தேசிய இனப்பிரச்சினையும் மோடி-அநுர கூட்டறிக்கையும்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிப் பீடத்தில் அமர்ந்ததன் பின்னர் முதலாவது வெளிநாட்டு விஜயத்தினை நிறைவு செய்துள்ளார். அநுரகுமார தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்துக்காக அயல்நாடான இந்தியாவையே தெரிவு செய்துள்ளார்.

அநுரவின் இந்தத் தெரிவுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்தியா பிராந்தியத்தில் முதன்மை நாடாக இருக்கின்றது. இலங்கையின் நெருக்கடிகளுக்கும், கடன் மறுசீரமைப்புக்கும் அதிகளவில் பங்களிப்புச் செய்த நாடாக இருக்கின்றது.

அதுமட்டுமன்றி, அநுர ஆட்சி;ப் பீடம் ஏறியதன் பின்னர் அவர் தலைமையிலான அரசாங்கம் ‘சீனா’ சார்புடையதாக மாறிவிடும் என்ற எதிர்வுகூறல்களே அதிகமாகக் காணப்பட்ட நிலையில் அதனை மாற்றியமைத்து நடுநிலையாக இருப்பதை வெளிப்படுத்த வேண்டிய தேவை அநுரகுமாரவுக்கு உள்ளது.

தனது ஆட்சியை குழப்பங்களின்றி முன்னெடுத்துச் செல்வதற்கும், பொருளாதார மீட்சிக்கான ஒத்துழைப்புக்களை மேலும் வலுத்துக்கொள்வதற்கும் இந்தியாவின் பங்களிப்பு இன்னியமையாதவொரு விடயமாக காணப்படுகின்றது என்பதும் அநுரவுக்கு நன்கு தெரியும்.

ஆகவே தான் அநுர இந்தியாவுக்கான முதலாவது விஜயத்தினை தெரிவு செய்திருந்தார். அதுமட்டுமன்றி, ஜே.வி.பி.க்கு எப்போதுமே இந்தியாவின் மீது எதிர்மறையான நிலைப்பாடே இருக்கின்றது என்ற பிம்பத்தையும் போக்க வேண்டிய தேவையும் அக்கட்சியின் தலைவர் என்ற வகையில் அநுரவுக்கு அதிகமாகவே உள்ளது.

அதேபோன்று இந்தியாவுக்கும் ஜனாதிபதி அநுரவை தமது பக்கம் வளைத்துக்கொள்வதற்கான தேவைகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக, தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல், சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்தல், தங்களது முதலீடுகளை தங்குதடைகளின்றி முன்னெடுத்துச் செல்லல் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளன.

ஆகவே அநுரவை தமது நாட்டுக்கு அழைத்து அவரை கவர்ந்திழுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகியவற்றுக்கான முறையாக நகர்வுகளைச் செய்ய வேண்டியது இந்தியாவின் மிக முக்கியமானதொரு விடயமாகவே இருக்கின்றது. அந்த வகையில் தான் இந்தியா அநுரவின் விஜயத்தை மிகக் கவனமாக கையாண்டது.

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு முதல் பிரதமது நரேந்திர மோடி உள்ளிட்ட பல தரப்பட்டவர்களும் ஜனாதிபதி அநுரவைச் சந்தித்திருந்ததோடு பெருமெடுப்பிலான விருந்துபசாரங்களையும், வரவேற்புக்களையும் வழங்கியிருந்தமையை கவனிக்கக் கூடியதாக இருக்கின்றது.

ஜனாதிபதி அநுரவின் இந்தியப் பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய இருதரப்பு பேச்சுக்களின் முடிவில், கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அந்தக் கூட்டறிக்கையில் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவோ, அதற்கான தீர்வு தொடர்பாகவோ எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. இது வழக்கத்துக்கு மாறானதொரு விடயம்.

இந்திய- இலங்கை தலைவர்களின் சந்திப்புகளின் போது, தமிழர் பிரச்சினை தொடர்பாகவும், அதற்கான தீர்வு தொடர்பாகவும் பேசப்படுவது என்பது இயல்பானதொரு விடயம்.

கடந்த பல சாப்தங்களாக இது நடந்து வந்திருக்கிறது.  குறிப்பாக இறுதிப் போருக்குப் பின்னரான காலத்தில் இந்தியாவின் இராஜதந்திரிகள் சர்வதேசத்தின் அனைத்து தளங்களிலும் இலங்கையில் தமிழர்கள் விடயத்தில் அர்த்தமுள்ளவகையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியே வந்திருக்கின்றார்கள்.

விசேடமாக, 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அமுலாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள்.

தமிழர் பிரச்சினையின் மீது இந்தியாவுக்கு இருந்து வரும் கரிசனையின் காரணமாகவும், இந்த பிரச்சினையின் முக்கியத்துவம் கருதியும், ஒவ்வொரு சந்திப்புக்களிலும் இது ஒரு பேசுபொருளாக இருந்திருக்கிறது.

ஆனால், இந்தமுறை நடந்த பேச்சுக்களில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான, விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக தென்படவில்லை.

இந்தியப் பிரதமருக்கும் அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடம்பெற்ற சந்திப்பின்போது, தேசிய இனப்பிரச்சினை பற்றி அதிகம் கவனத்தில் எடுக்காதமைக்கு காரணங்கள் இல்லாமில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கையில் தனது நலனை  நிலை நிறுத்திக் கொள்வதற்கு, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்துடன் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில், இருக்கிறது.

இப்போதைய அரசாங்கம் கடந்த காலங்களில் ஆட்சிப்பீடங்களில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்றோ அல்லது  ஐக்கிய தேசியக் கட்சி போன்றோ அல்லது அவற்றிலிருந்து பிரிந்துருவான ஸ்ரீல   ங்கா பொதுஜனபெரமுன போன்றோ இல்லை. அடிப்படையிலேயே மாறுபட்டதாகவே உள்ளது.

குறித்த தேசியக் கட்சிகள் மரபு ரீதியாக இந்தியாவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்லது நெகிழ்ச்சித் தன்மையுடன் இணங்கிச் செல்லக்கூடியவை. ஆனால் தேசிய மக்கள் சக்தி இந்தியவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இறுக்கமாக இருந்து வளர்ச்சி பெற்றதொன்றாகவே உள்ளது.

எனவே, அநுர தலைமையிலான அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் வரை, சர்ச்சைக்குரிய விடயங்களை தவிர்த்துக் கொள்வதற்கே, புதுடில்லி விரும்பியிருக்கக் கூடும்.

அதேவேளை, தமது முதற்பயணத்தின் போது வெளியிடப்படும் கூட்டறிக்கையில் சர்ச்சைக்குரிய விடயங்கள் இடம்பெறுவதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விரும்பாமல் இருப்பதை இந்தியா ஏலவே அறிந்து கொண்டிருக்கவும் கூடும்.

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான எந்தக் கருத்தையும் கூட்டறிக்கையில் உள்ளடக்கும் போது அதற்கு தெற்கில் உள்ள அரசியல் சக்திகள் எதிர்மறையான பிரசாரத்தை முன்னெடுக்கும் என்பது இந்தியாவுக்கும் தெரியும். தேசிய மக்கள் சக்திக்கும் தெரியும்.

எனவே, இந்தியாவுடனான பேச்சுக்களின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பான கூட்ட அறிக்கையில் அந்த விடயங்களை உள்ளடக்காது விடப்பட்டிருக்கின்றது என்பது வெளிப்படையான விடயமாகும்.

அதேநேரம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும்,  இணைந்து ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருந்தனர்.

அப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,  தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்று நம்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் இலங்கை  அரசாங்கம், அரசியலமைப்பினை முழுமையாக அமுல்படுத்தவும், மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்குமான உறுதிமொழியை  நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்திய பிரதமர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த இடத்தில் முக்கியமானதொரு விடயம் என்னவென்றால், 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அவர் எந்த கருத்தையும் பகிரங்கமாக வெளியிடவில்லை.

13ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவது தொடர்பாக இந்தியப் பிரதமர்  இப்போது வலியுறுத்தாமைக்கு, ஜே.வி.பி.அந்த திருத்தச்சட்டம் மீது கொண்டிருக்கின்ற எதிர்மறையான நிலைப்பாடும், தமிழர்கள் தரப்பில் அதிகளவு விருப்பு காணப்படாமையும் தான் காரணமாக இருக்கின்றது.

ஆனால் இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற  இந்தியப் பிரதமர் மோடியின் கூற்றானது, இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள விடயங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்பது தான். அதற்குள் 13ஆவது திருத்தச் சட்டமும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடதக்க விடயமாகின்றது.

இலங்கையின் அரசாங்கங்கள் தனது சொந்த நாட்டின் அரசியலமைப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில், இந்தியாவின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்ததாக வரலாறுகள் இல்லை.

அந்த வகையில் தற்போது அநுரகுமாரவும் இந்தியாவின் கூற்றை எவ்வளவு தூரம் பொருட்டாகக் கருத்திற் கொண்டு நடைமுறைப்படுத்துவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.

அதேநேரம், இலங்கை அரசாங்கங்களின் கடந்தகால தலைவர்களும் ஐ.நா.முதல் பல்வேறு நாடுகளுடன் கூட்டறிக்கைகளை வெளியிட்டுள்ள போதும் அவற்றை நடைமுறைப்படுத்துமளவிற்கு முயன்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.