அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 3ஆம் திகதி கொழும்புக்கு பயணம் மேற்கொண்டு அவருடன் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.
இலங்கையில் நிகழும் ஆட்சி மாற்றங்கள் போது, இந்தியா புதிய ஆட்சியாளருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதும், புதிய ஆட்சியாளர்கள் இந்தியாவுடன் தொடர்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதும் சம்பிரதாயமான விடயமாகின்றது.
இந்திய எதிர்ப்பாளர் எனக் கருதப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவும் கூட பதவியேற்ற கையுடன் புதுடில்லிக்கே தனது முதல் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
சீன சார்பாளர் என அறியப்பட்ட அவர், பதவியில் இருந்த இரண்டரை ஆண்டுகளில், சீனாவிற்குப் பயணம் மேற்கொள்ளவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கவொரு விடயம்.
தற்போதைய நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்புக்கு மேற்கொண்ட அவசர விஜயம் ஆச்சரியமானது அல்ல.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் விஜயம் மரபுரீதியாக பின்பற்றப்படும் ஒரு விடயம் தான். அவ்வாறு விஜயத்தை மேற்கொண்டவர் ஜனாதிபதி அநுரகுமாரவை விரைவில் புதுடில்லிக்கு வருகை தருமாறு உத்தியோக பூர்வமான அழைப்பினை விடுத்துவிட்டச் சென்றிருக்கின்றார்.
எனினும் ஜனாதிபதி அநுரவின் பயணம் உடனடியாக நடக்காது போனாலும், பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், நடைபெறவுள்ள அவரது முதலாவது பயணம் டில்லிக்காகத்தான் இருக்கப்போகின்றது.
ஏனென்றால், இந்தியா, அநுர தலைமையிலான அரசாங்கம் ஆகிய இரண்டு தரப்புகளுக்கும் இடையில் பொதுவான ஒரு பொதுப்பிரச்சினை இருக்கிறது. அந்த பிரச்சினை தான், குறித்த இரண்டு தரப்புகளையும் இணைக்கும் பாலமாக காணப்படுகிறது.
இலங்கையில், இந்தியா தனது செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், அதனை நீடித்து நிலைத்திருக்க செய்வதற்கும் தேவை உள்ளது. பிராந்திய அரசியல் மற்றும் பூகோள அரசியல் சார்ந்த விடயங்களிலும் சரி, பாதுகாப்பு சார்ந்த விடயங்களிலும் சரி, இலங்கையை அதிகம் தங்கியிருக்கிறது இந்தியா.
ஏற்கனவே மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் ஏற்பட்டிருக்கின்ற ஆட்சி மாற்றங்கள், இந்தியாவுக்கு சாதகமற்றவையாக இருக்கின்ற நிலையில், இலங்கையின் ஆட்சி மாற்றத்தை தமக்கு சாதகமானதாக மாற்றிக் கொள்வதற்கு புதுடில்லி மிகக் கடுமையாக முயற்சிக்கிறது என்பது பகிரங்பமானதொரு விடயமாகும்.
ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம், இன்னும் சில வாரங்களில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளப் போகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று, நாட்டை ஆட்சி செய்வதற்கான முழுமையான மக்கள் ஆணையை பெற்றுக் கொள்வது அதற்கு முக்கியமான தேவையாக உள்ளது. இந்தச் சூழலில் இந்தியாவுடன் எந்த விதமான முரண்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு அநுகுமார அரசாங்கம் தயாராக இல்லை.
அநுரகுமார ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், தேர்தல் பிரசாரங்களில் உரையாற்றும்போது, மன்னாரில் அதானி குழுமத்தினால், திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டம் இரத்து செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.
ஆட்சிக்கு வந்த பின்னர் அவர், அது பற்றி எதையும் கூறவில்லை. ஆனால், முன்னெடுக்கப்படும் இந்திய – இலங்கை கூட்டுத் திட்டங்கள் அனைத்தும் மீளாய்வு செய்யப்படும் என்று அவர் தற்போது அறிவித்திருக்கிறார்.
அது காலப்போக்கில் நடக்கக் கூடியது என்றாலும், உடனடி செயற்பாடாக அது இருக்காது என்றே தெரிகிறது. பாரா ளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்னர் எந்தவிதமான குழப்பங்களும், உருவாக்குவதற்கு இடமளிக்க அரசாங்கம் தயாராக இல்லை.
‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்ற ரீதியில் இந்தியத் திட்டங்களை மீளாய்வு செய்வது , இரத்து செய்வது போன்ற காரியங்களில் இறங்கினால் இந்தியாவை பகைத்துக் கொள்ள நேரிடும் என்பது அநுரவுக்கு நன்கு தெரியும்.
2015ஆம் ஆண்டு, மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது வருகைக்கு முன்னதாக, சீனாவின் முதலீட்டிலான கொழும்பு துறைமுக நகர திட்டத்தை இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தார் மைத்திரிபால சிறிசேன.
அவரது அந்த முடிவு சீனாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. தனது பொருளாதார பலத்தைப் பயன்படுத்தி மைத்திரி அரசாங்கத்துக்கு சீனா கொடுத்த அழுத்தங்களால், ஆறு மாதங்களுக்கு பின்னர் அந்தத் திட்டத்தை தொடருவதற்கு மைத்திரிபால சிறிசேன அனுமதி கொடுத்தார்.
இலங்கைக்கு அதுவொரு பாடமாக அமைந்தது. அந்தப் பாடத்தை அநுரகுமார திசாநாயக்கவும் நிச்சயமாக மனதில் நிறுத்திக் கொள்ளமளவுக்குப் படித்திருப்பார். எனவே, அதுபோன்ற ஒரு நகர்வை இந்தியா விடயத்தில் முன்னெடுப்பதற்கு இடமளிக்கும் வகையில் நிச்சயம் செயற்பட மாட்டார்.
இந்தியா தொடர்பாக திடீரென எடுக்கின்ற எந்த முடிவும், பலமான எதிர்வினைகளை ஏற்படுத்தும். இலங்கைக்கு சிக்கலான சூழ்நிலைகளை உருவாக்கும் என்பதை அநுரகுமார நன்றாக அறிவார்.
அதற்காக அவர் இந்தியாவின் திட்டங்களை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வார் என்றோ- இந்தியாவின் தாளத்துக்கு ஆடுவார் என்றோ கொள்ள முடியாது. இந்தியா எவ்விதம் செயற்படுகிறதோ அதே இராஜதந்திரத்தை கையாளுவது தான் அநுரகுமார அரசாங்கத்தின் இப்போதைய தீர்மானமாகும்.
அநுரகுமார திசநாயக்க ஆட்சிக்கு வந்தவுடன், இந்தியா அவருடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உறவுகள், தொடர்புகள் எல்லாமே பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வாரம் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன், ஒரு சந்திப்பிற்கு சென்றிருந்தனர்.
அந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் நாங்கள் இயல்பான உறவுகளை பேணிக் கொள்வோம் என்று கூறியிருந்தார் இந்தியத் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்துடன் இந்தியா விரோதப் போக்குடன் செயற்படும் – ஏட்டிக்கு போட்டியாக நடந்து கொள்ளும், முரண்பட்டுக் கொள்ளம் என்று கற்பனை செய்து கொள்ளக் கூடாது என்பதை தெளிவுபடுத்தும் கருத்தாகவே உயர்ஸ்தானிகரின் வெளிப்படுத்தலை கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன், இலங்கையின் ‘மார்க்சிஸ்ட் ஜனாதிபதி’ இந்தியாவுடன் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறார் என்ற கேள்விகள், சந்தேகங்கள் சர்வதேச அளவில் எழுப்பப்பட்டன. இப்போது அந்தக் கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.
தேசிய மக்கள் சக்தியுடன் அரசாங்கத்துடன் இந்தியா இணங்கிப் போக தயாராக இருக்கிறது. அதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான காலகட்டத்தில், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, புதிய ஜனாதிபதி அநுரகுமார , பிரதமர் கலாநிதி ஹரணி அமசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை மாறிமாறி சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்புகள் இருதரப்பு உறவுகளில் உள்ள இடைவெளியை நீக்குவதற்கும், பரஸ்பரம் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கும், எதிர்காலத்தில் சவால்களை எதிர்கொள்வதற்குமான மிகப்பெரியதொரு நகர்வாகவே பார்க்க வேண்டியுள்ளது.
அநுரகுமார பதவிக்கு வந்த பின்னர், அவருடன் இந்தியா போதுமான தொடர்பாடலை பேணிக் கொள்கிறது. சீனா தொடர்பான சில குறிக்கீடுகள் இருந்தாலும், அதை தாண்டி இந்தியா செயற்படுகிறது.
இந்தியாவின் இந்த அணுகுமுறை அநுரகுமார அரசாங்கத்திற்கும் சங்கடங்களை ஏற்படுத்தவில்லை. இரண்டு தரப்புமே, ‘சாட்சிக்காரனை விட சண்டைக்காரனை’ நம்புகின்ற நிலைக்கு வந்து விட்டன. அவர்களுக்கு இடையில் காணப்படுகின்ற இத்தகைய ஒத்த இயல்பு தான் அவர்களை பிணைத்து வைத்திருக்கிறது.
இப்போதைக்கு சீன சார்பு தன்மையை வெளிப்படுத்துவதோ இந்தியாவுக்கு எதிர்ப்புக் காட்டுவதோ புதிய அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும்.
அதனால், அரசாங்கம் முடிந்தவரைக்கும் நடுநிலையான போக்கில் செயற்படுவதாக காண்பிக்க முனையும். இந்த நிலை இருக்கும் வரை, இந்தியாவுக்கு சிக்கல்களை ஏற்படுத்தாது.
அதனை உறுதி செய்யும் வகையில் தான், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின பயணம் அமைந்திருக்கிறது. பிராந்திய அரசியலில் இந்தியா ஒரு புதிய அணுகுமுறையை கடைப்பிடிக்க தயாராகியுள்ளது.
மாலைதீவின் அரசாங்கத்துடன் அது எப்படி மெல்ல மெல்ல இறங்கி போகத் தொடங்கி இருக்கிறதோ, அதேபோலத்தான் இலங்கை அரசாங்கத்துடனும் இந்தியா நடந்து கொள்ளப் போகிறது.
அதேநேரம், அநுரகுமார அரசாங்கமும் தீப்பற்றி எரியும் விடயமான இந்திய, இலங்கை மீனவர் விடயத்தினை இலாவகமாக கையாண்டுள்ளது. தேர்தல் காலத்தில் இலங்கை கடல்வளங்களை சூறையாடுவதற்கு இடமளிக்க முடியாது என்று அறைகூவல் விடுத்தாலும், ஜெய்சங்கரின் விஜயத்தின் போது 50இந்திய மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்து நல்லெண்ணக்க சமிக்ஞையை காண்பித்துள்ளது.
அத்தோடு ஜெய்சங்கர் வலியுறுத்திய இந்திய, இலங்கை மீனவ சங்கங்கள், மீனவர்களை உள்ளடக்கிய கூட்டுப்பணிக்குழு கூட்டத்தினை நடத்தும் செயற்பாடடிற்கும் எதிர்ப்பினை தெரிவித்திருக்கவில்லை.
அதுமட்டுமன்றி, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இலங்கையின் ஆட்புலத்தினை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாதென ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தியிருந்தார். இந்தக் கருத்தினை இவர் தனது டில்லிக்கான விஜயத்தின் போதும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகின்றது.
இதேநேரம், 13ஆவது திருத்தச்சட்டம், மாகாண சபை முறைமை திரைமறைவில் எதிர்த்து நிற்கின்ற ஜே.வி.பி இனப்பிரச்சினை சார்ந்த விவகாரங்கள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் இலங்கையின் ஒற்றுமை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணுகின்ற அதேவேளை தமிழ் மக்கள் உள்ளிட்ட சகல சமூகங்களினதும் சமத்துவம், நீதி, கௌரவம், சமாதானம் ஆகியவற்றுக்கான அபிலாஷைகளுக்கான இந்தியாவின் ஆதரவினை வெளியுறவுத் துறை அமைச்சர் மீள வலியுறுத்தியபோது அநுரகுமார ஏற்றுக்கொள்ளும் சமிக்ஞையையே வெளிப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமன்றி, தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைதல் என்றஇலக்கை எட்டுவதற்கு இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாகவும் வினைத்திறன் மிக்கவகையிலும் அமுல்படுத்துதல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை முற்கூட்டியே நடத்துதல் ஆகியவை வழிசமைக்கும் என்ற கூற்றையும் அநுர தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே, அநுர அரசாங்கத்தின் இந்தியா தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது என்ற சமிக்ஞைகளே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் அடுத்தகட்டத்தினை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளனது.