தேசிய இனப்பிரச்சினையை உள்ளடக்காத அக்கிராச உரை

புதிய பாராளுமன்றம் அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்ற போது மாத்திரமன்றி, பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுறுத்தப்பட்டு மீள ஆரம்பிக்கப்படுகின்ற போதும் கூட,  ஜனாதிபதிக்கு ஆரவாரங்களுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்படும் வழக்கமும் பல்வேறு சம்பிரதாய வரவேற்புகளும் கடந்த காலங்களில் கண்டிருக்கின்றோம்.

2015இல் ஆட்சிப்பீடம் ஏறிய மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தில் முதற்தடவiயாக அத்தகைய ஆடம்பரங்களற்ற நிலைமை ஆரம்பமானது. பின்னர் சில ஆடம்பரங்கள் தவிர்க்கப்படும் நிலை ஆரம்பித்தது.

அதன்பின்னர் 2019இல் கோட்டாபய ராஜபக்ஷ அவ்விதமாக தன்னையும் சித்தரிக்க முயன்றார். தனயொரு வாகத்திலேயே பாராமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.

ஆனால், அவருடைய ஆரம்பம் சரியாக இருந்தபோதும் அதன்பின்னரான சூழமைவுகள் சரியானவையாக இருக்காமையால் ஆட்சிப்பீடத்திலிருந்து விரட்டப்பட்டார்.

அவ்விதமான நிலையில் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுரகுமார திசாநாயக்க முதற்தடவையாக பாராளுமன்ற அக்கிராசன உரைக்காக கடந்த 21ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுக்க வருகை தந்திருந்தார்.

எந்தவிதமான பிரமாண்டமான வரவேற்பு அணிவகுப்புக்களும் இல்லாமல் தனியொரு வாகனத்தில் வருகை தந்திருந்த ஜனாதிபதி அநுர புதிய பாராளுமன்ற அமர்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார்.

அவரது பாராளுமன்ற பிரவேசமும், அங்குராட்பணமும் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வுகளாக தற்போது மாறியிருப்பதோடு மட்டுமல்ல முன்னுதாரணமாகவும் காணப்படுகின்றது.

அவ்விதமான நிலையில், அக்கிராசன உரையை ஆற்றிய அவர், இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை. எந்தவொரு மதவாதத்திற்கும் இடமில்லை.  நாட்டில் மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத, கோசங்களை கட்டியெழுப்ப எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென உறுதியளிக்கிறேன் என்று அவர் ஒரு விடயத்தை முன் வைத்திருக்கிறார்.

இனவாதம், மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என்பது வரவேற்கக் கூடிய ஒன்றே ஆனாலும், அதற்கான தெளிவான வரைவிலக்கணம் ஒன்று அவசியமானது. ஏனென்றால், கடந்த காலங்களில் இனவாத அரசியல் ஆட்சியாளர்களால் தான் பிரதானமாக முன் கொண்டு செல்லப்பட்டது.

சிங்கள பௌத்த பேரினவாதம்,  நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒன்றாக அரசாங்கங்களினால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.

தரப்படுத்தல் சட்டம், தனிச் சிங்கள சட்டம் போன்ற சட்டங்களின் ஊடாக, தமிழர்கள் ஓரங்கட்டப்படுவதில் தொடங்கிய அந்த இனவாத அரசியல், இனக்கலவரங்கள், இனப்படுகொலைகள், நிலஆக்கிரமிப்புகள் என்று நீண்டு சென்றது.

இந்த இனவாத அரசியல் முனைப்படைந்த போது தான், தமிழர்கள் ஆயுதம் ஏந்தும் போராட்டத்தை முன்னெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

அந்த 30 ஆண்டு  ஆயுதப் போராட்டம் அரசியல் உரிமை  கோரியதாக இருந்த போதும் பயங்கரவாதம் என பட்டம் சூட்டப்பட்டு சர்வதேச சக்திகளின் துணையுடன் ஒழிக்கப்பட்டது.

அதற்கான ஆதரவை சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொண்ட போது தமிழர்களுக்கு நீதியான, நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார்கள்.  அந்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

இப்படிப்பட்ட சூழலில், இப்போதைய அரசாங்கம் இனி இனவாதத்திற்கு இடமளியோம் என்ற வாக்குறுதியோடு ஆட்சிக்கு வந்து மக்களை கவர முனைகிறது. இனவாதத்துக்கு இடமளியோமென்ற வாக்குறுதியை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கமே இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமிழர் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறியிருந்தாலும், தமிழர்களின் இனப்பிரச்சினையை அவர் ஏற்றுக் கொண்டதில்லை.

தேர்தல் பிரசாரங்களின் போது, புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படும் என்று கூறினார். அந்தப் புதிய அரசியலமைப்பு 2016-2018வரையில் உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளில் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையை மையப்படுத்தியதாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

குறித்த அறிக்கையில் நாட்டின் தன்மை ஏக்கிய ராச்சிய என்று சிங்களத்திலும், ஒருமித்த நாடு என்று தமிழிலும், யுனைட்டட் நாடு என்று ஆங்கிலத்திலும் காணப்படுகின்றமையானது தற்போது வரையில் தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவொன்றாக உள்ளளது.

அதுவொருபுறமிருக்கையில் குறித்த புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் மாகாண சபைகளை இயங்கச் செய்வதாகவும் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து விட்டார்கள் என்பதால், இவையெல்லாம் தேவையற்ற வாக்குறுதிகளாக, தற்போது அவரே அவரது அரசாங்கமோ கருதி விட்டதோ தெரியவில்லை.

முற்போக்கான சிந்தனை கொண்ட ஒரு அரசாங்கம் தன்னை நிலைநிறுத்த வேண்டுமானால், எல்லா மக்களையும் அரவணைத்து செல்லுகின்ற வழிமுறைகளை கையாள வேண்டும்.

ஆனால் அநுரவின் அரசாங்கம் அப்படி ஒரு வழிமுறையை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருப்பதாக தெரியவில்லை.

ஏனென்றால், அவருடைய உரையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசிய இனப்பிரச்சினை பற்றி விடயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அதுபற்றிக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

இதேநேரம், சட்டம் மீதான மக்களின் நம்பிக்கை தகர்ந்து விட்டது என்பதும் அதனை மீளக் கட்டி எழுப்புவது அவசியம் என்பதும் ஜனாதிபதி அநுரகுமாரவின் உரையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

சர்ச்சைக்கு வழிவகுத்த குற்றங்கள், அதற்கு காரணமானவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு, அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால்,  தமிழர்களுக்கான நீதி என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதனை அவர் பகிரங்கமாக சுட்டிக் காட்டவில்லை.

போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொள்ளக் கொடுக்கும் கடப்பாடு அரசாங்கத்துக்கு இன்னமும் இருக்கிறது.

தேர்தல் பிரசாரங்களின் போது, போர்க்காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்படும் என்று ஜனாதிபதி கூறியிருந்தார்.

ஆனால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற உறுதி மொழியை அவர் கொடுத்திருக்கவில்லை.  இப்போதும் கூட அவ்வாறான ஒரு வாக்குறுதியை அவரது அக்கிராசன உரையில் காண முடியவில்லை.

இதுவும் கூட தமிழ் மக்களுக்கு பாரபட்சமான ஒரு விடயமாகவே காணப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி வடக்கில் வெற்றி பெற்றதை வைத்துக் கொண்டு, தமிழருக்கு பிரச்சினைகள் இல்லை, தீர்வுகள் தேவையில்லை,  அதிகாரங்கள் தேவையில்லை என்ற ரீதியாக செயற்பட தொடங்கினால், அரசாங்கம் ஆரம்ப கட்டத்திலேயே சறுக்கல்களைச் சந்திக்க தொடங்கும்.

அப்படி ஒரு நிலையை தவிர்க்கின்ற வகையில் தற்போதைய தனது ஆரம்பத்தினை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகின்றது. அதற்காக தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் பகிரங்கமான வெளிப்படுத்தல்களைச் செய்ய வேண்டியது அதன் கடமையாகின்றது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக இருந்தால் கூட அதனை ஆட்சிக்காலத்தின் முதலாவது ஆண்டுக்குள்ளேயே நிறைவுக்கு கொண்டு வர வேண்டும்.

அதுபற்றிய இணக்கப்பாடுகளை தமிழர்களுடன் விரைந்து ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால் காலம் செல்லச் செல்ல அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பு அலைகள் அதிகரிக்கலாம். எதிரணிகள் வலுவடையலாம்.

ஆகவே அரசாங்கம் வடக்கு,கிழக்கு,தெற்கு மேற்கு என்று பெற்றுக்கொண்டுள்ள பெரும்பான்மை பலத்தினை சரியாக பயன்படுத்த வேண்டியது மிகவும் முக்கிய பணியாகின்றது.

#அக்கிராசன உரை #அநுரகுமார திசாநாயக்க #தேசிய இனப்பிரச்சினை