பாராளுமன்றத்தேர்தல் -2024; வடக்கு,கிழக்கு சொல்லும் செய்தி என்ன?

நடைபெற்று நிறைவடைந்துள்ள பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் பிரதிநிதித்துவ இழப்பினைச் சந்தித்திருக்கின்றன.

நாடாளாவிய ரீதியில் வீசிய தேசிய மக்கள் சக்தி  அலைக்குள்,  தமிழ் மக்களும்; அள்ளுண்டு போனதால் மாத்திரம், இந்தப் பின்னடைவு ஏற்பட்டது என்று மட்டும் கூறிவிட்டு நகர்ந்து சென்றுவிட முடியாது.

இந்தப் பிரதிநிதித்துவ இழப்பிற்கு ஒவ்வொரு தமிழ்த் தேசியத் தளத்தில் பயணிக்கின்ற கட்சிகளும் தங்களது பொறுப்புக்கூறலைச் செய்யத் தான் வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின், முடிவுகளைப் பார்க்கின்றபோது தேசிய மக்கள் சக்தி, அதிக வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளது.  சுயேட்சைக் குழுவொன்று கடுமையான போட்டி களத்தில், மிக இலகுவாக ஒரு ஆசனத்தை தட்டிச் சென்றிருக்கின்றது. 

தமிழ் மக்கள் ஒற்றுமையை விரும்புகின்றார்கள் என்று கூறிக்கொண்டிருந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினால் சோபிக்க முடியாமல் போயுள்ளது. அரசாங்கங்களை சார்ந்து இயங்கி வந்த டக்ளஸ் தேவானந்தா, முதல்முறையாக தோல்வியை சந்தித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 3, வன்னியில்  2 என- மொத்தம் 5 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியிருக்கிறது.

அதேவேளை, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈபிடிபி, சிறிலங்கா சுதந்திர கட்சி ஆகிய கட்சிகளிடம் இருந்த தலா ஒரு ஆசனமும், தமிழரசு கட்சியிடம் இருந்த  இரண்டு ஆசனங்களும்  பறிபோயிருக்கின்றன.

இழக்கப்பட்ட ஏழு ஆசனங்களில் 5 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்தியிடம் போயிருக்கிறது.  ஒன்று முன்னரே, ஆசன பகிர்மானத்தில்  பறிபோயிருந்தது. ஒரு ஆசனம், சுயேட்சைக் குழுவிடம் சென்றிருக்கிறது.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இலங்கை தமிழரசு கட்சி கடுமையான சவாலுக்கு மத்தியிலும், உள்ளக முரண்பாடுகளைத் தாண்டியும் 5 ஆசனங்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில், மூன்று ஆசனங்களை கைப்பற்றிக் கொண்டதும், அம்பாறை மாவட்டத்தில் இழக்கப்பட்டு விட்டதாக கருதப்பட்ட ஒரு ஆசனத்தை, காப்பாற்றிக் கொண்டதும்,  திருகோணமலை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை இழக்காமல் பாதுகாத்துக் கொண்டதும் அந்த கட்சியின் முக்கியமானதொரு நகர்வுக்கு கிடைத்த வெற்றியெனலாம்.

கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமது வாக்குகளை மிகவும் சாதுரியமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். திருகோணமலை மாவட்டத்தின்  தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, வீடு சின்னத்தில் போட்டியிடுவதற்கு முன்வந்திருந்தது.

இதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில், தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படாமல், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளால், ஒரு பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது.

அதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் தமிழர் பிரதிநிதித்துவம் பறிபோய் விடக் கூடாது என்பதற்காக, தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றுபட்டு போட்டியிடுவதற்கு பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதும், தமிழரசு கட்சி சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணங்கவில்லை.

அது பாரதூரமான தவறாக இருக்கும் என்றும், அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தை  இழக்கும் நிலைக்குள் தள்ளும் என்றும் கருதப்பட்டது. ஆனால், அங்குள்ள தமிழ் மக்கள் சாதுரியமான முறையில் தமது வாக்குகளை ஒரே கட்சிக்கு அளித்ததன் மூலம், தமிழரசு கட்சியின் சார்பில் மீண்டும் கோடீஸ்வரன் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

இந்த இரண்டு மாவட்டங்களிலும் தலா ஒவ்வொரு தமிழ் பிரதிநிதித்துவம், தமிழ் தேசிய கட்சிகளால் தக்க வைக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்த முறை நிலைமை மாற்றம் கண்டிருக்கிறது. கடந்த முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களை மாத்திரமே பெற்றிருந்த நிலையில், இந்த முறை மூன்று ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன.

தேசிய மக்கள் சக்தியின் கடுமையான சவாலுக்கு மத்தியில், அந்தக் கட்சியால் வெற்றி கொள்ளப்பட முடியாமல் போன ஒரேயொரு மாவட்டமாக, மட்டக்களப்பு மாவட்டம் அமைந்திருக்கிறது.

இங்கு தமிழ் தேசியக் கட்சிகள் தனித்தனியாக பிளவுபட்டு போட்டியிட்டிருந்தாலும், வாக்காளர்கள் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை மையப்படுத்தி வாக்களித்ததால், மூன்று ஆசனங்களை பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது.

கடந்த பாராளுமன்றத்தில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பாக 13 உறுப்பினர்கள் அங்கம் வகித்திருந்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 10 பேரும், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் ஒருவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சார்பில் 2 பேரும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்தார்கள்.

இந்தமுறை தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று பார்க்கும் போது, தமிழரசு கட்சியின் சார்பில் 8பேரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் ஒருவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சார்பில் ஒருவருமாக 10 பேரே பாராளுமன்றம் செல்கிறார்கள்.

இவர்களுடன் யாழ்ப்பாணத்திலிருந்து தேசிய மக்கள் கட்சியின் சார்பில்  வடக்கு,கிழக்கில் இருந்து 8 தமிழர்கள் பாராளுமன்றம் சென்றாலும், அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் இயங்குபவர்களாக இருப்பார்களே தவிர, தமிழ் தேசியம் சார்ந்து இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆனால், இந்த தேர்தல் 18 தமிழ் பிரதிநிதித்துவங்களை வடக்கு கிழக்கில் பெற்றுக் கொடுத்திருக்கிறது என்பது உண்மை. தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் ஆசனங்களை கைப்பற்றியதும், யாழ்ப்பாணத்தில் சுயேட்சை குழு ஆசனத்தை கைப்பற்றியதும் அவற்றின் மீதான விருப்பினால் இடம்பெற்றதென முற்று முழுதாக கருத முடியாது.

அதற்குப் பிரதான காரணம், தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் இருந்த ஒற்றுமையின்மையும், பிளவுகளும் தான். கடைசியாக ஜனாதிபதி தேர்தலின் போது, பொது வேட்பாளரை நிறுத்தி விட்டு, தமிழ்த் தேசியக் கட்சிகள் செய்த பல கோமாளித்தனங்கள் தமிழ் மக்களை வெறுப்படையச் செய்தது.

குறிப்பாக தமிழரசு கட்சியின் செயற்பாடுகளும், அந்த கட்சியின் உள்ளக முரண்பாடுகளும் மிக மோசமான. வெறுப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. சுமந்திரன் இந்த தேர்தலில் தோல்வியடைந்தமைக்கு பிரதான காரணம் அதுதான்.

2020 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 327,168 வாக்குகளைப் பெற்றிருந்தது.  ஆனால், இம்முறை தமிழ் அரசு கட்சியால் 257,813 வாக்குகளையே பெற முடிந்திருக்கிறது.

அந்த கட்சி தனித்து இந்தளவு வாக்குகளை பெற்றுக் கொண்டிருந்தாலும்-  இழக்கப்பட்ட ஒவ்வொரு வாக்குகளும் பெறுமதியானவை.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 2020 பாராளுமன்ற தேர்தலில், 112,967 வாக்குகளை பெற்றிருந்த போதும் , இந்த முறை தமிழ் அரசு கட்சிக்கு 63,327 வாக்குகளும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு 22,513 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன.

இது தவிர தமிழரசு கட்சியிலிருந்து வெளியேறி, மாம்பழம் சின்னத்தில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்ட சட்டத்தரணி தவராசா தலைமையிலான  அணி  7,496 வாக்குகளையும் பெற்றிருந்தது .

இந்த  மூன்று தரப்புக்களும் பிளவுபடாமல் இருந்திருந்தால் 92 ஆயிரம் வாக்குகளை இலகுவாகப் பெற்றிருக்க முடியும்.  இதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை கைப்பற்ற கூடிய வாய்ப்பு தவறவிடப்பட்டது.

அதுபோல, தமிழ்த் தேசியத்தின் பெயரால் சுயேட்சைக்  குழுக்களாக போட்டியிட்டவர்கள், தமிழ்த் தேசியத்தை மையப்படுத்தி அளிக்கும் வாக்குகளை பிளவுபடுத்தியதால் கணிசமான வாக்குகள் பயனற்றுப் போயிருக்கின்றன.

இவற்றையும் தாண்டி, தமிழ்த் தேசிய கட்சிகள் என்ற ரீதியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் தமிழ் மக்கள் கூட்டணியும் போட்டியிட்டிருந்தாலும் கூட, வடக்கில்  மிகப் பெரும் பலத்துடன் இருந்திருக்க முடியும்.

ஆனால், தமிழ்த் தேசியக் கட்சிகள் சுயநலனுக்காகவும் சொந்த முரண்பாடுகளுக்காகவும் இணங்கிப் போக மறுத்து அடம்பிடித்ததன் விளைவாக, பல கட்சிகள் ஓரங்கட்டப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த தேர்தலில் ஏற்பட்ட நிலைமையைப் புரிந்து கொண்டு அவர்கள் பொது நிலைப்பாடு ஒன்றின் ஊடாக, இணைந்து செயற்பட தவறினால் தமிழ் மக்கள் பிற தரப்புகளை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.