‘1989ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவானது, 13ஆவது திருத்தச்சட்டத்தினை திருத்துவதென தவறான புரிதலைக் கொள்ளக் கூடாது’
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் தொடர்பான மூன்று திருத்தச் சட்டமூலங்களை தனிநபர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தீர்மானித்து அது தொடர்பான சட்டமூல வரைபுகளை 22-01-2025அன்று அவர் பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.
அதன்படி 1989ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மாகாண சபைகள் (விளைவாந்தன்மையான ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துவதற்கான சட்டம், 1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தை திருத்துவதற்கானதொரு சட்டம் மற்றும் 1992ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க தத்துவஙகள் கைமாற்றல் (பிரதேச செயலாளர்கள்) சட்டத்தை திருத்துவதற்கானதொரு சட்டம் ஆகியவற்றின் வரைபுகளையே அவர் கையளித்துள்ளர்.
இலங்கையில் ஏற்பட்ட இனச்சிக்கல்களின் தீர்வுக்காக அதியுச்சமாக ஆயுதரீதியான இயக்கங்கங்கள் தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்த தருணத்தில் 1987ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலும் கைச்சாத்திடப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையில் மாகாண சபை முறைமை ஸ்தாபிக்கப்பட்டது.
அதை அடுத்து இலங்கையில் மாகாண சபைகளை ஸ்தாபிப்பதை உறுதிப்படுத்தும் சட்டங்களுடன் 13ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பாராளுமன்றத்தினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் கீழ் பட்டியலிடப்பட்டிருக்கின்ற யாப்பு ரீதியிலான விதிமுறைகளுக்கு அமைய மாகாணசபை முறமையுடன் தொடர்புபட்ட கட்டமைப்புகள் செயற்பாடுகள் நடைமுறைகள் தொடர்பான ஏற்பாடுகள் ஆகியவற்றை உள்வாங்கப்பட்ட 1977 ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க மாகாண சபை சட்டமூலம் காணப்படுகின்றது.
இத்தழுவுதலின் விளைவாக 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் இலங்கை அரசியல் யாப்பின் கட்டாய அங்கமாக உள்வாங்கப்பட்டிருப்பதோடு, இதனால் மாகாண சபையானது அரசியலமைப்பு ரீதியான அதேநேரத்தில் அரசியல் நம்பிக்கை தன்மையை பெற்றுக்கொண்டிருக்கின்ற அதேவேலை 1988ஆம் ஆண்டு முதல் இலங்கை நிர்வாக செயற்;பாட்டின் இரண்டாவது அடுக்காக செயற்பட்டு வருகின்றது.
அதுமட்டுமன்றி, மாகாணசபை முறைமையானது, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலும் அதிகாரப்பகிர்வுக்கு தேவையான அத்தியாவசிய கருவியாகவும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றது. உண்மையில் முதலமைச்சர்களின் மகாநாட்டின்போதும் மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் கோரப்பட்டு இருக்கின்றது. ஆகையால் இலங்கையின் தரமான இரண்டாம் நிலை நிர்வாக கட்டமைப்பாக பரிநமிப்பதற்காக அர்தபுஷ்டியான எதிர்கால அதிகாரப்பகிர்வின் விதிமுறைகளை உருவாக்க மாகாண சபை முறைமையினை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.
இவ்வாறான நிலையில், அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டம் கடந்த மூன்று தசாப்த காலத்தில் பல்வேறு திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக நீடித்து வருகின்றது. எனினும் இதில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரப்படுகின்ற திருத்தங்கள் சம்பந்தமாக இனங்களுக்கு இடையிலும், அரசியல் தரப்புக்களுக்கு இடையிலும் கருத்தியல் ரீதியான ஒற்றுமை காணப்படவில்லை.
இவ்வாறான நிலையில் சிக்கல்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளான 13ஆவது திருத்தச்சட்டத்தினை திருத்துவதென்ற தவறான பார்வையைக் தற்போது கொள்ளவேண்டியதில்லை என்பது இங்கு மிகவும் முக்கியமான விடயமாகும் என்பதோடு, நிருவாக ரீதியான குறைபாடுகளை மேம்படுத்தும் முகமாக 1989ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தினை திருத்துவதன் ஊடாக நிருவாக ரீதியான சில சிக்கல்களை களைய முடியும் என்ற கருத்துக்கள் பொதுத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் தான் வன்டெக்ஸ்; இன்னிஷியேற்றிவ் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரிடத்தில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை நடத்தியது. இந்தக்கலந்துரையாடல்களின் பலனாகவே 1989ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மாகாண சபைகள் (விளைவாந்தன்மையான ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துவதற்கான சட்டம் தற்போது முன்னெடுக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில், முதன்மைச் சட்டவாக்கத்தின் 2 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் ‘பணியின் அத்தகைய தத்துவம், அரசியலமைப்பின் 154 (எ) (8) ஆம் உறுப்புரையினால் ஏற்பாடுசெய்யப்பட்டவாறாக அந்த மாகாணத்தினுள் இடைநிறுத்தப்படுதல் வேண்டு மென்பதுடன், செயற்படாதிருத்தலும் வேண்டும்’ என்னும் சொற்களை அப்பிரிவின் இறுதி வாக்கியத்தில் இடுவதன் மூலம் திருத்தப்படுகின்றது.
முதன்மைச் சட்டவாக்கத்தின் 2 ஆம் பிரிவின் (1) (அ) மற்றும் (1) (ஆ) ஆகிய உட்பிரிவுகள் (அ) (1) (அ) ஆம் உட்பிரிவில், ‘ஒரு மாகாணத்தின் ஆளுநர் ஒருவருக்கான அல்லது அத்தகைய மாகாணத்தின் அமைச்சரவையின் அமைச்சருக்கான குறிப் பொன்றை உள்ளடக்குவதாகக் கருதப்படுதல்’ என்ற சொற்களுக்குப் பதிலாக ‘ஒரு மாகாணத்தின் ஆளுநருக்கு அல்லது அத்தகைய மாகாணத்தின் அமைச்சரவை யின் அமைச்சருக்கான குறிப்பொன்றாக பொருள்கொள்வதாகக் கருதப்படுதல்’ என்ற சொற்களை இடுவதன் மூலம் திருத்தப்படுகின்றது.
அதேபோன்று, (ஆ) (1) (ஆ) ஆம் உட்பிரிவில், ‘மாகாண அரசாங்க சேவை அலுவலருக்கான குறிப்பொன்றை உள்ளடக்குவதற்கு கருதப்படுதல்’ எனும் சொற்களுக்கு, ‘மாகாண அரசாங்க சேவை அலுவலருக்கான குறிப்பொன்று என பொருள்கொள்வதாகக் கருதப்படுதல்’ எனும் சொற்களை இடுவதன் மூலம் திருத்தப்படுகின்றது.
முதன்மைச் சட்டவாக்கத்தின் 2 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவு, ‘அந்த விடயம் குறித்தொதுக்கப்பட்ட அந்த மாகாணத்தின் ஆளுநரால் அல்லது அந்த மாகாணத்தின் அமைச்சரவையின் அமைச்சரால் பிரயோகிக்கப்படுதல் வேண்டும்’. என்பதுடன், இதன்படி, ஒரு ‘அமைச்சருக்கு’ அந்த தத்துவத்தை அளிக்கும் சட்டத்தின் ஏதேனும் ஏற்பாட்டிலுள்ள குறிப்புகள், அந்த விடயம் யாருக்கு குறித்தொதுக்கப்பட்டதோ அந்த மாகாண ஆளுநர் அல்லது மாகாண அமைச்சரவையின் அமைச்சருக்கான குறிப்பொன்றை உள்ளடக்குவதற்கான தென்று கருதப்படுதப்படுல் வேண்டும்’ என்னும் சொற்களுக்குப் பதிலாக ‘அந்த விடயம் யாருக்கு குறித்தொதுக்கப்பட்டுள்ளதோ, அந்த மாகாணத்தின் அமைச்சரவையின் அமைச்சரால் புரியப்படுதல் வேண்டும், என்பதுடன் இதன்படி, ஒரு ‘அமைச்சருக்கு’ அந்த தத்துவத்தை அளிக்கும் சட்டத்தின் ஏதேனும் ஏற்பாட்டிலுள்ள குறிப்புகள், அந்த விடயம் குறித்தொதுக்கப்பட்டுள்ள அந்த மாகாணத்தின் அமைச்சரவையின் அமைச்சருக்கான குறிப்பொன்றாக பொருள் கொள்ளப்படுவதாக கருதப்படுதல் வேண்டும் என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.
இத்திருத்தங்கள் உண்மையில் மாகாண சபையின் நிருவாகத்தில் காணப்படுகின்ற சில குழப்ப நிலைகளை முடிவுக்கு கொண்டுவருவதையே நோக்கமாக் கொண்டிருக்கின்றது.
இந்தத் திருத்தங்களுக்கான முன்மொழிவை தனிநபராக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்திருந்தாலும், வெறுமனே அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் சென்று கையாளப்பட வேண்டியதொரு விடயமாகின்றது.
ஆட்சி அமர்ந்திருக்கின்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமானது, இத்திருத்தங்கள் பற்றிய கட்சிமட்டக்கலந்துரையாடல்களின்போதும் முன்மெழிவுகளின் வரைவுகளை சமர்ப்பித்ததன் போதும் எதிர்ப்புக்களை வெளியிட்டிருக்கவில்லை என்பது மிக முக்கியமான விடயமாகின்றது.
அதேபோன்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியாக இருந்தாலும் சரி, ஏனைய எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் சரி குறித்த திருத்தங்களுக்கான வரைவுகளை கையளித்து உரையாடியபோது எதிர்மறையான பிரதிபலிப்புக்களைச் செய்திருக்கவில்லை.
ஆகவே, மாகாண சபையின் வினைத்திறனான நிருவாகச் செயற்பாடுகளை ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளும், சிறுபான்மை தேசிய கட்சிகளும் எதிர்பார்த்திருக்கின்றன.
அந்த அடிப்படையில் குறித்த சட்டத்தினை திருத்துவதற்கான மேற்படி முன்மொழிவை எதிர்ப்பதற்கு எந்தவொரு தரப்பிற்கும் தற்போதைக்கு காரணங்கள் கிடையாது. அவ்விதமான சூழலில் குறித்த வரைவினை மேலும் செம்மைப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுமாக இருந்தால் அதனை உரையாடல்கள் ஊடாக மேற்கொள்ள முடியும். அதற்கான நெகிழ்வுத் தன்மையான சூழல்களும் தாராளமாகவே உள்ளன.
அவ்விதமானதொரு பொன்னான சந்தர்ப்பத்தில் மேற்படி 1989ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தினை திருத்துவதற்கான சகவிதமான ஒத்துழைப்புக்களையும் கட்சிபேதமின்றி அனைவரும் வழங்குவதே நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்துக்கான பங்களிப்பை மாகாண சபைகள் வழங்குவதற்கு இன்றியமையாததாக இருக்கும்.
#ProvincialCouncilsAct #AmendmentAct #SriLankaPolitics #DayasiriJayasekara #Parliament #DevolutionOfPower #LocalGovernment #ConstitutionalReform #EthnicConflictResolution #IndiaSriLankaAgreement #PoliticalParties #AdministrativeProcedure #PowerSharing #Governance #PublicPolicy