இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் ஜனாதிபதி அநுரகுமாரவிற்கும் இடையிலான முதலாவது சந்திப்பு கடந்த 04ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
நடைபெற்று நிறைவடைந்துள்ள பொதுத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி எட்டு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி தமிழரசுக்கட்சி தான் அதிக ஆசனங்களைப் பெற்ற தமிழ்க் கட்சியாகவும் உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்து பின்னர் அது உடைவடைந்ததை அடுத்து தமிழரசுக்கட்சி முகங்கொடுத்த முதலாவது தேர்தலில் அதிகமான ஆசனங்களைப் பெற்று தமிழ் மக்களின் தாய்க்கட்சி என்ற வகிபாகத்தினை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டுள்ளதுர்.
இவ்விதமானதொரு நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைமைக்கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும், மாகாண சபை முறைமை அகற்றப்படும் என்ற கருத்தப்பட செவ்வியொன்றை வெளிப்படுத்தியிருந்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றபோது மேற்படி செயற்பாடுகள் இடம்பெறவிருப்பதை அவர் விபரமாக கூறாமையினால் அவரது கருத்துக்கள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியது.
இந்தியாவுக்கு உத்தியோக பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டு ஜனாதிபதி அநுர செல்வதற்கு முன்னதாக ரில்வினின் கருத்துக்கள் டில்லியின் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்றுணர்ந்தர் அநுரகுமார.
நிலைமையை சரிப்படுத்துவதற்கு அவர் முனைப்புக்களைச் செய்துகொண்டிருந்த போது, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், ஜனாதிபதியின் அக்கிராசன உரைமீதான விவாதம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி ரில்வியின் விடயத்தினை கேள்வியாக தொடுத்தார்.
தருணம் பார்த்திருந்த ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கத்தரப்பினருக்கு, சாணக்கியன் தொடுத்த கேள்வி பழும் நழுவி பாலில் விழுந்தது போலாகியது.
உடனடியாகவே சபைமுதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவதாகவும் அதன்போது குறித்த விடயத்தின் பின்னால் காணப்படுகின்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் கூறினார்.
அதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமாரவுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றிருந்தது. அதன் மூலமாக ரில்வினின் கருத்தால் சந்கேத்துடன் இருந்த டில்லிக்குச் சில செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.
படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது, அரசியல் கைதிகளின் விடுதலை, காணி அபகரிப்புக்களை நிறுத்துவது, பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக மற்றொரு சட்டமூலத்தைக் கொண்டுவருவது போன்ற விடயங்களையிட்டு அரசாங்கம் முதலில் கவனம் செலுத்தலாம். அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுதான் முதலாவதாக இருக்கின்றது.
அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் 2025 ஆரம்பத்தில் முன்வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்படும். உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அதனைக் காலம் தாழ்த்த முடியாது. ஆனால், அடுத்த வருட இறுதிப் பகுதியில்தான் மாகாண சபைகளுக்கான தேர்தலும் நடத்தப்படும்.
இவை அனைத்துக்கும் பின்னர்தான் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயல் முறையை அரசாங்கம் ஆரம்பிக்கும். மூன்று வருடங்களின் பின்னர்தான் இதற்கான செயல்முறை ஆரம்பமாகும் என்றும், புதிய அரசியலமைப்பு வரும்வரையில், மாகாண சபை முறை தொடரும் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டிருக்கின்றது.
சர்ச்சைக்குரிய விடயங்களில் அவசரப்பட்டு கை வைக்க அரசாங்கம் தயங்குகின்றதா என்ற கேள்வியை இது எழுப்புகின்றது. அதேவேளையில், இந்த அரசாங்கத்தின் ஐந்துவருட பவதிக் காலத்துக்குள் புதிய அரியலமைப்பு சாத்தியமாகுமா? என்ற கேள்வியும் இப்போது எழுகின்றது.
கடந்த கால உதாரணங்களை வைத்துப் பார்க்கும் போது இந்தக் கேள்வி தவிர்க்கமுடியாததாக உள்ளது. 1972 குடியரசு அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறை குறிப்பிடத்தக்க முயற்சிகளை உள்ளடக்கியது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 1970 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, புதிய அரசியலமைப்பை உருவாக்க அரசியல் நிர்ணய சபை ஒன்று கூட்டப்பட்டது. மே 22, 1972 இல் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இது கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் விவாதித்தது.
இதேபோலத்தான் ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1977 இல் பதவிக்கு வந்த உடனடியாகவே புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியை ஆரம்பித்துவிட்டார். ஒரு வருடத்தில் – அதாவது 1978 இல் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இதன்மூலமாகவே இலங்கையின் நிவேற்று அதிகார ஜனாதிபதியாக ஜெயவர்த்தன பதவியேற்றார். அந்த அரசியலமைப்புதான் இப்போதும் நடைமுறையில் உள்ளது.
2015இல் அதிகாரத்துக்கு வந்த மைத்திரி – ரணில் பதவிக் காலத்திலும் இவ்வாறு ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. 2015 முதல் 2019 வரை நான்கு வருடகாலமாக இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது முற்றுப்பெறவில்லை.
அரசாங்கம் ஒன்று பதவிக்கு வந்த உடனடியாகவே இவ்வாறான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். சிறிமாவோ பண்டாரநாயக்கவும், ஜெயவர்த்தனவும் அதிகாரத்துக்கு வந்த பின்னர் காலங்கடத்தாமல் அதற்கான முயற்சிகளை ஆரம்பித்தார்கள். ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் புதிய அரசியலமைப்பை அவர்களால் கொண்டுவர முடிந்தது.
அநுர அரசு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் மூன்று வருடங்களுக்குப் பின்னர்தான் ஆரம்பமாகும் என்று கூறியிருக்கின்றது. எந்தவொரு அரசாங்கமும் பதவிக்கு வந்து ஒரு வருடம் கடக்கும் போது புதிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற தோல்வியடைந்த சிங்கள தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தும் தலைவர்கள் மட்டுமன்றி, பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் கூட, இனவாதத்தை கைகளில் எடுக்கத் தயங்கமாட்டார்கள். இலங்கையின் கடந்த கால வரலாற்றில் இருந்து இதனைப் புரிந்துகொள்ளலாம்.
இந்த நிலையில், தமிழர்களுக்கு நியாயமான தீர்வைத் தரக்கூடிய அம்சங்களை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு சாத்தியமா? அடுத்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய காலமும் அப்போது வந்துவிடும். அந்த நிலையில், புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்காக சவால்களை அரசு கையில் எடுக்குமா? இது போன்ற கேள்விகள் உள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் உண்மையிலேயே புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு தேவையென்பதை ஏற்றுக்கொள்கின்றது. அதனைக் கொண்டுவருவதற்கும் தயாராக உள்ளது. ஆனால் மூன்று வருட காலத்தினைக் கோருகின்றது. இந்த இடைவெளி மிகவும் ஆபத்தானது.
இதற்குள் அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்தின் சூழ்ச்சியும் இருக்கலாம். அதாவது, குறித்த அரசாங்கம் இறுதித் தருணத்தில் புதிய அரசியலமைப்பு விடயததினைக் கையிலெடுத்துவிட்டு மீண்டும் தமது வாக்குவங்கியை நிரப்பிக்கொள்ள மடியும் என்று கணக்குப் போடுகின்றது.
ஆகவே தற்போதைய நிலையில் உள்ள தேவை, இலங்கைத் தமிழரசுக்கட்சியும், ஏனை இரண்டு உறுப்பினர்களுமாகச் சேர்ந்து நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் இரண்டையும் சமாந்தமாகக் கொண்டு செல்வதற்கான அழுத்தங்களை பிரயோகிக் வேண்டும்.
அவ்வாறு கொண்டு செல்வதன் ஊடாகவே பொருளாதார ரீதியாக நாடு முன்னேற்றத்தைக் காணுவம். அவ்வாறில்லாது நாட்டின் பொருளாதார நெருக்கடியும் கேள்விக்குள்ளாகும் அதேநேரம் இனங்களுக்கு இடையிலான தேசிய புரிதலும் ஏற்டபடுத்துவற்கு வாய்ப்புக்கள் இல்லாதே போகும்.