இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல்வேறு விடயங்களைத் தெரிவித்திருந்தாலும், ‘இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், எங்கள் நிலத்தை எந்த வகையிலும் பயன்படுத்த, எவரையும் அநுமதிக்கமாட்டோம்’ என்ற கூற்றுத் தான் இந்திய, சர்வதேச ஊடகங்களின் பிரதான தலைப்பாக மாறியிருந்தது.
இதுபுதியதொரு விடயமல்ல. ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் காலத்தில் இருந்து இலங்கையின் அனைத்து அரச தலைவர்களும் இவ்வாறான கூற்றையே டில்லிக்கு விஜயங்களை மேற்கொள்ளும் போது பொதுவெளியிலும், இந்தியப்பிரதமர் உள்ளிட்ட இராஜதந்திரிகளிடத்திலும் கூறுவது வழக்கம்.
கோட்டாபய ராஜபக்ஷகூட, இக்கூற்றை பகிரங்கமாகவும், இரகசியமாகவும் கூறுவதற்கு தவறியிருக்கவில்லை என்பது இங்கே முக்கியமானதொரு விடயமாகின்றது.
முன்னதாக, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அநுரகுமார செல்வாக்குமிக்க வேட்பாளராக மாறி வருகிறார் என்பதை ஆராய்ந்து அறிந்து கொண்ட இந்தியா அவரை உடனடியாகவே அழைத்து வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கரைச் சந்திக்கச் செய்திருந்தது.
அந்தச் சந்திப்பின் போதும் கூட, அநுரகுமார திசாநாயக்க இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கையினால் ஆபத்து ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என்பதையே வலியுறுத்தியிருந்தார்.
அந்தக் கருத்து அநுரகுமாரவுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடுகளில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இதன்பின்னர் மீண்டும் பிரதமர் மோடியுடன் டில்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அதேகருத்தையே வெளிப்படுத்தியுள்ளார்.
உண்மையில் அநுரகுமாரவின் இந்தக் கருத்தானது, இந்தியா தன்மீதான அழுத்தங்களை குறைப்பதற்காகவும், எதிர்கால நெருக்கடிகளைத் தவிர்த்து ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்காகவும் முன்வைக்கப்பட்டதொரு விடயமாகும்.
ஆனால் இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்திய பவுண்டேசனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் ‘தி ஹிந்து’ ஊடகவியலாளர் ஆய்வுக்கப்பல்களுக்காக இலங்கை விதித்திருந்த தடை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும் என்று வினவியபோது எவ்விதமான உறுதியான பதில்களும் முறையாக அளிக்கப்படவில்லை.
வழக்கப்போலவே ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வருகை தருவது தொடர்பில் சீரான முறைமையையும், வெளிப்படைத்தன்மையையும் பேணுவதற்கான பொறிமுறையை அமைப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சீனாவின் ஆய்வுக்கப்பல்கள் மட்டுமல்ல அனைத்து ஆய்வுக்கப்பல்கள் குறித்தும் ஆழமான கரிசனைகளின் பின்னரேயே எதிர்காலத்தில் அனுமதி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஆகவே புதிய அரசாங்கத்தினரின் வாக்குறுதிகளும், உறுதிப்பாடுகளும், நாடுகளை கையாளும் புதிய அணுகுமுறைகளையும் ஆராய்வதற்கு இன்னமும் காலம் தேவையாக இருக்கின்றது.
இருப்பினும் சீனாவின் ஆய்வுக்கப்பல்கள் மட்டுமல்ல, சீனாவை சார்ந்த விடயங்களில் , முன்னைய ஆட்சியாளர்களின் தீர்மானங்கள், இந்தியாவை திருப்திப்படுத்தியதாக இல்லை.
குறிப்பாக, போர் நிறைவடைந்ததன் பின்னரான நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தான், சீனா வலுவாக காலுன்றத் தொடங்கியது. முதலில் தாமரைக் கோபுரம், தாமரை மண்டபம், மத்தள விமான நிலையம், துறைமுக அபிவிருத்தி நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் என்று சீனாவின் பெரு முதலீடுகள் தீவிரமடைந்தன.
அதுமட்டுமன்றி, சீன நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத்துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கும் சுதந்திரமாக தங்கிச் செல்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டதோடு கொழும்புத்துறைமுகத்தின் சீன நிதியுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட முனைத்துக்குள் சீன கப்பல்கள் விஜயம் செய்வதற்கு தாராளமான இடமளிக்கப்பட்டது.
இந்த நிலைமைகள் தான் ராஜபக்ஷக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்பட்ட நல்லுறவினை வெகுவாகப் பாதித்தது என்று கூறப்பட்டது. ராஜபக்ஷக்களின் பின்னர் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த மைத்திரி-ரணில் கூட்டு அரசின் காலத்தில் சீன முதலீடுகுளை பரிபாலனம் செய்வதில் நெருக்கடியான நிலைமைகள் தீவிரமடைந்தன.
இதன்காரணமாக, அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. சீனாவுக்கு குறித்த துறைமுகம் வழங்கப்பட்டுள்ளமையும் தற்போது அங்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை சீனா முன்னெடுக்க இருப்பதும் இந்தியாவுக்கு ஒரு நீண்ட கால அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் உருவெடுத்துள்ளது.
அத்தகைய அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கணித்து, அதனை தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும், இந்தியா அதனை பயன்படுத்திக் கொண்டிருக்கவில்லை. இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு தலைவர்களும், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடிய செயல்களை அனுமதிக்கமாட்டோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதன் பின்னர் தான் அம்பாந்தோட்டை நிகழ்வு அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறன நிலையில் இடதுசாரத்துவ சிந்தனையுள்ள மக்கள் விடுதலை முன்னணி முன்னைய அரசாங்கங்களை விட, சீனா விடயத்தில் மென்போக்கை கடைபிடிக்கும் என்பது அனுமானமாக உள்ளது.
இன்னமும் அநுரகுமார திசநாயக்கவோ அல்லது இலங்கையின் வேறு முக்கியமான அமைச்சர்களோ சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை சீனாவுடன் உயர்மட்ட பேச்சுக்களை நடத்தவும் இல்லை.
அவ்வாறான பேச்சுக்கள், சந்திப்புகள் நடக்கின்ற போது தான், சீனாவை இந்த அரசாங்கம் எவ்வாறு கையாள போகிறது என்பது தொடர்பான தெளிவான ஒரு வரைபடம் கிடைக்கும்.
இத்தகைய சூழல்கள் இருப்பதால்தான், ஒவ்வொருமுறை பதவிக்கு வரும் அரசாங்கத்திடம் இருந்தும் இந்தியாவின் நலன்களை பாதுகாக்கின்ற உத்தரவாதங்களை பெற்றுக் கொள்வதற்கு டிடெல்லி விரும்புகிறது .
அதனையும் தாண்டி, நடக்கின்ற விவகாரங்களை அது தனது மேலாதிக்க பலத்தைக் கொண்டு சமாளித்துக் கொள்கிறது. குறிப்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழத்துடனான சீனாவின் உடன்பாடு, வடக்கின் மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்படவிருந்த புதுப்பிக்கசக்தித் திட்டம் ஆகியவற்றை குறிப்பிட முடியும்.
கடந்த காலங்களைப் போலவே, எதிர்காலத்திலும் நிகழுமா இல்லையா என்பது எதிர்வு கூறக்கூடிய விடயம் அல்ல. ஆனால் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறுகின்ற போது – எதிர் கொள்ளக்கூடிய சிக்கல்களை புரிந்து வைத்திருக்கும்.
அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம், ஏற்கனவே சீன சார்பு முத்திரையுடன் இருக்கின்ற சூழலில், இந்திய நலன்களுக்கு விரோதமாக செயல்படுகின்ற நிலை அவதானிக்கப்படுமேயானால், அதனை டில்லி சகித்துக் கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்க முடியாது.
இத்தகைய சூழலில், இலங்கையின் புதிய அரசாங்கம் இந்தியா தொடர்பாக, அதற்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் தொடர்பாக, மிக கவனமாக நடந்து கொள்ள முற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனாலும், அநுரகுமார திசாநாயக்க இந்தியாவில் நிற்கும்போதே இரண்டு குழுவினர்கள் இலங்கiகு வருகை தந்து பிரதமர் உள்ளிட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைவிடவும், சீனக் கடற்படைக்குச் சொந்தமான மருத்துவக் கப்பலொன்று கொழும்புக்கு வருகை தரவுள்ளது. இது ஏழுநாட்கள் தங்கியிருக்கப்போகின்றது.
இதற்கு முன்னதாக, 20ஆம் திகதி வருகை தருகின்ற இந்தியாவின் கடலோரப் பாதுகாப்பு கப்பல் இவ்வாறு வருகை தவருதானது அநுர அரசுக்கும், சீனாவுக்கும் சொல்லும் செய்தியாகும்.
ஆகவே ஆய்வுக்கப்பல்கள் சம்பந்தமாக அரசாங்கம் அவசரமாக தீர்மொன்றை அறிவிக்க வேண்டியது இன்றிமையாதது..