிபொருள் விற்பனையில் ஈடுபடுகிறது.

அமெரிக்காவின் செல் நிறுவனமும் சில்லறை எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடுகிறது.  இப்படி இருக்க, சினோபெக் நிறுவனம் சிறிய அளவில் விலைக்குறைப்புடன் எரிபொருள் சந்தையை கைப்பற்றுவதற்கு முனைந்து கொண்டிருக்கின்றது.

சர்வதேசத்தில் ஆதிக்கம் செலுத்தும் மூன்று முக்கிய நாடுகள் சிறிலங்காவின் எண்ணெய் சந்தைக்குள் புகுந்திருப்பது மட்டுமன்றி சிறிலங்காவை தமது எண்ணெய் வியாபார, பரமாற்ற கேந்திரமாக மாற்றுவதற்கு முனைந்து கொண்டிருப்பதானது, அத்தீவு தேசத்தில் நிலவும் இராஜதந்திர போட்டிகளுக்கு அப்பால் எரிபற்று நிலையை அடைந்திருக்கின்றது.

இத்தீவிரமான நிலைமையானது நாளுக்கு நாள் குறையப்போவதற்கு கிட்டிய காரணங்கள் எதுமில்லாத நிலையில் பூகோள போட்டிக் களத்தில் மாறுபட்ட நிலைமைகள் ஏப்போது வேண்டுமானாலும் உருவெடுக்கும் ஆபத்தே உள்ளது.

SriLanka #FuelCrisis #GlobalConflict #HambantotaRefinery #AnuraKumaraDissanayake #China #India #America #Geopolitics #OilRefinery #ChinaSriLankaRelations #EnergyPolicy #ForeignInvestment #SouthAsia #OilHub