பாராளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், இலங்கை,இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றது.
இலங்கையில் ஆட்சிமாற்றம் இடம்பெற்று, அநுரகுமார திசநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்துள்ள சொற்பகாலத்தில் நிலையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
எனினும்,இந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற போதிலும், முக்கியமான முடிவுகள் எதனையும் இந்தப் பேச்சுவார்த்தை கொண்டுவரவில்லை.
கடற்றொழிலாளர்களின் பிரச்சினை குறித்து விவாதிக்கவும், கடற்றொழிலாளர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இரு நாட்டு கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டத்தை விரைவில் நடத்தவும் இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டதுடன் கூட்டம் முடிவுக்கு வந்தது.
பிரச்சினைக்கான தீர்வு இதன் மூலம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அநுரகுமார அரசு இந்தப் பிரச்சினையை எவ்வாறு கையாளப் போகின்றது என்பதை எதிர்பார்த்தவர்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த இந்திய கடற்றொழிலாளர்கள் சமீபகாலத்தில் அதிகளவுக்குக் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இந்த கைது நடவடிக்கையின் போது இந்திய கடற்றொழிலாளர் ஒருவர் மரணமடைந்த நிகழ்வும் சில மாதங்களின் முன்னர் இடம்பெற்றது.
கைதான இந்திய கடற்றொழிலாளர்கள் மீது கடுமையான தண்டப் பணமும் அறவிடப்பட்டடிருந்தது. அவர்களுடைய படகுகள், மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தமிழகத்தில் ஒரு கிளர்ச்சியை இது ஏற்படுத்தியிருந்தது.
இலங்கை அரசாங்கத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக பேச்சுக்களை நடத்த வேண்டும் என்பதற்கான அழுத்தங்களும் பெருமளவுக்கு தமிழகத்திலிருந்து கொடுக்கப்பட்டன.
இலங்கை அரசாங்கத்துடன் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற அவசியம் இந்திய அரசுக்கு ஏற்பட்டமைக்கு இதுவும் ஒரு காரணம்.
இந்தப் பிரச்சினையை கையாள்வதற்கான கூட்டுக் குழு ஒன்று இருந்தாலும்கூட அதன் கூட்டம் அண்மைக் காலமாக இடம்பெறவில்லை. இந்த நிலையில்தான் கொழும்பில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
ஆழ்கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக இந்தியா, இலங்கை கூட்டுப் பணிக் குழுவின் இந்தக் கூட்டம் கொழும்பில் கடந்த வாரம் நடைபெற்றது. இது 6 ஆவது கூட்டம்.
இந்திய மீன்வளத் துறைச் செயலர் அபிலக்ஷ் லிகி தலைமையில், மத்திய மீன் வளம், வெளியுறவு அமைச்சகம், தமிழ்நாடு அரசு அதிகாரிகள், இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை, மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் இந்தப் பேச்சுக்களில் இடம் பெற்றிருந்தனர்.
இலங்கை கடற்றொழில்துறைச் செயலாளர் விக்கரமசிங்க தலைமையில், கடற்றொழில்துறை, வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள், இலங்கை கடற்படை, நீதித்துறை அதிகாரிகள் இலங்கை குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில், இரு நாட்டு கடற்றொழிலாளர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு, மனிதாபிமான முறையில் தீர்வுகாண்பது என்று இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
‘கடற்றொழிலாளர்களைத்; தாக்கி காயம் ஏற்படுத்துதல், உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தல் கூடாது. எந்த சூழ்நிலையிலும் பலத்தைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும்’ என்று இந்திய தரப்பு சார்பாக வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இரு தரப்பிலும் கடற்றொழிலாளர்கள் சார்பில் யாருமே கலந்து கொள்ளவில்லை. வடபகுதியில் உள்ள மீனவர் அமைப்புக்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளன.
‘மனிதாபிமான அடிப்படையில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் கூட உண்மையான பிரச்சனைககள் இந்த கூட்டத்தில் ஆராயப்படவில்லை’ என்று இலங்கை கடற்றொழிலாளர்கள் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக பல்வேறு விடயங்களையும் ஆய்வு செய்து வரும் பேராசிரியர் கலாநிதி. சூசை ஆனந்தன் முக்கிய சில விடயங்களை சுட்டிக்காட்டுகின்றார்.
முதுலாவதாக, இலங்கை கடற்றொழிலாளர்களுடைய பிரச்சினை தொடர்பாக குறித்த பேச்சவார்த்தையின்போது போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டுகின்றார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளைப் பயன்படுத்தி இலங்கை எல்லைக்குள் வந்து தொழில்புரிவது தான் மிகப்பெரிய பிரச்சஜினை என்று பேராசிரியர் சூசை ஆனந்தன் குறிப்பிடுகின்றார்.
‘தடை செய்யப்பட்ட இழுவை மடி வலைகளை இந்திய கடற்றொழிலாளர்கள் பயன்படுத்துகின்றார்கள். ஒற்றை மடி, இரட்டை மடி என்பவற்றை அவர்கள் பயன்படுத்துவதனால், வட பகுதியில் உள்ள கடல் வழங்கள் அழிக்கப்படுகின்றன’ என்று சுட்டிக்காட்டிய பேராசிரியர் சூசை ஆனந்தன், இந்த விடயம் தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் ஆராயப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
‘இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது இலங்கையில் தடை செய்யப்பட்டிருக்கின்றது. அந்தத் தடையை கடுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றும்’ என்றும் பேராசிரியர் சூசை ஆனந்தன் குறிப்பிடுகின்றார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் வாரத்தில் மூன்று தினங்களுக்கு பெருமெடுப்பில் இலங்கையின் வடபகுதிக் கடல் எல்லைக்குள் அத்துமீறி ஆக்கிரமிக்கின்றார்கள் என்றும் தெரிவித்த பேராசிரியர், இதனால் பெருமளவு மீன்வளம் அவர்களால் அபகரித்துச் செல்லப்படுவதாகவும், இது இலங்கையின் இறைமையை மீறும் ஒரு செயற்பாடு என்றும், ‘வடபகுதி மக்களின் வாழ்வாதாரம் மட்டுமன்றி இலங்கையின் தேசிய வருமானமும் இதனால் பெருமளவுக்கு இழக்கப்படுகின்றது’ என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.
‘வடபகுதியைப் பொறுத்தவரையில் சிறிய கடல் பிரதேசம்தான் எமக்குள்ளது. ஆழ் கடல் மீன்பிடியில் வடபகுதி கடற்றொழிலாளர்கள் ஈடுபடுவதில்லை. அதற்குத் தேவையான மீன்பிடிப் படகுகளோ அல்லது, அதற்கான துறைமுகங்களோ இங்கில்லை’ என்பதையும் சுட்டிக்காட்டிய பேராசிரியர், இந்திய கடற்றொழிலாளர்கள் ஆக்கிரமிக்கும் தினங்களில் வடபகுதி கடற்றொழிலாளர்கள் அச்சம் காரணமாக கடற்றொழிலுக்குச் செல்ல முடியாத நிலை இருப்பதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, ‘இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல் எல்லை குறித்த உடன்படிக்கை ஒன்று உள்ளது’ என்று சுட்டிக்காட்டும் கொழும்பு பல்கலைக்கழக சட்டவதேச சட்டம் குறித்த சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம்.ஹக்கீம், ‘ஆயிரக்கணக்கான இந்தியப் படகுகள் இலங்கைக் கடல் எல்லைக்குள் பிரவேசிப்பதன்மூலமாக இந்த உடன்படிக்கை மீறப்படுகின்றது’ என்றும் குறிப்பிடுகின்றார்.
தமிழக மற்றும் இந்திய அரசுகள் இந்தப் படகுகளின் ஆக்கிரமிப்புக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் வலியுறுத்தும் அவர், வடபகுதியைப் பொறுத்தவரையில் மன்னார், வலிகாமம், வடமராட்சி, நெடுந்தீவு, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் இந்திய கடற்றொழிலாளர்கள் ஆக்கிரமிப்பை அதிகளவுக்குக் காணக்கூடியதாக இருக்கின்றது.
வாரத்தில் மூன்று தினங்களுக்கு நூற்றுக்கணக்கான படகுகளில் அவர்கள் ஆக்கிரமிக்கும் தினங்களில் எமது கடற்றொழிலாளர்கள் கடலுக்குள் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக வடபகுதி மீனவ அமைப்பின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
வடபகுதியில் சுமார் 50 ஆயிரம் கடற்றொழிலாளர்கள் குடும்பங்கள் இருக்கின்றன. அதாவது சுமார் மூன்று இலட்சம் பேர் இந்தத் தொழிலை நம்பி வாழ்கின்றார்கள். வடக்கில் சுமார்150 கடற்றொழில் கிராமங்கள் இருக்கின்றன.
போர் முடிவுக்கு வந்த பின்னர் இந்தக் கிராமங்களில் சொல்லக்கூடியளவுக்கு எந்தவிதமான முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. போரின் பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு முன்னதாகவே இந்தப் பிரச்சினை அவர்களுடைய வாழ்க்கையைத் தாக்கத் தொடங்கியிருக்கின்றது.
அதனைவிட, வடபகுதி மக்களின் பிரதான உணவுகளில் கடலுணவுகள் முக்கிய இடம்பெறுகின்றன. வாரத்தில் மூன்று தினங்கள் கடலில் இறங்க முடியாத நிலையில் கடற்றொழிலாளர்கள் இருப்பதால், கடலுணவுகளின் வழங்கல் குறைவடைந்து அவற்றின் விலைகளும் அதிகமாகவே உள்ளது. தற்போதைய பொருளாதார நிலையில், மக்களுக்கு இது பெரும் சுமையாகத்தான் இருக்கின்றது.
வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகக் கொடுத்துவந்த அழுத்தங்களையடுத்து, அத்துமீறி வட கடல் எல்லைக்குள் பிரவேசித்த இந்திய கடற்றொழிலாளர்கள் பலர் கடந்த சில மாத காலமாக கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடைய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற இந்தக் கைதுகள், தேர்தலில் வடபகுதி மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு உபாயம் என இந்தியத் தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது.
இரு நாட்டு கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தற்போது முற்றுமுழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியத் தரப்பினரும் தமது அரசியல் நோக்கங்களுக்காக இதனைப் பயன்படுத்துகின்றார்கள்.
ஆனால், சுமார் 50 ஆயிரம் கடற்றொழிலாளர்கள் குடும்பங்கள் வடக்கில் உள்ள நிலையிலும் எமது தமிழ் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் தொடர்ந்தும் மௌனமாகவே இருக்கின்றார்கள்.
விகாரைகள் அமைக்கப்படும் போதும், காணிகள் ஆக்கிரமிக்கப்படும் போதும் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தும் தமிழ் அரசியல் தலைவர்கள் வடபகுதி மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் தொடர்ந்தும் மௌனமாகவே இருக்கின்றார்கள். அந்த மௌனத்திலும் ஒரு ‘அரசியல்’ இருக்கின்றது. அது இந்தியாவைப் பகைத்துவிடக்கூடாது என்பதாகும்.