13ஐ தவிர்த்தால் எதிர்காலம் என்ன?

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா இனிமேல் பேசாது விட்டால் அதனால் பெருமளவுக்கு மகிழ்ச்சியடையக்கூடிய ஒருவராக நானே இருப்பேன் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ‘எக்ஸ’ தளத்தில் பதிவிட்டுள்ளமையானது தற்போது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தனது எக்ஸ் தளத்தில் ‘மூன்று வருடங்களில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் வரை மாகாண சபைகள் முறை தொடர்ந்து இருக்கும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறிக்கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. மாகாணசபை தேர்தல்களை நடத்தி 13ஆவது திருத்தத்தை சாத்தியமானளவு அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் அது விடயத்தில் ஓரளவு நம்பகத்தன்மையைப் பெறமுடியும்’ என்று பதிவொன்றைச் செய்திருந்தார்.

அத்தோடு ‘மாகாணசபை முறையையோ அல்லது 13ஆவது திருத்தத்தையோ இல்லாமல் செய்வதற்கு இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்று வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள் இது வரையில் நம்பிக்கை வைத்திருக்கக் கூடும். ஆனால், அண்மையில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்ற ஜனாதிபதி அநுராகுமார திசாநாயக்கவுடன் பேச்சு வார்த்தைகளை நடத்திய பிறகு அவருடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13ஆவது திருத்தத்தை பற்றி எதையுமே கூறுவதை தவிர்த்தார். இதன் மூலமாக கூறப்பட்ட செய்தியை தமிழ்க்கட்சிகள் விளங்கிக் கொண்டிருக்கின்றனவோ தெரியவில்லை என்றும் வீரகத்தி தனபாலசிங்கம் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு தனது ‘எக்ஸ்’ தளத்தின் ஊடகப் பதிலளித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்,

‘தமிழ் மக்களின் சார்பிலேயே இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையில் இந்தியா கைச்சாத்திட்டது என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். சமாதான உடன்படிக்கையில் தமிழர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் வரை தமிழ் மக்கள் சார்பில் தலையீடு செய்வதற்கான கடமைப்பாடு இந்தி யாவுக்கு உண்டு என்று நான் நினைக்கிறேன்.

ஆனால், இன்றைய சூழ்நிலையில் சமாதான உடனபடிக்கை பொருத்த மற்றது என்று இந்தியாவே உணருமானால், அது முற்றுமுழுதாக வேறுவிடயம். நாங்கள் விரைவாக சிறந்த ஒரு தெரிவை கண்டறிய முடியும்.

ஒற்றையாட்சி அரசின் கீழ் எந்த அதிகாரப்பரவலாக்கமும் சாத்தியமில்லை என்று நீதிமன்றங்கள் திரும் பத்திரும்ப கூறியிருக்கும்போது 13ஆவது திருத்தத் தின் நடைமுறைப்படுத் தல் எவ்வாறு நடக்கமுடியும் ? அதனால் 13ஆவது திருத்தம் இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வின் தொடக்கப்புள்ளியாகக்கூட ஒருபோதும் இருக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ‘ஒற்றையாட்சியின் கீழ் எந்த அதிகாரப்பரவலாக்கத்துக்கும் இடமில்லை என்று நீதிமன்றங்கள் திரும்பத்திரும்ப கூறியிருக்கும்போது 13 வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் எவ்வாறு இடம்பெறும் என்பதை கூறுங்கள். அரசியல் தீர்வுக்கான தொடக்கப்புள்ளியாகக் கூட அந்த திருத்தம் ஒருபோதும் இருக்கமுடியாது.  அதைப்  பற்றி பேசுவதை இந்தியா நிறுத்தினால் மிகுந்த மகிழ்ச்சியடையும் ஒருவனாக நான் இருப்பேன்’ என்றும் அவா கூறியுள்ளார்.

‘இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையில் தமிழர்களின் சார்பில் இந்தியா கைச்சாத்திட்டது என்பது முக்கியமானது. அந்த உடன்படிக்கையில் தமிழர்களுக்கு நம்பிக்கை இருக்கும் வரை அவர்களின் சார்பில் தலையீடு செய்யவேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு என்று நான் நினைக்கிறேன்.  ஆனால், இன்றைய சூழ்நிலையில் பொருத்தமற்றது என்று இந்தியா உணருகின்றது என்றால் அது முற்றுமுழுதாக வேறு விடயம். எவ்வளவு விரைவாக அதை நாம் அறியமுடியுமோ அவ்வளவுக்கு அது நல்லது’ என்று அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இப்பதிவு 13 வது திருத்தம் பற்றி இந்தியா இனிமேலும் பேசுவதை அவர்  விரும்பவில்லை என்பதை காட்டுகிறது. அதேவேளை சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கான தமிழர்களின் கோரிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்கிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்த கஜேந்திரகுமார், அரசாங்கம் கொண்டுவரக்கூடிய புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சிமுறைக்குள்  தமிழ் மக்களின் அபிலாஷைகள்  கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதை  இந்தியா உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அதுமட்டுமன்றி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்குச் செல்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியனுப்பிய கடிதத்தில், ‘எதிர்காலத்தில் இலங்கை நன்றாக இருக்க வேண்டுமானால், நாட்டின் கொள்கைகள் நன்றாக இருக்க வேண்டும். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்டு 36 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இலங்கையின் நிலைமை அன்றைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் மோசமடைந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ’13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், ஒற்றையாட்சி அரசியலமைப்பு இருக்கும் வரை அந்தத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது அல்லது சுயநிர்ணய உரிமையைப் பெறுவது கடினமாக இருக்கும் என்பதால், 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ள இலங்கைத் தமிழ் மக்கள் பெரிதும் தயாராக இல்லை. இது தொடர்பாக 30க்கும் மேற்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் கையகப்படுத்தியமையே இதற்குக் காரணம். இந்த நிலைதான் அதிகாரப் பகிர்வுக்கு முக்கியத் தடையாக உள்ளது’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே ‘இலங்கை ஒற்றையாட்சிக் கருத்தைக் கைவிட்டு தமிழ் மக்களை உள்ளடக்கிய சமஷ்டி அரசியலமைப்பை தயாரிப்பதற்கு , ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்துமாறும், அதுவே தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாக இருக்கும்’ என்றும் கோரியிருந்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

கஜேந்திரகுமாரின் இந்த விருப்பத்தையும் கோரிக்கையையும் வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல அனைத்து விடுதலையை நோக்கும் தமிழர்களில் எவர்தான் எதிர்க்கப்போகிறார்? ஒற்றையாட்சி நீக்கப்பட்டு இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான  அரசியல் தீர்வு கிடைக்கும் என்றால் அதை விடவும் இலங்கை தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு என்ற இருக்கப்போகிறது?

ஆனால், தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமான நிலைமைகள் பற்றி ஆராய்வது தான் பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கின்றது. வடக்கு,கிழக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவீனமடைந்த நிலையில் தமக்குள் பிளவுபட்டு சந்திசிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இப்படியானதொரு தருணத்தில் 13ஆவது திருத்தத்தைக் கூட இதுகாலவரை நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் இலங்கை அரசாங்கங்களிடம் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வி காணப்படுகின்றது.

ஒருதடவை கஜேந்திரகுமார் உள்ளிட்ட தமிழ்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்த போது  இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மேற்படி விடயத்தினை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தார். ஆகவே சாத்தியமான வழிகளையே கையாளுமாறும் கோரியிருந்தார்.

அப்போது கஜேந்திரகுமாரால் 13ஐ கடந்து சமஷ்டிக்கான சாத்தியப்பாடுகள் குறித்து பதிலுரைத்திருக்க முடிந்திருக்கவில்லை. இராஜதந்திர சந்திப்புக்களின் அவ்வளவு கால அவகாசம் இருப்பதில்லை என்பது நியாயமானது தான்.

ஆனாலும், சமகால தமிழர் அரசியல் சூழலின் தன்மையை உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. நடைபெற்று நிறைவடைந்த தேர்தல்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ் மக்கள் தமிழ்க் கட்சிகளிடமிருந்து தூர விலகிக்கொண்டிருக்கிறார்கள் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

ஐக்கியப்பட்டு செயற்படாத காரணத்தினால் தான் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்க்கட்சிகளை தமிழர்கள் வெறுத்ததாக அவற்றின் தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது மாத்திரம் காரணமல்ல. போரின் முடிவுக்கு பின்னரான காலகட்டத்தில் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு நடைமுறைச் சாத்தியமானதும் விவேகமானதுமான அணுகுமுறைகளை தமிழ்க்கட்சிகள் கடைப்பிடிக்காமல் வெறுமனே தமிழ்த் தேசியவாத சுலோகங்களை உணர்ச்சிகரமாக உச்சரித்துக் கொண்டிருந்தமையும் தான் மிக முக்கியமான காரணமாகின்றது.

புலம்பெயர் தரப்பினரின் குறிப்பிட்ட தரப்பினரும், கஜேந்திரகுமார் தரப்பும் மட்டும் நடைமுறைக்கு அப்பாலமான கோட்பாட்டுக் கோரிக்கையை முன்வைப்பதானது, இனப்பிரச்சினையை தீராப் பிரச்சினையாக நீடித்துக்கொண்டிருப்பதற்கே வழிசமைப்பதாக இருக்கும்.

அதுமட்டுமன்றி, மூன்று வருடங்களுக்குப் பிறகு அநுர அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பு எவ்வாறிருக்கும் என்பதே தெரியாதுள்ள நிலையில், அந்த அரசியலமைப்புக்கு முன்னதாக அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற ஆகக்குறைந்த அதிகாரப்பகிர்வு முறைமையில் தவறேதும் இருக்கப்போவதில்லை.

மாறாக, அதிகாரப் பகிர்வு விடயத்தில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் ஒத்துழைப்பையும் அதன் ஊடாக பரீட்சித்துப்பார்ப்பதற்கான வாய்பொன்றாகவே அமையப்போகின்றது. ஆகவே, அரசியலமைப்பில் இருக்கும் 13ஐ புறமொதுக்குவதென்பது இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப்பகிர்வுக்கான இயல்பான விருப்பமின்மையை அங்கீகரிப்பதாகவே அமையும்.